முரசொலி தலையங்கம்

“ஒரு தமிழர் என்பதால் மோடியின் வார்த்தை தடிக்கிறது” - தமிழர்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தங்களைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது. அதனால் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கே பிடிக்காமல் போகப் போகிறது.

“ஒரு தமிழர் என்பதால் மோடியின் வார்த்தை தடிக்கிறது” - தமிழர்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு முரசொலி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

எவ்வளவு பெரிய வன்மம்?

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களுக்குப் பக்கத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்திருந்தால், மோடி இப்படிப் பேசி இருப்பாரா?

‘புரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறைச் சாவி குஜராத்துக்குப் போய்விட்டது’ என்று மோடி பேசி இருப்பாரா? பேசமாட்டார். ஒரிசா முதலமைச்சருக்குப் பக்கத்தில் இருக்கும் வி.கே.பாண்டியன் ஒரு தமிழர் என்றதும், மோடியின் வார்த்தை தடிக்கிறது என்றால் இதுதான் தமிழர்கள் மீதும் - தமிழ்நாட்டின் மீதான வன்மம் ஆகும். மாபெரும் வன்மம் ஆகும்!

தமிழ்நாடு வாக்களிப்பது இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் இத்தகைய வன்மத்தைக் கக்குகிறார் மோடி. தமிழ் பற்றியும், தமிழ்நாடு பற்றியும் வள்ளுவரைப் பற்றியும் பாரதியார் பற்றியும் பேசியது எல்லாம் பொய்! பொய்யைத் தவிர வேறில்லை! ‘வஞ்சனை செய்வாரடி கிளியே - வாய்ச்சொல்லில் வீரரடி!’ - என்று இவரைப் போன்றவர்களை நினைத்துத்தான் அன்று பாரதியார் பாடி இருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்துக்குப் போய், ‘உங்களை எல்லாம் தமிழ்நாட்டில் கேவலப்படுத்துகிறார்கள்’ என்று பேசுவதும், ஒரிசாவுக்குப் போய், ‘உங்கள் பொக்கிஷ அறைச் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது’ என்று சொல்வதும் எத்தகைய மனநிலை? பா.ஜ.க.வின் வாட்ஸ் அப்பில் கூட இத்தகைய கேவலமான குற்றச்சாட்டுகளைப் பரப்ப மாட்டார்கள். ஆனால் மோடிதான் பேசிக் கொண்டு இருக்கிறார்.

“ஒரு தமிழர் என்பதால் மோடியின் வார்த்தை தடிக்கிறது” - தமிழர்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

கடந்த மாதம் வரையில் இதே நவீன் பட்நாயக் வீட்டு வாசலில் தான் பா.ஜ.க. தலைவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். மார்ச் மாதத்தில் தொடங்கி பா.ஜ.க.வுக்கும் பிஜூ ஜனதா தளத்துக்கும் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்தது. 19 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களும் மார்ச் 5 ஆம் தேதி ஒருசேரக் கலந்து கொண்டார்கள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரப்போகிறார் நவீன் என்று பா.ஜ.க.வினர் பெருமை பேசிக் கொண்டார்கள். ஆனால் இறுதியாக கூட்டணி உறுதியாகவில்லை. எனவே நவீன் பட்நாயக்கை மிக மோசமாக மோடியும் அமித்ஷாவும் விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள்.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இந்த முடிவுக்குக் காரணம் ஒரிசா முதல்வருக்கு மிக நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் என்பதுதான் மோடி, அமித்ஷாவின் கோபம் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வி.கே.பாண்டியன். ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ஒரு அதிகாரியாக மட்டும் அல்லாமல், அந்த மாநில மக்களுக்கு மிகமிக உண்மையாக இருந்து பணியாற்றிய அதிகாரி ஆவார். அதனால் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், வி.கே.பாண்டியனை தனது அருகில் வைத்துக் கொண்டார்.

பல்வேறு பொறுப்புகளை வகித்து ஒடிசா மாநிலத்தின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர் வி.கே.பாண்டியன். 2000 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்று 2023 வரை 23 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

2005 ஆம் ஆண்டு ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன் பெற்றார்கள். மயூர்பஞ்சில் அவர் செய்த பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். அதன்பிறகு இம்முறையை நாடு முழுவதும் பயன்படுத்தினார்கள். அப்போது ‘ஹெலன் கெல்லர்’ விருதையும் பெற்றார். நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான NREGS-க்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் இருந்து முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் 2023 வரை பதவியில் இருந்தார்.

“ஒரு தமிழர் என்பதால் மோடியின் வார்த்தை தடிக்கிறது” - தமிழர்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

2019 இல், அவர் 5T, (மாற்ற முயற்சிகள்) செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை வழங்க வழிவகுத்தார். பெண்கள் வட்டி இல்லாமல் 5 லட்சம் வரை கடன் பெறலாம் என்ற திட்டம் மக்கள் மத்தியில் நவீன் பட்நாயக்குக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.

உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்து, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. புரி ஜெகந்நாதர் கோவிலை பாரம்பரிய வழித்தடமாக மாற்றியதும் இவர்களது சாதனையாகும். இப்படி சமூக வலைத்தளங்களில் வி.கே.பாண்டியனின் சாதனைகள் வரிசைகட்டி வரத் தொடங்கி உள்ளது.

வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ஐ.ஏ.எஸ். அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர். அந்த மண்ணின் மகள்தான். 2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி தனது நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகி பிஜூ ஜனதாதளம் கட்சியில் வி.கே.பாண்டியன் இணைத்துக் கொண்டார். இது மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களுக்கும், பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. வயது மூப்பு போன்றவற்றின் மூலமாக நவீன் பட்நாயக்கை வீழ்த்த நினைத்த பா.ஜ.க.வின் பகல் கனவில் இடி விழ வைத்தது, வி.கே.பாண்டியனின் இந்த நடவடிக்கை. அதனால் ஒரு தனிமனிதருக்கு எதிரான தாக்குதலை ஒரு இனத்தின் மீதான தாக்குதலாக மோடி மாற்றினார்.

‘ஒரிசாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா?’ என்று கேட்கிறார் குஜராத் அமித்ஷா. இவர்தான் தமிழ்நாட்டுக்கு வந்து, ‘ஒரு தமிழர் பிரதமர் ஆக உறுதி எடுப்போம்’ என்று பேசியவர். ஒரு தமிழர், இன்னொரு மாநில முதலமைச்சருக்கு பக்கத்தில் இருப்பதுகூட அமித்ஷாக்களுக்கு பொறுக்கவில்லை. பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தங்களைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது. அதனால் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கே பிடிக்காமல் போகப் போகிறது.

banner

Related Stories

Related Stories