முரசொலி தலையங்கம்

“எதுவும் புரியாமல் ‘பகுத்தறிவு’ என்றாலே பயப்படுகிறார்கள் சிலர்..” - முரசொலி தலையங்கம் !

“ஒரு காலத்தில் ஈ. வெ.ராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் - என்று சொல்லத்தக்க வகையில் இந்த நாடு முற்போக்காக மாற வேண்டும்” என்று சொன்னார் பெரியார்.

“எதுவும் புரியாமல் ‘பகுத்தறிவு’ என்றாலே பயப்படுகிறார்கள் சிலர்..” - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பெரியாரும் அறிவியலும்... மயில்சாமி அண்ணாதுரையும்...

“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி, என பெரியார் சொல்லியிருக்கிறார்.

பெரியாரின் கருத்துக்கள் அறிவியலோடு ஒத்துப்போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவு பயணத்திற்கு ஒன்றிப் போகிறது.

நான் இதற்கு முன்னர் பல செயற்கைக் கோள்களை செய்திருந்தாலும், சந்திரயான் எனும் செயற்கைக்கோள் தான் எனக்கு ஒரு முகவரியை கொடுத்தது. அடையாளத்தை கொடுத்தது. இதற்கு பின்புலத்தில் பெரியாரின் இந்த வார்த்தைகள்தான் இருக்கின்றன. இதுதான் என்னுள் விதையை விதைத்தது.

நிலவில் நீர் இல்லை என்று சாஸ்திரத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அதாவது, நான் சிறு வயதில் இருக்கும் போது மற்ற எல்லா குழந்தைகளை போலவே வானத்தை பார்த்து வளர்ந்தவன்தான். அப்போதெல்லாம் தெருவிளக்கு ஏதும் கிடையாது. எனவே நிலவை தெளிவாக பார்க்க முடியும். இந்த பிரபஞ்சம் பல பில்லியன் கோடி கி.மீ. தொலைவுக்கு பரந்து விரிந்து இருக்கையில், நிலவு நமக்கு மிகவும் பக்கத்தில்தான், வெறும் 3 லட்சம் கி.மீட்டரில்தான் இருக்கிறது.

“எதுவும் புரியாமல் ‘பகுத்தறிவு’ என்றாலே பயப்படுகிறார்கள் சிலர்..” - முரசொலி தலையங்கம் !

ஆக பூமியில் தண்ணீர் இருக்கும் போது நிலவில் மட்டும் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்கும்? என்று கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு திருவள்ளுவரின் கருத்தும் எனக்குள் ஊக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது, ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்று கூறியிருந்தார். பெரியாரும் திருக்குறளை தவிர வேறு எதையும் தமிழ் இலக்கியமாக ஏற்றுக் கொள்ள வில்லை.

இந்த கருத்துக்கள்தான் நான் விஞ்ஞானியாக பரிணமித்த போது நிலவில் நீரை கண்டுபிடிக்க உதவியது. அதாவது ரஷ்யாவும், அமெரிக்காவும் சென்ற பாதையில் செல்லாமல், வேறுபாதையில் நாங்கள் சந்திரயான்- -1 செயற்கைக்கோளை இயக்கினோம். அவர்கள் பின்பற்றியது ‘நிலவில் இறங்கு நீரை தேடு’ எனும் திட்டம். ஆனால் நாம் பின்பற்றியது ‘நீரை தேடு, பின்னர் நிலவில் இறங்கு’ எனும் திட்டம். எனவேதான் ரோவரை அனுப்பாமல் வெறும் செயற்கைக்கோளை மட்டும் அனுப்பினோம்.

இது நிலவை மேலிருந்து கீழாக சுற்றி வந்தது. மற்ற நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் நிலவை இடமிருந்து வலமாக சுற்றி வந்தது. மற்றவர்களை விட வித்தியாசமாக யோசித்ததால்தான் நம்மால் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது”

- இவை அனைத்தும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொன்னவை. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023, கடந்த 5 ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைதான் இப்படி பேசி இருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்கு பெரியாரின் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். பெரியாருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது.

“எதுவும் புரியாமல் ‘பகுத்தறிவு’ என்றாலே பயப்படுகிறார்கள் சிலர்..” - முரசொலி தலையங்கம் !

‘நானே சொன்னாலும் நம்பாதே. உனது புத்திக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள். இல்லாவிட்டால் விட்டுவிடு’ என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் இந்த சமூகத்தின் மனதில் விதைக்க நினைத்தது ‘நாத்திகம்’ என்று பலரும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். ‘அறிவியல் சிந்தனையை’த் தான் அவர் பரப்பினார். அறிவியல் மனப்பான்மையையே விதைத்தார். அனைத்தையும் கேள்வி கேள், விடை கண்டுபிடி என்பதுதான் அறிவியல் சிந்தனை ஆகும். தேடுதலின் இறுதியில், ஆய்வின் இறுதியில் சரியான ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான் அறிவியல் சிந்தனை ஆகும். வெறும் நம்பிக்கையை, கண்டுபிடிப்பாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார் பெரியார். பகுத்தறிவும் - அறிவியலும் ஒரே நேர்கோட்டில் உள்ளவை ஆகும். ‘அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு’ என்றார் பெரியார். இது புரியாமல், ‘பகுத்தறிவு’ என்றாலே பயப்படுகிறார்கள் சிலர். பகுத்தறிவு, ஒழுக்கம், சீர்திருத்தம், அறிவியல் மனப்பான்மை, சுயமரியாதை போன்ற சமூகவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அணுகி ஆராயும் தன்மையே பெரியாரியம் ஆகும்.

குழந்தை பிறப்பது வரம் என்று நினைக்கப்பட்ட காலத்தில், ‘இது வரமல்ல, டெஸ்டியூப்பில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்று 1944 ஆம் ஆண்டு பேசியவர் பெரியார். ஒரு திருமண வீட்டில் பெரியார் பேசியதைக் கேட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், இதனை அப்படியே ஒரு கட்டுரையாக எழுதுகிறார். அதுதான், ‘இனி வரும் உலகம்’ என்ற புத்தகம் ஆகும். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட் டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் அந்த உரையில் குறிப்பிட்டு இருப்பார் பெரியார். ‘உலகம் மாறிக் கொண்டே இருக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கும்’ என்பதுதான் அதன் உள்ளடக்கம் ஆகும்.

பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்தில் அவர்கள் செய்தது சரியாக இருக்கலாம். அவர்கள் காலத்தில் அவ்வளவுதான் முடிந்தது. ஆனால் இன்று மாறித்தான் ஆக வேண்டும்” என்றார் தந்தை பெரியார்.

இவை அனைத்தையும் விட உச்சத்துக்குப் போய் இன்னொன்றையும் சொன்னார் பெரியார். “ஒரு காலத்தில் ஈ. வெ.ராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் - என்று சொல்லத்தக்க வகையில் இந்த நாடு முற்போக்காக மாற வேண்டும்” என்று சொன்னார் பெரியார். அத்தகைய முற்போக்குச் சமுதாயமாக மாறுவோம்.

- முரசொலி தலையங்கம்

10.11.2023

banner

Related Stories

Related Stories