முரசொலி தலையங்கம்

பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே தேச விரோத சொல்லாக்கிவிட்டார்கள் - முரசொலி விமர்சனம் !

பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே தேச விரோத சொல்லாக்கிவிட்டார்கள் - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (8.9.2023)

பாரத்! அதாவது, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா!

இந்த நாட்டுக்கு பாரதம் என்று பெயர் வையுங்கள் என்று இதுவரை சொல்லிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதைச் செய்யப் போகிறார் பிரதமர். சில நாட்களுக்கு முன்னால் அசாம் மாநிலம் குவாஹாடியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத். அதில் அவர் பேசும் போது...

“இனி இந்தியாவை பழைய பெயரான ‘பாரத்’ என அழைக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக பாரத் என்றுதான் இந்தியா அழைக்கப்பட்டு வந்தது. இந்தியா என்று நாம் அழைப்பதை நிறுத்தினால்தான் மாற்றம் வரும். பாரத் என்று அழைத்து மற்றவர்களுக்கும் இதனை நாம் உணர்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரைப் பார்த்து ஏற்கனவே பீதி அடைந்து வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு, மோகன் பகவத் கோரிக்கை தேனாக இனித்தது. உடனே ‘பாரத்’ என்று சொல்லத் தொடங்கி விட்டார். டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நம்மை இந்தியாதானே அழைத்தது? பாரத் நாட்டுக்கு போகப் போகிறோமே?’ என்று வெளிநாட்டவர்களுக்கு குழப்பம் வரலாம்.

பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே தேச விரோத சொல்லாக்கிவிட்டார்கள் - முரசொலி விமர்சனம் !

‘பாரத்’ என்று சொல்லத் தொடங்கிய பிறகு பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லை தேச விரோதச் சொல்லைப் போலச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஒரு நாளிதழ் எழுதிய தலையங்கத்தில் ‘இந்தியா’ என்ற சொல்லை மென்று துப்பி இருக்கிறது. ‘தேசவிரோதத் தலையங்கம்’ என்று வழக்குப் போடலாம்! அந்தளவுக்கு குமட்டல் எடுக்கும் சொல்லாக ‘இந்தியா’ மாறிவிட்டது.

‘இந்தியா’ என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயராம். காலனி ஆதிக்கச் சொல்லாம். இதெல்லாம் இவர்களுக்கு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்துத்தான் தெரிகிறதா?

2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார் மோடி. பத்தாண்டு காலம் அவர்களுக்கு ‘இந்தியா’வின் வரலாறு தெரியவில்லையா? 1998 முதல் 2004 வரை ஆண்ட வாஜ்பாய்க்கு ‘இந்தியா’ என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று தெரியாமல் போனதே? எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறார் வாஜ்பாய்?!

இந்தியா என்பது நாடு அல்ல, ஒரு கண்டம் என்றும், பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிறார்கள் என்றும், மாநிலங்களின் ஒன்றியம் என்றும் திராவிட இயக்கம் சொல்லும் போதெல்லாம், ‘நாம் இந்தியர்கள் -–- இந்தியர்களுக்கு விரோதமாகப் பேசும் இவர்கள் ஆண்ட்டி இண்டியன்ஸ்’ என்று சொல்லி வந்தார்களே. இப்போது இவர்கள் ‘இந்தியனுக்கு’ எதிரான ஆண்ட்டி இண்டியன்ஸ் ஆகிவிட்டார்களே! இவர்களது தேசபக்தி திடீரென மாறியது ஏன்?

‘இந்தியா கூட்டணி பெயரை பாரத் என்று மாற்றிவிட்டால் அதையும் மாற்றிவிடுவார்களா?’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்பது நியாயம்தானே? பாரதம், பாரத தேசம், அகண்ட பாரதம் -– என்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிச்சொற்கள். பாரத் -– என்பதை பின்னர் ஹிந்துராஷ்டிரமாக ஆக்குவதே அவர்களது உள்ளீடு ஆகும். இதனை ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வால்கர் பலமுறை சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க.வின் தேசீய சீலர்கள் ‘இந்தியா’ என்ற சொல்லையே தேச விரோத சொல்லாக்கிவிட்டார்கள் - முரசொலி விமர்சனம் !

“பாரதத்தின் தேசிய வாழ்க்கை சிறப்பானது. அது வெளிநாட்டவர் வருவதற்கு முந்தைய காலத்திலேயே வேரூன்றியுள்ளது. இந்த பாரதிய தேசிய வாழ்க்கை என்பது என்ன?” என்று சொன்னவர் கோல்வால்கர். ‘பரந்து விரிந்த இந்த பாரத பூமி எனது தாய்நாடு’ என்பதை திரும்பத் திரும்ப அவர் சொல்லி வந்தார். அதைத்தான் இன்று வரை ஆஎ.எஸ்.எஸ். சொல்லி வருகிறது.

‘இந்தியா என்ற சொல் பிரிட்டிஷ் இந்தியாவையும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் கீழோ அல்லது வேறு அதிகாரியின் மூலமோ மாட்சிமை தங்கிய மகாராணியாரின் மேலதிகாரம் செலுத்தப்படும் எந்த ஒரு சுதேசி அரசருக்கும் அல்லது தலைவருக்கும் உரிய பிரதேசங்களையும் சேர்த்துக் குறிக்கும்’ என்று இந்தியச் சட்டம் – -1889 சொல்கிறது. இந்தியாவை உருவாக்கியவர்களே பிரிட்டிஷார்தான். அதற்குத் தான் ‘இந்தியா’ என்று பெயர் வைத்தது சரியா? ‘பாரத்’ என்று வைக்கலாமா? என்று 75 ஆண்டுகள் கழித்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

* இந்தியா கூட்டணியை பழிவாங்கவும் -–

* ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை நிறைவேற்றவுமே இப்போது பாரத நாடகங்கள் நடக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடையில் சொருகப்பட்டதுதான் ‘பாரத்’ ஆகும். 1947 ஜூலையில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதிவுக் குறிப்பில் ‘இந்தியா’ மட்டும்தான் இருக்கிறது. 1948 அக்டோபரில் ‘இந்தியா’ என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் சூட்டச் சொன்னபோது அண்ணல் அம்பேத்கரும், நேருவும், ஆசாத்தும் நிராகரித்தார்கள். 1949 செப்டம்பர் 17 கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ‘இந்தியா அதாவது பாரத்’ என்பது ஏற்றப்பட்டது. அதற்கான விளக்கம் தரப்படவில்லை.

இரண்டு ஆண்டுகள் விவாதம் செய்த அரசியல் நிர்ணய சபையே இக்காலப் பட்டிமன்றத் தீர்ப்பைப் போல –- ‘இந்தியா அதாவது பாரத்’ என்று சொல்லிப் போனது. அதில் குறைகண்ட பா.ஜ.க., ‘பாரத்’தை மட்டும் வைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

பா.ஜ.க. என்ற பாரம் இறங்கினால் இந்தியா நிம்மதி ஆகிவிடும்!

banner

Related Stories

Related Stories