முரசொலி தலையங்கம்

”ஒரு குகையில் தியானம் செய்பவன் சன்யாசி அல்ல” : விவேகானந்தர் வார்த்தையை சுட்டிகாட்டும் முரசொலி!

மனிதர்களுக்கு வெளி உதவி என்பது இல்லவே இல்லை. என்றும் இருந்ததில்லை.

”ஒரு குகையில் தியானம் செய்பவன் சன்யாசி அல்ல” : விவேகானந்தர் வார்த்தையை சுட்டிகாட்டும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (01-06-2024)

விவேகானந்தர் சொல்கிறார்....

( செய்தி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வந்துள்ளார்!)

“நான் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். இங்குள்ள எல்லாக் குகைகளையும் தேடியிருக்கிறேன். இமயமலையில் வசித்திருக்கிறேன். தங்கள் வாழ்நாள் முழுவதும் அங்கு வசித்த மக்களை எனக்குத் தெரியும். நான் என் நாட்டை நேசிக்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைவிட இழிந்த நிலையையும் பலவீனத்தையும் அடைவதை என்னால் பார்க்க முடியாது. ஆகையால் அனைவரும் உங்களுக்காகவும் உண்மைக்காகவும் நில்லுங்கள்.

இன்றைக்கு லட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை நினைத்து உருகுகிறீர்களா? லட்சக்கணக்கானவர்கள் காலம் காலமாக பட்டினியாக இருந்திருக்கிறார்களே, அதற்காக உள்ளம் துடிக்கிறீர்களா? அறியாமை நிறைந்தவர்கள் இந்த நாட்டின் மீது கரிய மேகம் போல் படர்ந்து வருகிறார்களே அதை எண்ணித் துடிக்கிறீர்களா? இது உங்களை அமைதியில்லாதவர்களாகவும், தூக்கமற்றவர்களாகவும் ஆக்குகிறதா? இந்தத் துயரம் உங்கள் ரத்தத்திற்குள் நுழைந்து ரத்தக் குழாய்க்குள் சுற்றிச் சுழன்று உங்களுடைய இதயத் துடிப்பாக மாறி இருக்கிறதா?

இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? இந்த மக்களின் இந்த அழிவு, துன்பம் பற்றி ஒரு நினைப்பால் மட்டுமே பீடிக்கப்பட்டு உங்கள் பெயர், புகழ், மனைவி, குழந்தைகள், சொத்து, உங்கள் உடம்புகளைக் கூட மறந்து விட்டீர்களா? இதை நீங்கள் செய்து விட்டீர்களா? இதுதான் நாட்டுப்பற்றுடையவனாவதற்கு முதற்படி.

உங்கள் கால்களில் ஊன்றி நின்று நன்மைக்காகவே நன்மை செய்யுங்கள். எல்லாவற்றையும் அன்போடு ஆதரிப்பதுதான் என் நோக்கம். என் உபதேசம், எதற்கும் பகை அல்ல, முரண்பாடு உடையதும் அல்ல. மனிதர்களுக்கு வெளி உதவி என்பது இல்லவே இல்லை. என்றும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இனி இருக்காது. மனிதர்களை விடத் தெய்வங்களின் எண்ணிக்கை மிகுதி என்றாலும் உதவி கிட்டாது.

இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே, ஒவ்வொரு மதமும் தனக்கென்று ஒரு கடவுளைப் படைத்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அந்தக் கடவுள், உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. உலகத்தைத் துறந்து, காட்டுக்குப் போய் உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை வருத்திக் கொண்டு, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகும் மனிதனுக்கும் ஆன்ம விடுதலை கிடைக்காது. இவை இரண்டும் இரண்டு துருவங்கள்.

உருவக் கடவுள் இருக்கும் வரை வேறு ஒரு கூட்டத்தார்கள் அவர்கள் இடத்தைப் பெற்று இன்னும் மோசமாக நடக்க நேரிடும். எனவே உருவக் கடவுளை வழிபடும் வரை புரோகிதர்களும் பூசாரிகளும் இருக்கும் வரை மதத்தின் பேரால் மக்களைச் சுரண்டுதலும் இதரக் கொடுமைகளும் இருந்தே தீரும். தினமும் தாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்களை உயர்த்தும் பணி இதோ நம்முன் இருக்கிறது.

