முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க. ஆட்சியில் பழிவாங்க மட்டுமே பயன்படும் அமலாக்கத்துறை...” - முரசொலி விமர்சனம்!

அமலாக்கத்துறை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறை பா.ஜ.க. ஆட்சியில் பழி வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

“பா.ஜ.க. ஆட்சியில் பழிவாங்க மட்டுமே பயன்படும் அமலாக்கத்துறை...” - முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமலாக்கத்துறை மீது விசாரணை!

அமலாக்கத்துறை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறை பா.ஜ.க. ஆட்சியில் பழி வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

"விசாரணையின்றி நீண்ட காலம் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைக்கக் கூடாது. சட்டபூர்வமான ஜாமீன் உரிமையை மறுக்கக் கூடாது. விசாரணையின்றி நீண்ட காலம் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைக்க முடியாது. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியாது. ஜாமீனை தடுப்பதற்காக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இருக்கக் கூடாது" - என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை.

மணல் குவாரி வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை தேவையின்றி தொந்தரவு தரக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் விற்பனை விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வர வேண்டும் என்றும் என்று சில மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. விசாரணைக்காக சென்றவர்களை காக்க வைத்தும், விசாரணை நடைபெறும் இடத்தை மாற்றியும் அலைக்கழித்தது அமலாக்கத்துறை.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார்கள். *மணல் குவாரி வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் மாவட்ட கலெக்டர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. கலெக்டர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன" என்று நீதிபதிகள் கண்டித்தார்கள்.

“பா.ஜ.க. ஆட்சியில் பழிவாங்க மட்டுமே பயன்படும் அமலாக்கத்துறை...” - முரசொலி விமர்சனம்!

தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 11 மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் தரவிடாமல் இழுத்தடித்து வருகிறது அமலாக்கத்துறை. 'செந்தில் பாலாஜியை பா.ஜ.க.வில் சேரச் சொல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள்' என்று அவரது வழக்கறிஞர் கபில்சிபல் சென்னை உயர்நீதி மன்றத்திலேயே வெளிப்படையாகச் சொன்னார். அதனையும் அமலாக்கத்துறை மறுக்கவில்லை.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தார்கள். கைதுக்கான எந்த ஆதாரமும் தரவில்லை. "டெல்லி கலால் கொள்கை வழக்கில் 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம். இதுவரை அமலாக்கத்துறையால் ஆதாரத்தை தர முடியவில்லை. இருந்தால்தானே தருவார்கள்?

"இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?" என்று நீதிபதிகள் கேட்டார்கள். பதில் சொல்ல முடியவில்லை அமலாக்கத்துறையால்.

"தேர்தல் நேரக்கில் எதற்காக கைது செய்தீர்கள்?” என்றும் நீதிபதிகள் கேட்டார்கள். அதற்கும் பதில் இல்லை.

“பா.ஜ.க. ஆட்சியில் பழிவாங்க மட்டுமே பயன்படும் அமலாக்கத்துறை...” - முரசொலி விமர்சனம்!

2022 ஆகஸ்ட் மாதம் பதிவான வழக்கில் 2024 மார்ச்சில் கைது செய்தார்கள். இதையும் உச்சநீதிமன்றம் கேள்வியாகக் கேட்டது. அதற்கும் பதில் தர அமலாக்கத்துறையால் முடியவில்லை. இப்படி கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டபிறகு மே 17 அன்று குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதற்கும், அந்தப் பணத்தை கோவா தேர்தலில் பயன்படுத்தியதற்கும் ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் எங்கே?' என்று நீதிமன்றம் கேட்கிறது. ஆனால் அந்த ஆதாரத்தை அமலாக்கத்துறை கொடுத்ததாகத் தெரியவில்லை. இவை அனைத்தும் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. ஆம் ஆத்மி இன்னொரு பகிரங்கமான குற்றச்சாட்டையும் வைத்தது. அதனை இன்னும் பா.ஜ.க. எதிர்கொள்ளவில்லை.

"மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும்" என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். "மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குனரிடம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்தல் நன்கொடை பத்திரத்தை பெற்றுள்ளது. ரூ.55 கோடி மதிப்பிலான பணத்தை பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கிய பின்னர் அரவிந்தோ ஃபார்மா இயக்குனர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ. 55 கோடி நன்கொடை பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் விளக்கம் அளிக்க வேண்டும். நட்டாவை கைது செய்ய வேண்டும். இது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கடந்த மார்ச் மாதம் கோரிக்கை வைத்தது ஆம் ஆத்மி கட்சி. இதுவரை பா.ஜ.க. வாயே திறக்கவில்லை.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "கடந்த 4 ஆண்டுகளில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகள் பல்வேறு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டதாகவும், இந்தச் சோதனைகளுக்குப் பிறகு 36 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாகவும்" சொல்லி இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு சார்பாக மாறி, நன்கொடை கொடுப்பவர்களை இதே விசாரணை அமைப்புகள் எப்படி தப்பவைக்கின்றன என்பதையும் பொதுவெளியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

"இத்தகைய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தியாக வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் செயல்பாடுகள் அனைத்தையும் விசாரணை நடத்த வேண்டும்" என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் அறிவித்துள்ளார். அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories