முரசொலி தலையங்கம் (09-10-2024)
மெரினாவும் மகாமகமும் !
எங்காவது பிணம் விழாதா, அதை வைத்து ஆட்சியைக் குறை சொல்ல வழிபிறக்காதா என்று அலையும் ஜென்மங்களும் இருக்கத் தான் செய்கின்றன. சென்னையில் நடைபெற்ற விமானப் படை சாசக நிகழ்வை நடத்தியது இந்திய விமானப் படை. இதற்கு அவர்கள் கேட்டதை விட அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது தமிழ்நாடு அரசு. திரண்ட கூட்டம் என்பது 15 லட்சம் பேருக்கு மேல். மிகக்கடுமையான வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
வெயில் காரணமாக ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன என்பதை மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். அக்டோபர் 6 ஆம் தேதி இருந்த வெயிலின் தாக்கம் குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்தாலே பதற்றம் ஏற்படுகிறது. “அக்டோபர் 6 ஆம் தேதியன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 °C ஆகும். வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்ததிற்கு முக்கிய காரணம் Wet Bulb Temperature. அதாவது வெயிலுடன் அதீத ஈரப்பதமும் சேரும்பொழுது அது உடம்பில் வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதியன்று சென்னையின் வெப்பநிலை 34.3°C, காற்றின் ஈரப்பதம் 73% ஆகவும் இருந்துள்ளது. இதை வைத்துப் பார்த்தால் சென்னையில் wet bulb temperature 30.1°C ஆகும். 10 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி இருந்ததின் விளைவாக local Heat island effect காரணமாக மெரினா பகுதியின் வெப்பநிலை இன்னும் 2°C உயர்ந்து இருந்திருக்கலாம். Wet Bulb Temperature 32°C இருக்கும்போது ஆரோக்கியமான மனிதர்கள்கூட அந்த வெயிலை 6 மணி நேரம் மேல் தாங்க முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏற்கனவே உடல் பலவீனமானவார்கள் சில மணி நேரத்திலே சுருண்டு விழுந்திருக்கக் கூடும். மெரினாவில் இன்று நடந்திருக்கும் இந்த துன்ப நிகழ்வு நமக்கு Wet Bulb Temperature னால் வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கான எச்சரிக்கை மணி” - என்று சொல்லி இருக்கிறார்கள் ‘பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு. இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. 'அரசின் அலட்சியப் போக்கே காரணம்' என்று அவரது வழக்கமான வாய்ச் சவடாலை அடித்துள்ளார் அவர். இந்திய விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது.
தலைமைச் செயலாளர் தலைமையில் இரண்டு முறை ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கான மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தது. 40 ஆம்புலென்ஸ்கள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 65 மருத்துவர்களும், 100 படுக்கைகளும், 20 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் இருந்தது. சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு சுமார் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சொல்லி இருக்கிறார்.
வெயிலின் தாக்கம் காரணமாக அங்கேயே மரணமுற்றுள்ளார்கள் நால்வர். ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்துள்ளார். இதை வைத்து அரசியல் லாபம் தேடப் பார்க்கிறார் பழனிசாமி. கூட்ட நெரிசல் காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ இந்த உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதை பழனிசாமி உணர வேண்டும். நெரிசல் மரணத்துக்கும், அலட்சிய மரணத்துக்கும், அராஜக மரணத்துக்கும் ஆவண மரணத்துக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றில் சொல்லத்தக்க மரணங்கள் என்பவை மகாமக மரணங்கள் ஆகும். அம்மா ஜெயலலிதாவும் சின்னம்மா சசிகலாவும் லட்சக்கணக்கான மக்களை ஊருக்குள் உள்ளே விடாமல் காத்திருக்க வைத்து விட்டு ஒருவருக்கொருவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததன் காரணமாக 43 உயிர்கள் பலியானதை இன்னும் தமிழ்நாடு மறக்கவில்லை.
1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இத்தகைய கொடூரத்தை ஜெயலலிதா செய்தார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி தான் கும்பகோணம் மகாமகம். அதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தார்கள். அவர்களை ஒழுங்குபடுத்த காவல் துறை திணறிக் கொண்டிருந்தபோது ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்தார். அவர்களுக்காக தனியாக குளியல் அறை கட்டப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா வந்து நீராடும் வரை வேறு யாரும் நீராடக் கூடாது என்று தடை போடப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் தடையை உடைத்து உள்ளே வந்து நீராடத் தொடங்கியது.
தனக்கான தனியறையை பயன்படுத்தாமல் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து குளிக்க முடிவெடுத்தார் ஜெயலலிதா. உள்ளே வந்து நீராட முடிவெடுத்து, குளத்தின் மேற்கு பகுதிக்கு வருகிறார் ஜெயலலிதா. இதனால் எந்தப் பகுதிக்கும் செல்ல விடாமல் மக்கள் தடுக்கப்படுகிறார்கள். குளத்துக்குள் உள்ளே வந்தவர்களால் வெளியே எந்தப் பக்கமும் போக முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியவில்லை. வெளியில் இருப்பவர்கள் உள்ளே வர முடியவில்லை. மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள் மக்கள். இரண்டு மணி நேரமாக முதலமைச்சர் ஜெயலலிதா நீராடிய பின் வெளியே வந்தார். காவல் துறை தடியடியைத் தொடங்கி, மக்களை தாக்கத் தொடங்கியது. கூட்ட நெரிசலும், அ.தி.மு.க. போலீஸ் தாக்குதலும் காரணமாக அரசின் கணக்குப்படி 48 உயிர்கள் பலியானார்கள். தமிழ்நாடு வரலாற்றில் கருப்பு தினமாக இருக்கிறது மகாமகம் என்பதை மக்கள் மறக்கவில்லை.