முரசொலி தலையங்கம்

சந்திரயான் திட்ட இயக்குநர்களால் தமிழ்நாட்டு கல்வி முறையின் அறிவு நிரூபிக்கப்பட்டுள்ளது- முரசொலி பாராட்டு!

சந்திரயான் திட்ட இயக்குநர்களால் தமிழ்நாட்டு கல்வி முறையின் அறிவு நிரூபிக்கப்பட்டுள்ளது- முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (28-08-2023)

இந்திய நாட்டுக்கும்.. தமிழ் இனத்துக்கும்...

நிலவில் இறங்கிவிட்டது இந்தியா. சந்திரயான் விண்கலத்தின் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிவிட்டது. இந்திய விண்வெளித் துறை யின் மகத்தான மாபெரும் சாதனைகளில் ஒன்று கடந்த 23 ஆம் நாள் நிகழ்த்தப்பட்டு விட்டது.

“உலகின் கனவுலகம்தான் நிலவு. பூமியின் வாழும் மனிதன், நிலவிலும் வாழ முடியுமா என்ற கற்பனையில் ஆழ்ந்திருக்கிறான். உலக நாடுகளுக்கு, நாடுகளைப் பிடித்தலை விட நிலவை அறிதல் மிகப்பெரிய வேலையாகவே எல்லாக் காலமும் இருந்துள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியும் நிலவுக்கு விண்கலம் செலுத்தி நிலவை முழுமையாக அறிதலும் - தெளிதலும் மிகவும் ஆர்வம் மிக்க துறையாகவே இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இதோ இந்தியாவும் கால் பதித்து விட்டது. இந்தச் சரித்திர சாதனையை சந்திரயான் செய்து விட்டது.

நிலவைத் தொட்ட நான்காவது நாடு இந்தியா. 1959 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013 ஆம் ஆண்டு சீனாவும் இந்த சாதனையைச் செய்துள்ளன. 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய இந்தியா, 2023 ஆம் ஆண்டில் சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பு. இதுவரை அறியப்படாத நிலவின் தென் துருவப் பகுதியை சந்திரயான் - 3 தரையிறங்கி ஆராயத் தொடங்கி இருப்பதுதான். மற்ற நாடுகள் நிலவை ஆய்வு செய்வதை விட, இந்தியா தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது மிக அவசியமானது. ஏனென்றால் இங்குதான் நிலவைப் பற்றிய கற்பனைகள் அதிகம். நிலவை பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுவதாக நம்பப்பட்ட நாடு இது. இங்கேதான் இதுபோன்ற ஆய்வுகள் அதிகம் தேவைப்படுகின்றன.

சந்திரயான் திட்ட இயக்குநர்களால் தமிழ்நாட்டு கல்வி முறையின் அறிவு நிரூபிக்கப்பட்டுள்ளது- முரசொலி பாராட்டு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது தனது மகத்தான சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் பி.எஸ்.எல்.வி.சி. - 11 ராக்கெட் விண்ணில் (சந்திரயான் 1) செலுத்தப்பட்டது. இது முதன்முதலாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதாக கண்டறிந்தது. சந்திரயான் - 2 2019 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நிலவைச் சுற்றி வருவதற்கான தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அந்த தொழில் நுட்பம் கைகொடுக்கவில்லை. நிலவின் தரையில் மோதி செயல் இழந்தது. சந்திரயான் - 3 தயாரிக்கும் திட்டத்தில் நமது அறிவியல் அறிஞர்கள் இறங்கினார்கள். நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டரும் ரோவரும் இதில் இணைக்கப்பட்டது. நிலவை நோக்கிய இதன் பயணம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. சூலை 14 ஆம் நாள் தொடங்கிய இந்த நிலவுப் பயணம், ஆகஸ்ட் 23 ஆம் நாள் இலக்கை அடைந்துவிட்டது. நி வில் இறங்கிய நான்காவது நாடு என்றும் - நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்றும் இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய நாட்டு மக்கள் அனைவரும் பெருமை பொங்கச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிகழ்வாகும் இது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைவணங்கத் தக்கது. சுதந்திர இந்தியாவில் அணு சக்தித் துறைதான், அறிவியல் துறையாக தொடக்கத்தில் இருந்தது. இதில் விண்வெளி அறிவியலையும் ஒரு துறையாக இணைக்கக் காரணமாக இருந்தவர் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள். 1961ஆம் ஆண்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டே டாக்டர் விக்ரம் சாராபாய் தலைமையில் தனிக்குழு உருவாக்கப் பட்டுவிட்டது. திருவனந்தபுரம் அருகே தும்பா ஏவுகளம் அமைக்கும் முயற்சிகள் முதலில் தொடங்கியது. 1963 ஆம் ஆண்டு முதல் ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளியில் முதல் பயணம் இதுதான். பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 1969 ஆம் ஆண்டு இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இது பெரும் வளர்ச்சியை அடைந்தது. அணுசக்தி துறையில் இருந்து பிரித்து, விண்வெளித் துறையின் கீழ் கொண்டுவந்ததும் பிரதமர் இந்திராகாந்திதான். விண்வெளி ஆணையத்தையும் இவர் உருவாக்கிக் கொடுத்தார். இதன் காரணமாக சொந்தமாக ராக்கெட், செயற்கைக் கோள் தயாரிக்கும் நாடாக இந்தியா வளர்ந்தது. உயர்ந்தது. உயரத்துக்கு போய்விட்டது இந்தியா.

சந்திரயான் திட்ட இயக்குநர்களால் தமிழ்நாட்டு கல்வி முறையின் அறிவு நிரூபிக்கப்பட்டுள்ளது- முரசொலி பாராட்டு!

இதில் தமிழ் இனத்துக்கு என்ன பெருமை என்றால் சந்திரயான் - 1 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. 2008 அக்டோபர் 28 ஆம் நாள் அது நிலவைச் சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை இதுவே கண்டறிந்து சொன்னது.சந்திரயான் – 2 ஆனது 2019 சூலை 15 ஆம் நாள் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரோ தலைவராக இருந்தவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன்.இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விழுப்புரத்தில்தான். அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நான் ஒரு ஆவரேஜ் மாணவன். அடுத்து எங்க படிக்கணும், என்ன படிக்கணும் என்பது குறித்து எந்த ஒரு ஐடியாவும் எனக்கு இல்லை. அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினிரிங் சேர்ந்தேன்.” என்று சொல்லி இருக்கிறார் வீரமுத்துவேல்.

இது தமிழ் இனத்தின் பெருமையாகும். தாய்மொழியில் படித்து, விண்ணுக்கு உயர்ந்தவர்கள் இவர்கள். 'தமிழ்நாட்டு கல்வி முறை சரியில்லை' என்று சில தற்குறிகள் சொல்லி வரும் நிலையில் நிலவில் சாதிப்பதன் மூலமான அறிவு கொண்டது தமிழ்நாட்டுக் கல்வி முறை என்பதை நீரூபிக்கும் வாய்ப்பாகவும் இது அமைந்துவிட்டது.இந்திய நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் நிலவுப் பயணம் தொடரட்டும். கற்பனைக் கதைகள் முடியட்டும்.

banner

Related Stories

Related Stories