முரசொலி தலையங்கம்

பொது சிவில் சட்டம் : “முதலில் சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்..” - முரசொலி !

பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால், ‘பொது'வை ஆதரிக்கும் அனைவரும் 'பொது'வை எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள்.

பொது சிவில் சட்டம் : “முதலில் சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்..” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடே எதிர்க்கும் சட்டம்!

அடுத்த உள்நாட்டுக் குழப்பத்துக்கு அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது பொது சிவில் சட்டம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, அதில் இருந்து திசை திருப்புவதற்காக, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது. ஏதோ இதனை நிறைவேற்றுவதன் மூலமாக இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மையைச் செய்து விட்டதாக நாடகம் ஆட நினைக்கிறார்கள்.

"இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறு விளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

* "ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை" இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. அதனை பொது சிவில் சட்டம் மீறுகிறது.

* ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையேகூட, பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை.

பொது சிவில் சட்டம் : “முதலில் சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்..” - முரசொலி !

* இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளது.

* பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மைச் சமூகத்தை உருவாக்கு வதற்கான முயற்சி இது.

* இந்தியாவின் பன்முகத் தன்மை பாதிக்கப்படும்.

* பழங்குடிச் சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்துப் பாதுகாப்பது முக்கியம்.

* இது மத விவகாரங்களில் ஒன்றிய அரசின் அத்துமீறலாகவே கருதப்படும்.

* இந்தச் சட்டம் பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும்.

* இது முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக் கூடியது.

* பழங்குடிச் சமூகத்தை இது அதிகமாக பாதிக்கும்.

* அனைவருக்கும் பொதுவான நடைமுறையானது ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கும்.

* நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத் தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும்.

- இவையே முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தின் முக்கிய கருத்துருக்கள் ஆகும்.

பொது சிவில் சட்டம் : “முதலில் சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்..” - முரசொலி !

இந்தியாவின் பல்வேறு தரப்பினரும் இதே கருத்தையே சொல்லி இருக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை முஸ்லீம் தனிச் சட்ட வாரியம் எதிர்த்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கூடிய இந்த சட்டவாரிய உறுப்பினர்கள், மத்திய சட்ட ஆணையத்துக்கு விரிவான கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள்.

"சிறுபான்மையினரின் தனிச் சட்டம், மதச் சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் தலையிடுவது ஒழுக்கமாகாது. சட்ட ஆணையத்தின் அறிவிப்பு தெளிவில்லாமல் இருக்கிறது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள அடையாளத்தை இழக்க நாங்கள் தயாராக இல்லை. தேசிய பாதுகாப்பு, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பேணுவதற்கு சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது தனிச் சட்டங்கள் உதவியாகவே உள்ளன. எனவே பொது சிவில் சட்டம் தேவையில்லாத ஒன்று” என்று முஸ்லிம் சட்ட வாரியம் கடிதம் அனுப்பி இருக்கிறது.

சீக்கியர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நடந்துள்ளது. 'இந்துக்களில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான சட்ட, விதிமுறைகள் இல்லை. அப்படி இருக்கும் போது அனைத்து மதத்துக்கும் ஒரே மாதிரியான சட்டம் எதற்கு? அனைத்து மதத்தையும் ஒன்றாக்கப் பார்க்கிறார்களா?” என்று பரம்ஜித்சிங் சர்னா கேட்டுள்ளார்.

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் கட்சியின் தலைவர் இவர். இவரது ஆட்சியை பா.ஜ.க. ஆதரிக்கிறது. பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் கட்சி இது. இவரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆதரவு தரமாட்டோம் என்றே இவர் சொல்லி இருக்கிறார்.

பொது சிவில் சட்டம் : “முதலில் சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்..” - முரசொலி !

சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பொது சிவில் சட்டத்தை எதிர்த்திருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடி அமைப்பினர் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ராஞ்சியில் கூடிய ஆதிவாசி சமன்வாய் சமிதி என்ற கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. "பழங்குடியினரின் உரிமைகள் அனைத்தும் பறிபோகும்” என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நாகலாந்து, மிசோரம் மாநில மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்.

"காசி ஹில்ஸ்" என்ற தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் இதனை எதிர்த்துள்ளது. காசி சமூகத்தின் பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சிறப்புச் சலுகை பெற்றிருக்கும் சமூகம் இது.

தி.மு.க. பொதுச் செயலாளர் மாண்புமிகு துரைமுருகன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்தே, இந்தியா முழுக்க எதிரொலிக்க வேண்டியது ஆகும்.

“மதங்களுக்கு இடையே பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன், சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து சாதிய ஏற்றத் தாழ்வை சமன் செய்ய வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

இதைச் செய்தால் ‘பொது'வை ஆதரிக்கும் அனைவரும் 'பொது'வை எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள்.

banner

Related Stories

Related Stories