முரசொலி தலையங்கம்

நீட் தேர்வு.. 8 ஆண்டுகளில் 119 பேர் தற்கொலை; ரணகளமாய் மாறி இருக்கிறது ராஜஸ்தான் : முரசொலி வேதனை!

தமிழ்நாடு முதல் ராஜஸ்தானம் முதல் இறந்த உயிர்களின் மீது உறுதி எடுத்து நீட் தேர்வை அகற்றியே ஆக வேண்டும்.

நீட் தேர்வு.. 8 ஆண்டுகளில் 119 பேர் தற்கொலை; ரணகளமாய் மாறி இருக்கிறது ராஜஸ்தான் : முரசொலி வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-09-2023)

ராஜஸ்தானத்து ரணங்கள்

நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு தான் தவறான பிரச்சாரம் செய்கிறது என்றும்– மாணவர்கள் அதனால் தான் பலியாகிறார்கள் என்றும் - சிலர் திரும்பத் திரும்பப் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதோ இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரும் செய்திகள் அந்த மாநிலமும் ரணகளமாய் மாறி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துவந்த மாணவர்கள் – கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவரை 119 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை ராஜஸ்தான் மாநில அரசே வெளியிட்டு இருக்கிறது. சில தனியார் பயிற்சி நிறுவனங்களின் லாபத்துக்காக மட்டுமே இந்த நீட் தேர்வு பயன்படுகிறது என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்லி வந்தோம். நீட் தேர்வு எத்தகைய பலி பீடமாக இருக்கிறது என்பதை ராஜஸ்தான் மாநிலமும் சொல்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி. – ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இந்தியா முழுவதும் இருந்தும் மாணவர்கள் வந்து தங்கி பயிற்சி பெறுகிறார்கள்.தற்போது 2.25 லட்சம் பேர் கோட்டா நகர் பயிற்சி மையங்களில் பயில்கின்றனர். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் மையங்கள் அதிகம் இருப்பதால் இதனைத் தேடி பலரும் வந்துவிடுகிறார்கள். மனரீதியான நெருக்கடியை இவர்கள் எதிர்கொண்டு வருவது இப்போது முழுமையாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு 18 மாணவர்கள் –

2016 ஆம் ஆண்டில் 17 மாணவர்கள் –

2017 ஆம் ஆண்டில் 7 மாணவர்கள் –

2018 ஆம் ஆண்டு 20 மாணவர்கள் –

2019 - ஆம் ஆண்டு 15 மாணவர்கள் –

2022 ஆம் ஆண்டில் 15 மாணவர்கள் – தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இந்த பயிற்சி மையங்களில் படித்து வந்தவர்கள். இந்த ஆண்டில் தான் இதுவரை இல்லாத அளவு 25 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.ராஜஸ்தான் மாநில அரசு இது தொடர்பாக விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம், இந்த பயிற்சி மையங்கள் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

நீட் தேர்வு.. 8 ஆண்டுகளில் 119 பேர் தற்கொலை; ரணகளமாய் மாறி இருக்கிறது ராஜஸ்தான் : முரசொலி வேதனை!

ராஜஸ்தான் மாநில உயர்கல்வி செயலாளர் பவானி தேத்தா தலைமையில் 15 பேர் கொண்ட குழு - ஆகஸ்ட் 17 அன்று அமைக்கப்பட்டது. கோட்டாவில் அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலை ஆராய இது அமைக்கப்பட்டது.கோட்டாவில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கூட சேர்த்துள்ளதை இக்குழு கண்டுபிடித்துள்ளது. இப்பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்கள் படிக்க முடியாமல் வெளியேற நினைத்தால் அவர்களை வெளியேற இந்த பயிற்சி மையங்கள் விடுவது இல்லை என்பதையும் இக்குழு கண்டுபிடித்துள்ளது. எளிதாக வெளியேறுவதையும், அப்படி வெளியேற நினைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை உடனடியாக திரும்பத் தர வேண்டும் என்பதையும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கட்டாயப்படிப்பே மன அழுத்தம் ஏற்படுத்துகிறது, அந்த மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்றும் இக்குழு கூறியுள்ளது. மாணவர்கள் தங்கும் இடங்கள், அதன் உரிமையாளர்கள், விடுதி காப்பாளர்கள் ஆகிய அனைவரையும் கடுமையாக விசாரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்று இக்குழு கூறியுள்ளது. ஏழை நடுத்தர குடும்பத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருவதாக இந்த அறிக்கை சொல்கிறது.

நீட் பயிற்சி மையம் என்பது ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றும் இந்த ஆணையம் கூறியுள்ளது. சிலரின் சுயநலத்துக்காக - – அவர்கள் ஒன்றிய அரசின் உயரதிகார மையங்களை கையில் போட்டுக் கொண்டு நீட் தேர்வுக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

நீட் தேர்வு.. 8 ஆண்டுகளில் 119 பேர் தற்கொலை; ரணகளமாய் மாறி இருக்கிறது ராஜஸ்தான் : முரசொலி வேதனை!

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கருத்துச் சொல்லி இருந்தார். ''அரசின் கொள்கை சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றாலும் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை'' என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி பேசி இருந்தார்.

''நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்தவில்லை. மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும் அது குறிக்கிறது" என்று சொல்லி இருந்தார். வழக்குகள் மட்டுமல்ல மரணங்களும் நீட் தேர்வை அகற்றியே ஆகவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தமிழ்நாடு முதல் ராஜஸ்தானம் முதல் இறந்த உயிர்களின் மீது உறுதி எடுத்து நீட் தேர்வை அகற்றியே ஆக வேண்டும்.

banner

Related Stories

Related Stories