முரசொலி தலையங்கம்

இதைக் கேட்க ஒரு மாதமா? : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி சரமாரி கேள்வி!

மோடியின் உரைகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.

இதைக் கேட்க ஒரு மாதமா? : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-05-2024)

இதைக் கேட்க ஒரு மாதமா?

சாதி, மத விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் கட்டளையிட்டுள்ளது. இதைக் கேட்க தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மாதம் ஆகி இருக்கிறது. ஏறத்தாழ தேர்தலே முடியப் போகும்போது தேர்தல் ஆணையம் ஒப்புக்கு ஒரு கடிதத்தை அனுப்பி தனது கடமை முடிந்துவிட்டதாகக் களைத்துப் போய் உட்கார்ந்துவிட்டது.

ஏப்ரல் 19 ஆம் தேதி முதலாம் கட்டத் தேர்தல் முடிந்த பிறகு, அது தனக்குச் சாதகமாக இல்லை என்று தெரிந்ததும், பிளவுவாத அரசியலைக் கையில் எடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இசுலாமியர்களை வெளிப்படையாகக் கண்டித்துப் பேசத் தொடங்கினார்.

ஏப்ரல் 21 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இசுலாமியர் வெறுப்புப் பேச்சை மோடி தொடங்கினார். ‘இப்படி பேசக் கூடாது’ என்று

மே 22 ஆம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்புகிறது. இப்படி ஒரு கடிதம் அனுப்புவதற்கே ஒரு மாதமா?

‘உங்கள் சொத்தை எடுத்து இசுலாமியருக்குக் கொடுத்து விடுவார்கள்’, ‘இசுலாமியர் வெளிநாட்டவர்’, ‘அதிகப் பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள்’, ‘உங்கள் நகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்’, ‘உங்கள் தாலியை எடுத்துக் கொடுத்து விடுவார்கள்’, ‘உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால் அதில் ஒன்றைப் பறித்து விடுவார்கள்’, ‘பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை இசுலாமியருக்குக் கொடுத்து விடுவார்கள்’, ‘காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும்’, என்பது போன்ற பீதியையும் பூச்சாண்டி வாக்குமூலங்களையும் தினந்தோறும் உதிர்த்துவரத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

வடக்கு - தெற்கு பிளவுவாத அரசியலை அதிகம் பேசினார். ‘உங்களைத் தமிழ்நாட்டில் கொச்சைப்படுத்துகிறார்கள்’ என்று உத்தரப்பிரதேசத்தில் போய் பேசினார். ‘புரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி, தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது’ என்று வாய்க்கு வந்ததைப் பேசினார்.

சாதிய வன்மம் – மதவாத வன்மம் - வடக்கு தெற்குப் பிரிவினை வாத வன்மம் ஆகியவை மட்டும்தான் மோடியின் பேச்சில் இருக்கிறது. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் பேசக் கூடாத பேச்சுக்கள். இதனை தேர்தல் ஆணையம் ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் இப்படிப் பேசினால், தனிப்பட்ட அந்த மனிதர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் விடுக்கும் தேர்தல் ஆணையம், மோடி என்றால் பதுங்கியது. ஏனென்றால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்தான் அவர்கள். எனவே, மோடிக்குக் கடிதம் அனுப்பவில்லை. பொத்தாம் பொதுவாக பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஐந்து கட்டத் தேர்தல் முடிந்துபோன பிறகு அரசியல் கட்சிகளுக்கு கண்டிப்புக் காட்டுவதைப் போல தேர்தல் ஆணையம் நடிக்கத் தொடங்கி இருக்கிறது.

‘இந்திய நாட்டின் சொத்துக்கள் இசுலாமியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவிடும்’ என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது என்று பொய் சொன்னார் மோடி. இதற்கு எதிராக ஏப்ரல் 24 ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் புகார் சொன்னது காங்கிரஸ் கட்சி. அப்படி தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, ‘இனி அப்படி பேசக் கூடாது’ என்று மோடிக்குக் கட்டளையிட்டு இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம். ஆனால் அதனைச் செய்யவில்லை.

எல்லா மாநிலங்களிலும் பேசி முடித்துவிட்டார் மோடி. அதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்புவதால் என்ன பயன்?

‘ஜாக்கிரதை, ஜாக்கிரதை, ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் இசுலாமிய வெறுப்பு வீடியோவை கர்நாடக பா.ஜ.க. பரப்பியது. அதற்கு எதிராக மே 6 ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. பலனில்லை.

இதைக் கேட்க ஒரு மாதமா? : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி சரமாரி கேள்வி!

தேர்தல் பரப்புரைகளின் போது சாதி மதம், ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக் கூடாது. ஆனால் அதைத்தான் மோடி செய்தார். செய்தும் வருகிறார்.

எந்தவொரு மதம் மற்றும் இனம், சமூகத்துக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசுவதும் அல்லது முழக்கங்கள் எழுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதைத் தான் மோடி செய்து வருகிறார்.

இவற்றைத் தட்டிக் கேட்காத ஆணையம், பா.ஜ.க.வின் எந்தச் செயல்பாடுகளையும் தட்டிக் கேட்கவில்லை. நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பல்கலைக் கழக மானியக் குழு நியமனம், உத்தரப்பிரதேச அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் போது அதில் மோடி படம் இடம்பெற்றது, தேர்தல் பரப்புரைகளில் ராமர் கோவில் படங்களைப் பயன்படுத்துவது, ராணுவத்தினர் படங்களைப் பயன்படுத்துவது, தேர்தல் பேரணியில் பங்கெடுத்த மோடி விமானப்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியது, ‘வளர்ந்த இந்தியா’ குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்புவது - இப்படி பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. இவை எதையும் தேர்தல் ஆணையம் கேள்விக்குள்ளாக்கவில்லை.

இவற்றை எல்லாம் தட்டிக் கேட்கவில்லை என்றதும்தான், ‘ராமர் கோவிலை இடித்துவிடுவார்கள்’ என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமாகப் போனார் மோடி. புல்டோசரை யோகி எப்படிப் பயன்படுத்தினார் என்பதை மோடி பேசுவது, யோகியைவிட மிக மோசமான செயல்பாடு ஆகும். பொறுப்புள்ள பதவியில் பத்தாண்டு காலம் இருந்தவர் ஒருவர் மனதில் இன்னமும் இடித்தல், ஒழித்தல், அழித்தல்தான் குடியிருக்கிறது என்றால் எத்தகைய கொடூரமான சூழலில் இந்தியா சிக்கி இருக்கிறது என்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை. இதை இந்தியா இனியும் தாங்காது.

மோடிகள் வருவார்கள், போவார்கள். இந்தியா நிரந்தரமானது. தேர்தல் ஆணையம் அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் கடமை தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அவர்கள் பார்க்க வேண்டிய ஒரே வேலையும் அதுதான்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1995 மற்றும் 123(3), 123( 3 ஏ), 125 ஆகிய பிரிவுகளை நேரடியாக மீறும் மோடியின் உரைகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.

banner

Related Stories

Related Stories