முரசொலி தலையங்கம்

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு : ஐந்தாவது முறையும் ஏமாற்றம்.. பாஜகவின் கபட நாடகத்தை தோலுரித்த முரசொலி !

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு : ஐந்தாவது முறையும் ஏமாற்றம்.. பாஜகவின் கபட நாடகத்தை தோலுரித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தாலையங்கம் (23.9.2023)

பெண்களை ஏமாற்றிய பா.ஜ.க.

நாடாளுமன்ற –- சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றிவிட்டதாக பெருமை பொங்கச் சொல்லிக் கொள்கிறது பா.ஜ.க. ஆனால், அது உண்மையில் பா.ஜ.க.வின் கபட நாடகம்தான்!

அடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே 33 விழுக்காடு என்று சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை. 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 2024 ஆம் ஆண்டு மே மாதம் பதவியில் இருந்து இறங்கப் போகும் அவர்தான் 2029 ஆம் ஆண்டுக்கான ஆரூடத்தைச் சொல்கிறார்.

‘திவாலான வங்கியின் பின்தேதியிட்ட காசோலை இது’ என்று தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் நாடாளுமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார். ‘பேங்க்’ உதாரணம் சொன்னால்தான் பா.ஜ.க.வுக்குப் புரியும் என்பதால்; இந்த உதாரணத்தைச் சொல்லி இருக்கலாம்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிய வேண்டும். அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்கும். அந்த அரசு, புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவார்களாம். அதன் முடிவுகள் இறுதி செய்யப்படும். அதை வைத்து தொகுதி எல்லை வரையறைகள் செய்யும். அந்தத் தொகுதிகளில் எது பெண்களுக்கு என்பதை அப்புறமாக முடிவு செய்வார்கள். இதெல்லாம் நடக்க பத்து ஆண்டுகள் ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம்.

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு : ஐந்தாவது முறையும் ஏமாற்றம்.. பாஜகவின் கபட நாடகத்தை தோலுரித்த முரசொலி !

2021 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே இன்னும் நடத்தவில்லை. இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பே 2027 அல்லது 2028–ஆம் ஆண்டில் நடக்கலாம் என்று தகவல் சொல்கிறார்கள். இதுவும் அதிகாரப்பூர்வமாக அல்ல!

“பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்” என்று உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். புதிய சகாப்தம் என்பது பத்து ஆண்டுகளுக்குப் பின்னால்தான் தொடங்க இருக்கிறது. இப்போது என்னவாம்?

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. வந்ததும் ஏன் இதனைக் கொண்டு வரவில்லை? “2016-–ஆம் ஆண்டு மார்ச் 8–-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை – - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்து பெண் எம்.பி.கள் அனைவரும் சேர்ந்து இதற்காகக் குரல் கொடுத்தார்கள். ‘33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டுவரவில்லை என்பது இதன்மூலம் தெரியவில்லையா?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி உள்ள கேள்விக்கு பா.ஜ.க.வின் பதில் என்ன?

“சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்புச் சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100–-ல் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்?” என்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டார்களே, பா.ஜ.க.வின் பதில் என்ன?

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு : ஐந்தாவது முறையும் ஏமாற்றம்.. பாஜகவின் கபட நாடகத்தை தோலுரித்த முரசொலி !

2014--–ஆம் ஆண்டும், 2019–-ஆம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்றது பா.ஜ.க அரசு. நினைத்திருந்தால் அவர்கள் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.ஏன் செய்யவில்லை? ஆட்சி முடியும்போது ஏன் கொண்டு வருகிறார்கள்? நாம்தான் இனி வரப்போவதில்லையே என்பதாலா?

33 விழுக்காடு வழங்கும் சட்டத்தை இன்று கொண்டு வந்தாலும், அதனை எதிர்க்கும் ‘யோகி’களும் பா.ஜ.க.வுக்கு உள்ளே இருக்கத்தான் செய்கிறார்கள். ‘பெண்களைப் பாதுகாக்க வேண்டும், சுதந்திரம் தரக்கூடாது’ என்ற அரிய தத்துவம் சொன்னவர் யோகி ஆதித்யநாத். 2010 ஆம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடுச் சட்டத்தை எதிர்த்த பா.ஜ.க. உறுப்பினர்களில் அவர் முக்கியமானவர். 2014 ஆம் ஆண்டு தனது இணையத்தளத்திலும் எதிர்த்து எழுதி இருக்கிறார். ‘இத்தகைய சக்திகளால்தான் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்பது மாதிரியான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

33 விழுக்காடு வழங்கும் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ளன. அதேநேரத்தில் பா.ஜ.க.வின் கபட நாடகத்தை அனைத்துக் கட்சிகளும் கண்டித்தும் உள்ளன. விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள், ‘சட்டத்தை ஆதரிக்கிறோம். சட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் தடைகள் சட்டத்திலேயே உள்ளன. அதனை எடுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள். ‘2010 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது எந்த நிபந்தனையும் விதிக்கப் படவில்லை. நிறைவேற்றப்பட்டதும் அமலாகும் என்று சொல்லப்பட்டது. நீங்கள் நிபந்தனைகள்தான் அதிகம் போட்டுள்ளீர்கள்.’ என்று குற்றம் சாட்டினார் தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி. ‘2029 நடைமுறைக்கு வரும் இடஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது’ என்றும் அவர் சொன்னார்.

‘மகளிர் மசோதா என்று சொல்வதற்குப் பதிலாக மகளிர் இடஒதுக்கீடு மறுசீரமைப்பு என்றே சொல்ல வேண்டும்’ என்றார் திரிணாமூல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா. ‘பதவிக்காலம் முடியும் போது கொண்டு வருவதுதான் தந்திரம்’ என்றார் அகாலி தளம் ஹர்சிம்ரத் கவுர். எனவே, பா.ஜ.க.வின் கபடநாடகம் நாடாளுமன்றத்திலேயே பதிவாகி விட்டது.

“பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முன் வைப்பதற்கான ஐந்தாவது முயற்சி இதுவாகும். இந்த நாடாளுமன்றத்தால் பெண்கள் நான்குமுறை ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர்.

ஐந்தாவது முறையும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை!

banner

Related Stories

Related Stories