முரசொலி தலையங்கம்

உடல் உறுப்பு தானம் : “உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்த முதலமைச்சரின் செயல்” - முரசொலி வரவேற்பு !

தமது உறுப்புகளை தந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் : “உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்த முதலமைச்சரின் செயல்” -  முரசொலி வரவேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'மனிதாபிமான மிகு' முதல்வர்

எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தானே செய்து காட்டுவதே மாபெரும் மானுடப் பண்பு. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டே உடல் தானம் செய்தவர் அன்றைய துணை முதலமைச்சர் - இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் விழாவுக்குச் சென்றிருந்தார்கள் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது மனைவி மரியாதைக்குரிய துர்கா அம்மையார் அவர்களும். இருவருமே அன்று உடல் தானம் வழங்கு வதற்கான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அப்போது மிகப்பெரிய பாராட்டும் வரவேற்பும் இணையர் இருவருக்கும் கிடைத்தது.

அன்றைய தினம் பேசிய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், “உடல் உறுப்புகளைத் தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாக புராணம் கூறுகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன” என்று குறிப்பிட்டார்கள்.

உடல் உறுப்பு தானம் : “உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்த முதலமைச்சரின் செயல்” -  முரசொலி வரவேற்பு !

“2008 செப்டம்பர் மாதம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை மருத்துவர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் அவர்களது வீட்டுக்குச் சென்று பாராட்டினேன். அவரது பெற்றோருக்குச் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி முதல்வர் கலைஞர் அவர்கள் சிறப்பித்தார்கள்.

அதே போல எல்.ஐ.சி. கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் மகள் சுகன்யாவுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது கண்கள், சிறுநீரகம் உள்பட 7 உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டன. இதுபோல திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் நிர்மல்குமாரின் இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், அகற்றப்பட்டு பலருக்குப் பொருத்தப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. உறுப்புகளை பலர் தானம் செய்ய முன் வந்தாலும் எப்படி வழங்குவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் பயன்படும்” என்றும் செய்திகளை அடுக்கினார்கள்.

உடல் உறுப்பு தானம் : “உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்த முதலமைச்சரின் செயல்” -  முரசொலி வரவேற்பு !

இந்த இயக்கம் அன்று முதல் உன்னிப்பாக கவனத்துக்குரியதாக ஆகியது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி மலர்ந்ததும், இதுபோன்ற உறுப்பு தானம் எண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டிவிட்டது.

டெல்லியில் நடந்த 13 ஆவது இந்திய உறுப்பு தான தின விழாவில், சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு விருதை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கினார். 2008 ஆம் ஆண்டு உறுப்பு தானம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கியதில் இருந்து, 1,706 நன்கொடையாளர்களிடம் இருந்து 6,249 முக்கிய உறுப்புகளை அரசு மீட்டெடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் உறுப்பு கொடை வழங்கியவர்களின் எண்ணிக்கை 313

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சக தரவரிசையில் மாநிலம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது. “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்போது கோரிக்கை வைத்திருந்தார்.

உடல் உறுப்பு தானம் : “உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்த முதலமைச்சரின் செயல்” -  முரசொலி வரவேற்பு !

இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க - மனிதாபிமான உத்தரவு ஒன்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். ‘உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்பதுதான் மனிதாபிமான மிகு அறிவிப்பாகும். “உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும், அவர்களது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

தமது உறுப்புகளைத் தந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்ற முதல்வரின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகிறார்கள்.

“தற்போது சிறுநீரகத்துக்காக 6,179 பேர், கல்லீரலுக்கு 449 பேர், இதயத்துக்கு 72 பேர், நுரையீரலுக்கு 60 பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 24 பேர், கணையத்துக்கு ஒருவர், கைகளுக்கு 26 பேர் காத்திருக்கின்றனர்” என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். முதலமைச்சரின் அறிவிப்பு உயிர்காக்கும் அறிவிப்பாக அமைந்திருக்கிறது.

- முரசொலி தலையங்கம்

28.9.2023

banner

Related Stories

Related Stories