முரசொலி தலையங்கம் (30-11-2024)
குலத்தொழிலை ரத்து செய்யலாமா ?
‘திராவிட மாடல்’ ஆட்சியின் கொள்கை முடிவை மிக அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
“பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனைச் செயல்படுத்திட இயலாது” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். 1950 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் குலக் கல்வி முறையைக் கொண்டுவந்து -– அதன்மூலமாக மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து பதவியைவிட்டு விலகினார் இராஜாஜி. 75 ஆண்டுகள் கழித்து அதேபோன்றதொரு திட்டத்தை எடுத்து வருகிறார் பிரதமர் மோடி.
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4--–1-–2024 நாளன்று பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். மீண்டும் இதே போன்ற ஒரு கடிதத்தை ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு எழுதி உள்ளார்கள். இந்தத் திட்டத்தின் அநீதியான விளைவுகளைப் பட்டியலிட்டுக் காட்டி இருக்கிறார்.
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில்கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைத்தார் முதலமைச்சர் அவர்கள். “விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப் பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவிபெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்” என்று அக்குழு பரிந்துரை செய்தது. இதனை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசு சொல்லியது. ஆனால் ஒன்றிய அரசு இத்திருத்தத்தை ஏற்கவில்லை.
“பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது. இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்தக் கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்துக் கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இத்தகைய திட்டம், அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும்” என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
2023 ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து விட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஜாதித் தொழில் கொடியையும் ஏற்றி வைத்தார்.
‘குலத்தொழிலைச் செய்பவர்கள் தங்களது குடும்பத் தொழிலைத் தொடர்ந்து செய்தால் நிதி கொடுப்போம்’ என்று அறிவித்தார். அவர்களது பரம்பரைத் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலமாக குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. பரம்பரையாகத் தொழில் செய்பவர்களுக்குக் கடனுதவி வழங்கும் திட்டமாக இதனை அறிவித்தார்.
‘பரம்பரைத் தொழில் செய்பவர்கள்’ என்றால் அனைத்துத் தொழில்களையும் சொல்லி இருக்க வேண்டும். 18 தொழில்களைமட்டும் பிரித்துச் சொல்லி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருக்க வேண்டும். செருப்புத் தைப்பவர் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன் எனச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இந்தத் தொழிலாளி ஒருவர் தனது தொழிலை விரிவுபடுத்தி, வேறு ஒரு பொருளை தயாரித்தால் அவருக்கு நிதி உதவி கிடையாது. ‘பி.எம்.விஸ்வகர்மா’ என்ற திட்டத்தை 16.8.2023 அன்று அமைச்சரவையின் பொருளாதாரக் குழு ஏற்று 13 ஆயிரம் கோடி பணத்தையும் ஒதுக்கியது. 2023 முதல் 2028 வரை குலத் தொழில் செய்ய வாரிசுகளுக்கு அவர்களது குடும்பத்தினர் கற்றுக் கொடுப்பார்களாம்.
தச்சர், படகு தயாரிப்பாளர், கவசம் தயாரிப்பவர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, காலணி தயாரிப்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், பொம்மை தயாரிப்பவர், முடி திருத்துபவர், பூமாலை தொடுப்பவர், சலவைத் தொழிலாளர், தையலர், மீன்பிடி வலை தயாரிப்பவர் -ஆகியோருக்கு மானியத்தில் கடன் கொடுக்கும் திட்டம் இது.
இத்தொழிலாளர்க்கு, தொழிலுக்கு, தொழில் செய்பவருக்கான திட்டம் அல்ல இது. இத்தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து வர வேண்டும். இந்தத் தொழில் தவிர வேறு தொழிலுக்கு மாறக் கூடாது. இந்தத் தொழிலை திடீரென செய்யக் கூடாது. ‘பரம்பரை பரம்பரையாக’ என்றால், குறிப்பிட்ட சமூகத்தினர் செய்வது தானே இதுவரை வழக்கமாக இருந்துள்ளது. அவர்களையே செய்யக் கட்டாயப்படுத்தும் ‘ஜாதியை நிலைநிறுத்தும்’ திட்டம் தான் இது!
‘அவரவர் ஜாதிக் குலத் தொழிலை, பரம்பரைத் தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும்’ என்கிறது பா.ஜ.க. அரசு. ‘தொழிலைக் கற்றுத் தருகிறோம், அந்தத் தொழிலைத்தான் தொடர வேண்டும்’ என்ற திட்டத்துக்கு உள்ளாக, சாதியைக் கெட்டிப்படுத்தும் தந்திரம் இருக்கிறது. சாதியை வலிமைப்படுத்தவே திட்டம் போடுகிறார்கள்; பணமும் ஒதுக்குகிறார்கள்.
குலநீதி பேசும், வலியுறுத்தும் எண்ணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.