நன்மை விளைய வேண்டுமானால், சடங்குகளை எல்லாம் தூர எறிந்து, உயிர்க் கடவுளை, மனிதக் கடவுளை வழிபடுங்கள். நைவேத்தியத்தை இறைவனுக்கு முன் பத்து நிமிடம் வைக்க வேண்டுமா, அரைமணி நேரம் வைக்க வேண்டுமா எனச் சிந்திப்பது செயலல்ல. பைத்தியமென்பதே அதன் பெயர். காசியிலும், பிருந்தாவனத்திலும் கோயிற் கதவுகளைப் பகல் முழுவதும் திறப்பது, மூடுவது என்னும் விளையாட்டிற்காக எத்தனையோ லட்ச ரூபாய்கள் செலவாகிவிட்டன. இப்போது பிரபு நீராடுகிறார், இப்போது திருவுணவு அருந்துகிறார், மறுபடியும் என்ன செய்வாரோ தெரியவில்லை. மனித தெய்வங்கள் கல்வியின்றிச் சாகும் போது இவையெல்லாம் நிகழ்கின்றன.

”ஒரு குகையில் தியானம் செய்பவன் சன்யாசி அல்ல” : விவேகானந்தர் வார்த்தையை சுட்டிகாட்டும் முரசொலி!

நம்முடைய தேசத்துப் பழங்காலக் கருத்துப்படி, சன்யாசியென்றால் ஒரு குகையில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்பவன் என்று பொருள். இது சரியல்ல. மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், தான் மாத்திரம் மோட்சமடைந்தால் போதுமென்று நினைப்பது தவறு. ஒருவன் மற்றவர்களுடைய மோட்சத்திற்காக உழைக்காமல், தான் மாத்திரம் மோட்சம் பெறமுடியாதென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உங்களுடைய வரலாறு, இலக்கியம், புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாமே காரணமில்லாமல் மக்களைப் பயமுறுத்துகின்றன. ‘நீங்கள் நரகத்திற்குப் போவீர்கள், நீங்கள் அழிந்து போவீர்கள்’ என்று அவை மனிதர்களைப் பார்த்துச் சொல்கின்றன. அதனால்தான் இந்த விதமான மந்த நிலை இந்தியாவின்

நாடி நரம்புகளுக்குள்ளே புகுந்து விட்டது. கடவுளிடம் நம்பிக்கையை விட தன்னம்பிக்கையே சிறந்தது. நாம் தன்னம்பிக்கையை இழந்து கொண்டே இருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜாதிக் கொடுமையும், அரசர் கொடுங்கோன்மையும், அன்னியர் அரசாட்சியும் உங்கள் பலத்தை எல்லாம் போக்கிவிட்டன. முதலில் இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும். நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்தாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் மிக எளிதாகச் செல்ல முடியும்.

இந்த வறுமையையும் அறியாமையையும் பார்த்து எனக்குத் தூக்கமே வரவில்லை. கன்னியாகுமரியில், அன்னை குமரியின் ஆலயத்தில் உட்கார்ந்த வண்ணம், பாரத நாட்டின் தென் கோடியிலுள்ள பாறை மீது அமர்ந்து சிந்தித்தேன். துறவிகளான நாம் இத்தனைபேர் சுற்றி வருகிறோமே! நாம் மக்களுக்குத் தத்துவ போதனை செய்வது சுத்த மடத்தனம். ‘காலி வயிறு தர்மோபதேசத்தை ஏற்காது’ என்று குருதேவர் கூறவில்லையா? இந்த ஏழைகள் மிருகங்களைப் போல வாழ்ந்து வருவது அறியாமையில்தான்.

இந்த நாட்டின் துயரமான நிலையும், அதன் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும்தான், நான் அவ்வாறு அமைதியாக இருக்கவிடாமல் செய்கின்றன. சமாதி முதலியனவெல்லாம் பயனற்றவையாகத் தோன்றுகின்றன. பிரம்ம லோகமும் அதன் இன்பங்களும் கூடச் சுவையற்றனவாக உள்ளன. நானோ ஒரு துறவி; நான் விரும்புவது ஒன்றுதான். விதவையின் சோகக் கண்ணீரைத் துடைக்கவும், அனாதையின் வாய்க்கு ஒரு பிடிச்சோறு கொண்டுவந்து கொடுக்கவும் முடியாத ஒரு சமயத்திலோ தெய்வத்திடமோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்தச் சிந்தனைகள் மடங்களிலும், படித்தவர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்யக் கூடிய தத்துவப் புத்தகங்களிலும், சில மதப்பிரிவினரின் ஏகபோக உரிமையாகவும் மட்டுமே இல்லாமல் உலகம் முழுவதும் பரவும்.

உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்ற உணர்வோடு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று நான் வற்புறுத்துகிறேன். சமயம், அன்பில்தான் வாழ்கிறது, சடங்கில் அல்ல.”

( குறிப்பு: இவை அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் ‘என் வாழ்வின் பணி’ என்ற நூலில் 69 –- 88 ஆகிய பக்கங்களில் உள்ளது)

banner

Related Stories

Related Stories