முரசொலி தலையங்கம்

'அக்னிபத்' : இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையே முடக்கிய பாஜகவின் மோசமான முடிவு... முரசொலி விமர்சனம் !

'அக்னிபத்' : இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையே முடக்கிய பாஜகவின் மோசமான முடிவு... முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (29:05:24)

அக்னிபத் ஆபத்து

பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட 'அக்னிபத்' திட்டம் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே எத்த- கைய அச்சுறுத்தலாக அமைந்து விட்டது என்ற செய்திகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கி இருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. அரசுக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது 'அக்னிபத்' திட்டம் ஆகும். 'இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுவோம்’ என்று ராகுல் காந்தி, அகிலேஷ், தேஜஸ்வீ ஆகியோர் பரப்புரை செய்து வருகிறார்கள். ’அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தையும் நாட்டையும் காக்க வேண்டும் என்று கனவு காணும் துணிச்சலான இளைஞர்களை அவமதிக்கும் செயலாகும். இது இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல, நரேந்திரமோடியின் அலுவலகத்தில் செய்யப்பட்ட திட்டம் ஆகும்.

அது ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. தியாகிகளை வித்தியாசமாக நடத்த முடியாது. இந்தியா கூட்டணி அரசு அமைந்த உடன், இந்த திட்டம் ரத்து செய்யப்படும். பழைய நிரந்தர ஆட்சேர்ப்பு முறையை அமல்படுத்துவோம்” என்று ராகுல் காந்தி பரப்புரை செய்து வருகிறார். இதற்கு அதிகப்படியான ஆதரவு வட மாநில இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து பல்டி அடித்து விட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ராணுவக் கட்டமைப்புக்கு நிரந்தரமான வீரர்களை அமர்த்தாமல் நான்காண்டு வேலையைப் போல அதனைச் சிதைத்தது பா.ஜ.க. ஆட்சி.ராணுவத்துக்கு வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் நான்காண்டு காலம் மட்டுமேபணியில் இருப்பார்கள் என்று ராணுவக் கட்டமைப்பை சிதைத்தது பா.ஜ.க.ஆட்சி. இதற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இரும்பு மனத்தோடு அசைந்து கொடுக்காமல் இருந்தது பா.ஜ.க. அரசு.

'அக்னிபத்' : இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையே முடக்கிய பாஜகவின் மோசமான முடிவு... முரசொலி விமர்சனம் !

கடந்த 2022 ஆம் ஆண்டு 'அக்னிபத்' திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இதன்படி பதினேழரை வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். அவ்வாறு சேர்க்கப்படுபவர்களில் 25 சதவிகிதம் பேருக்கு மட்டும்தான் தகுதி அடிப்படையில் முப்படைகளில் தொடர்ந்து பணியாற்ற பணி நீட்டிப்பு வழங்கப்படும். மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள். ராணுவ வீரர்களின் உளவியலை இது பாதிக்கும் செயல் ஆகும். நான்காண்டு காலத்தில் வேலை போய்விடும் என்ற பலவீனமான உணர்வுடன் இருப்பார்கள் ராணுவ வீரர்கள். ராணுவத்தில் பயிற்சி பெற்று வந்தவர்கள், அடுத்து வெளியில் வந்தபிறகு என்ன மாதிரியான வேலைகளைப் பார்க்க முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.

இதை எல்லாம் சுட்டிக் காட்டிய பிறகும் அதனை மறுபரிசீலனை செய்யவில்லை பா.ஜ.க. அரசு. இந்நிலையில் சிம்லாவில் பேசிய அமித்ஷா, “ அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 25 சதவிகித வீரர்களுக்கு 4 ஆண்டு பணிக்காலம் முடிந்ததும் நிரந்தரம் செய்யப்படுவார்கள். எஞ்சிய 75 சதவிகிதம் பேருக்கு மாநில அரசுத் துறைகள் மற்றும் துணை ராணுவப் படைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும்” என்று சொல்லி இருக்கிறார். அமித்ஷாவின் இந்த மனமாற்றம் அரசியல் பின் வாங்கல் ஆகும்.

அதேநேரத்தில் இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவலும் வெளியாகி உள்ளது. ராணுவத்தில் சேர முன்வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். இந்திய ராணுவத்தில் வீரர்களின் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும் இது இராணுவத்துக்கு கவலை ஏற்படுத்தி உள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

'அக்னிபத்' : இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையே முடக்கிய பாஜகவின் மோசமான முடிவு... முரசொலி விமர்சனம் !

“இந்திய ராணுவத்தில் வீரர்களின் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது ராணுவத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை உச்சத்தைத் தொடும். இந்தப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், ராணுவத்தில் மொத்தம் எத்தனை வீரர்கள் இருக்கவேண்டுமோ, அந்த எண்ணிக்கையை எட்ட 10 ஆண்டுகள் ஆகும்” என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன. 2026 ஆம்ஆண்டு வரை ராணுவத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆள்சேர்க்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதால், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சரிவது உள்பட எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளைக்களையும் வழிகளை பாதுகாப்புப் படைகள் இப்போது ஆராய்ந்து வருவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரர்களின் சதவிகிதத்தை 25ல் இருந்து 50 சதவிகிதமாக ஆக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 'அக்னிபத்' திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப் போவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அறிவித்துள்ளார். பா.ஜ.க. அரசின் மிக மோசமான முடிவு இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையே எந்தளவுக்கு முடக்கி இருக்கிறது என்பதை இதன் மூலமாக அறியலாம். ராணுவத்தில் சேர்வது என்பது பல இந்தியர்களின் கனவு ஆகும். அப்படிச் சேர்ந்தால் 15 முதல் 25 ஆண்டுகளை நாட்டுக்காக ஒப்படைத்து ராணுவ வீரர்களாக தலைநிமிர்ந்து அவர்கள் செயல்படுவார்கள். லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவைச் சிதைக்கும் வகையில் அதனை நான்காண்டுகளாக பா.ஜ.க. அரசு குறைத்தது.

நிரந்தரப் பணி என்பதை நான்காண்டு பணியாக ஆக்கியதும் ராணுவத்தில் சேர்வதற்கான ஆட்கள் குறைந்து போனார்கள். அரசின் முடிவுக்கு எதிராக வடமாநிலங்களில் இளைஞர்கள் போராடினார்கள். பல இடங்களில் அது வன்முறையாக மாறியது. 2022 சூன் 20 அன்று அக்னி- பத்' திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் என்ற பொதுவேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. வட இந்தியாவில் பாரத் பந்த் வெற்றி பெற்றது. ‘எங்களது முடிவு இன்று சரியானதாக இல்லை என்று சிலர் கருதலாம். ஆனால் காலப்போக்கில் இதுதான் தேசத்தை கட்டி எழுப்பும்' என்று பிரதமர் மோடி அப்போது சொன்னார். தேசத்தைக் கட்டி எழுப்பவில்லை, ராணுவத்தில் கீறல் விழ வைத்துள்ளது பா.ஜ.க. அரசின் முடிவு.

banner

Related Stories

Related Stories