முரசொலி தலையங்கம்

மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி : பிரதமர் மோடிக்கு நினைவூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் - முரசொலி!

மாநிலங்கள் என்ற அடையாளங்களைச் சிதைக்க நினைக்கிறது பா.ஜ.க. இதன் மூலமாக மாநில மொழிகளை - பல்வேறு இனங்களை - பண்பாட்டு விழுமியங்களைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி : பிரதமர் மோடிக்கு நினைவூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (02-11-2023)

பிரதமருக்கு நினைவூட்டிய முதல்வர்

மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை முழக்கங்களில் ஒன்றாகும். ஆனால் மாநிலங்களில் சுயாட்சியையும், ஒன்றியத்தில் கூட்டாட்சித் தன்மையையும் பா.ஜ.க. சிதைத்து வருகிறது. நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான், மாநிலங்கள் சுயமாக இயங்க முடியும் என்ற கருத்தை ஓங்கி ஒலித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

SPEAKING FOR INDIA - என்ற தனது தொடரின் மூன்றாவது பதிவில் ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒலித்திருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திரமோடி அவர்கள் சொன்னதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவூட்டி இருக்கிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தான் சொன்னதை மோடி அவர்கள் மறந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

பிரதமராக நரேந்திரமோடி இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.12 ஆண்டுகள் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்படி இருந்தவர், பிரதமராக வந்ததும் மாநிலங்களை வலிமைப்படுத்தும் செயல்களைத் தான் செய்திருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பும் – வெற்றி பெற்ற பின்பும் மாநிலங்களை வலிமைப்படுத்துவேன் என்றுதான் சொன்னார். ஆனால் செய்யவில்லை.

“மாநிலங்களிடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையே சில குழுக்களை அமைத்து அவற்றில் பேசி தீர்வு காணலாம்” என்று சென்னையில் 2014 ஏப்ரல் 14 அன்று மோடி பேசினார். அதற்கான எந்த முயற்சியாவது எங்காவது எடுக்கப்பட்டுள்ளதா?

2014 ஏப்ரல் 19 அன்று கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ள மாநில அரசுகளை பழிவாங்க மாட்டேன். எந்த வகையிலும் மாநில அரசு பழிவாங்கப்படாது. என்னதான் அரசியல் வேறுபாடு இருந்தாலும், மத்திய மாநில உறவு சீர்குலைய இடம் தர மாட்டேன்” என்று பேசினார்.அப்படித்தான் நான் இதுவரை நடந்து வருகிறேன் என்று அவரால் சொல்ல முடியுமா?

2014 ஏப்ரல் 23 அன்று 'தினமணி' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்குமான திட்டமிடல் என்பது அகற்றப்பட்டு அந்தந்தப் பகுதிக்கு அது பற்றிய புரிந்துணர்வுள்ளவர் துணையோடு திட்டமிடுவதுதான் என் அணுகுமுறை” என்று குறிப்பிட்டார். இந்த நல்ல பிள்ளை வேஷம், பதவிக்கு வந்ததற்குப் பின்னால் எப்போதாவது நினைவுக்கு வந்ததா?

“கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவன் நான். மாநில உரிமைகளை மதிப்பதும் –- மாநிலங்களை ஒருங்கிணைத்துத் திட்டங்கள் தீட்டுவதும் -– எல்லாப் பிரச்சினைகளுக்கும் மாநில அரசுகள் டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றி அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலுவதும்தான் எனது அணுகுமுறையாக இருக்கும். மாநில முதலமைச்சராக நான் அடைந்திருக்கும் 12 ஆண்டு கால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால் மாநிலங்களின் பிரச்சினையும் எனக்குத் தெரியும். மத்திய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்” – என்று பேட்டி அளித்தார் மோடி.பிரதமர் ஆனதும் அப்படி நடந்து கொண்டாரா?

பிரதமராகப் பதவி ஏற்றதும் என்ன சொன்னார்? மாநில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை தருவேன் என்று சொன்னார். அப்படி ஏதாவது செய்யப்பட்டதா இல்லை.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது என்றால்... “நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தப் போகிறேன். நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சியைச் சார்ந்துள்ளது. எனவே மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு அக்கறையுடன் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பேன்” என்று பிரதமர் சொன்னதாக அறிவிக்கப்பட்டது. அப்படி நடந்து கொண்டாரா?

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள்?

* மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய அனைத்து மாநில அரசுகளுடனும் ஆலோசனை செய்வோம்.

* மாநில முதல்வர்களையும் சமமாகக் கருதி - தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்துவோம்

* மாநில அரசுகளுக்கு அதிக அளவில் நிதி அதிகாரங்களை வழங்குவோம்

* மாநிலப் பிரச்சினைகளுக்கு தொடர்புடைய மாநிலகளுக்கு இடையே கவுன்சில் அமைத்து தீர்வு காண்போம்.

இவை அனைத்தும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருப்பதுதான்.

இதனை வெளியிட்டு அன்றைய தினம் பேசிய நரேந்திரமோடி அவர்கள், “பிரதமர் ஆனால் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்” என்றார். அப்படித்தான் செயல்பட்டாரா? செயல்படுகிறாரா? விருப்பு வெறுப்பின்றி செயல்படுவதாக அவரால் சொல்ல முடியுமா?

மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி : பிரதமர் மோடிக்கு நினைவூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் - முரசொலி!

மாநிலங்கள் என்ற அடையாளங்களைச் சிதைக்க நினைக்கிறது பா.ஜ.க. இதன் மூலமாக மாநில மொழிகளை - பல்வேறு இனங்களை - பண்பாட்டு விழுமியங்களைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். இதைத் தடுத்தாக வேண்டும். மாநில சுயாட்சி என்ற கொள்கையைக் காப்பதற்குள்ளாக தமிழ் மொழிக் காப்பு - இன உரிமை – தமிழ்நாட்டு நலன் – தமிழர் பண்பாட்டுப் பெருமிதங்கள் ஆகிய அனைத்தும் அடங்கி இருக்கிறது. அதனால்தான் மாநில சுயாட்சிக் குரலை ஓங்கி ஒலிக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

“மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும் குறிப்பிடப்படாத மிச்ச அதிகாரங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி அவை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடுபடுவதுடன் அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறது” என்று 1967 ஆம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை கூறியது. அதனைச் செயல்படுத்த ‘இந்தியா’ கூட்டணியை பயன்படுத்த வேண்டும்.

1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் சட்டமாக மாற்றியாக வேண்டும். அதற்கான அறைகூவலைத்தான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories