முரசொலி தலையங்கம்

“அவதூறு பரப்பி வக்ர அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்...” - எல்.முருகனுக்கு முரசொலி கண்டனம் !

வெறும், ‘பாரத் மாதாகீ ஜே’வை வைத்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய முடியாது என்பதை முருகன்கள் உணர வேண்டும்.

“அவதூறு பரப்பி வக்ர அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்...” - எல்.முருகனுக்கு முரசொலி கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வளர்ச்சியின் வடிவம் கிளாம்பாக்கம்

வளர்ச்சியின் வடிவமாக இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின்மீது அவதூறு பரப்பி தனது வக்ர அரசியலை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.

அழகானதும் – ஆக்கபூர்வமானதும் – பிரமாண்டமானதும் – - பிரமிக்க வைக்கத் தக்கதுமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பார்த்து பொதுமக்கள் அனைவரும் மலைத்துப் போய் நிற்கிறார்கள். சென்னையில் பன்னோக்கு மருத்துவமனையையும், மதுரையில் மாபெரும் நூலகத்தையும் அமைத்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் அமைத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், காலாகாலத்துக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் பேருந்து நிலையமாக அமையப் போகிறது; பொதுமக்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை பாரிமுனையில் நெரிசல் மிகுந்த பகுதியில் இருந்த பேருந்து நிலையத்தை மாற்றி - கோயம்பேட்டில் மாபெரும் பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இதனையே மாதிரியாகக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டார்கள். ஆனாலும் வேகமாக பணிகளைச் செய்யவுமில்லை, முழுமையான நிதியை ஒதுக்கவுமில்லை.

கழக ஆட்சி மலர்ந்ததற்குப் பிறகுதான் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளை விரைவுபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரான பி.கே.சேகர்பாபு, இதனை தனிக் கவனம் செலுத்தி உருவாக்கிக் காட்டி இருக்கிறார்.

“அவதூறு பரப்பி வக்ர அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்...” - எல்.முருகனுக்கு முரசொலி கண்டனம் !

393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பில் கிளாம்பாக்கத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்ல வசதியாக 215 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தலாம். இரு சக்கர, நான்கு சக்கர பேருந்து நிலையம் அமைக்க இரண்டடுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் உள்ளன. நாள்தோறும் சுத்தம் செய்ய இயந்திரத் துடைப்பான்கள் உள்ளன. குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உணவகங்கள், மருத்துவமனை, இலவச மருத்துவ மையங்கள், கழிவறைகள், குழந்தைகளுக்குப் பாலூட்டிட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயணச் சீட்டு வாங்க குறைந்தளவு உயரம் கொண்ட பயணச் சீட்டு பெறுமிடங்கள் இருக்கின்றன. அவர்களுக்காக சக்கர நாற்காலிகள், தனிக் கழிவறைகள் இருக்கின்றன. திருநங்கையர்க்கு தனி கழிவறை வசதி உள்ளது. பயணிகள் தங்குவதற்காக ஓய்வறைகள் இருக்கின்றன. 100 ஆண்கள், 40 பெண்கள், 340 ஓட்டுநர்கள் தங்க ஓய்வறைகள் உள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளேயே உள்ளது.

சென்னைக்குள் இருந்து கிளாம்பாக்கம் வர உள்ளூர் பேருந்துகளை நிறுத்த 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் மாநகரப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே வந்து இறங்கி, வெளியூர் பேருந்துகளைப் பிடிக்க பயணிகள் செல்வதற்காக சுரங்கப் பாதையுடன் கூடிய மின் தூக்கி சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 16 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீட்டர் தூரத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு வசதிகளோடுதான் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதனைத் திறந்து வைத்துள்ளார்.

பரந்து விரிந்துவரும் சென்னையின் வசதிக்கு ஏற்ப இது அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரை நோக்கி வரும் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். பயன்படுத்தியவர்கள் போற்றி வருகிறார்கள். இதுதான் ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

“அவதூறு பரப்பி வக்ர அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்...” - எல்.முருகனுக்கு முரசொலி கண்டனம் !

2015ஆம் ஆண்டு முதல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லி, வாயால் வடை சுட்டு வரும் கூட்டத்துக்கு மருத்துவமனையை, நூலகத்தை, பேருந்து நிலையத்தை மூன்றாண்டு காலத்துக்குள் மளமளவென எழுப்பும் முதலமைச்சரைப் பார்த்தால் பொறாமை வரத்தானே செய்யும்? அதனைத்தான் அறிக்கையாக விடுத்துள்ளார், ஒன்றிய அமைச்சர் முருகன்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டதுதான் இந்தப் பேருந்து நிலையம் என்பதை தி.மு.க. அரசு மறைக்கவில்லை. ‘நாங்கள்தான் திட்டமிட்டோம்’ என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 90 சதவிகிதப் பணிகள் முடிந்து விட்டதாக ஒன்றிய அமைச்சர் முருகன் சொல்வது, பச்சைப் பொய் ஆகும். 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி திட்டமிட்டது. 2021ஆம் ஆண்டு அந்தக் கட்சியின் ஆட்சி முடிந்தது.

9 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? 2013ஆம் ஆண்டு அறிவித்த அ.தி.மு.க. அரசு, 2018ஆம் ஆண்டு தான் ஒப்பந்தம் கோரியது. 2019ஆம் ஆண்டுதான் பணிகளைத் துவக்கியது. 2021 தி.மு.க. ஆட்சிக்கு வரும் வரை 30 விழுக்காடு பணிகள்தான் முடிந்திருந்தன. அமைச்சர் முருகன் சொன்னதைப் போல, 90 விழுக்காடு பணிகள் முடிந்திருந்தால் அன்றைய முதலமைச்சர் பழனிசாமியே திறந்து வைத்திருப்பாரே!

கழிவறைக் கூடத்திலும், சுடுகாட்டுக்குள்ளும் அம்மா மருத்துவ மனையை அவசர கதியில் திறந்து கணக்குக் காட்டியவராச்சே பழனிசாமி. அவரா 90 விழுக்காடு முடிந்த பேருந்து நிலையத்தை விட்டு வைப்பார்?

‘நாடாளுமன்றத் தேர்தலுக்காக உடனடியாகத் திறந்து விட்டார்கள்’ என்கிறார் அமைச்சர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக மதுரையில் ஒரு செங்கலை வைத்துவிட்டுப் போனார் பிரதமர் நரேந்திர மோடி. 2024 தேர்தல் வரப் போகிறது. செங்கல் களிமண்ணாச்சே தவிர, கட்டடம் ஆகவில்லை என்பதை மதுரைக்குப் போய் மாண்புமிகு முருகன் பார்க்க வேண்டும். “வெறும், ‘பாரத் மாதாகீ ஜே’வை வைத்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய முடியாது” என்பதை முருகன்கள் உணர வேண்டும்.

முரசொலி தலையங்கம்

06.01.2024

banner

Related Stories

Related Stories