முரசொலி தலையங்கம்

ஒன்றிய அரசின் செயலை சட்டவிரோதம் என சொல்லி விட்டது உச்சநீதிமன்றம்.. இதை விட பெரிய அவமானம் உண்டா? -முரசொலி

ஒன்றிய அரசின் செயலை சட்டவிரோதம் என சொல்லி விட்டது உச்சநீதிமன்றம்.. இதை விட பெரிய அவமானம் உண்டா?  -முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (14-07-23)

நீட்டிப்பு... நீக்கம்... நியாயம்

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் மீது அமலாக்கத்துறை பாய்கிறது என்றால், அமலாக்கத்துறை மீதே பாய்ந்துவிட்டது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை சட்டவிரோதம் என்று சொல்லி விட்டது உச்சநீதிமன்றம். இதனை விட அவமானம் பா.ஜ.க. அரசுக்கு இருக்க முடியுமா? அமலாக்கத்துறையை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. எவையெல்லாம் தங்களை எதிர்க்கும் கட்சிகளோ அதனை அடக்குவதற்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். அடிபணிந்தால் அவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கே மரணித்து விடும். இதற்கு இந்தியா முழுக்க - பல்வேறு மாநிலங்களில் பல உதாரணங்கள் உண்டு. இதில் சமீபத்திய அசிங்க உதாரணம்தான் அஜித்பவார் ஆவார். இப்படியெல்லாம் அம்பலம் ஆவது குறித்த வெட்கம் துளிகூட பா.ஜ.க.வுக்கு இருக்காது. அமலாக்கத்துறை வருமான வரித்துறை - சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்ட காலத்தில் குற்றத்தடுப்பு இதனுடைய நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தன்னாட்சிப் பாதுகாப்புக் இவை பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் பகிரங்கமாக. அதற்கேற்ற ஆட்களை பதவிகளில் வைத்துக் கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அமலாக்கத்துறையின் இயக்குநராக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள் சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பணி நியமன ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனை திடீரென்று மூன்று ஆண்டுகள் என ஆக்கினார்கள். 2021 நவம்பர் 18 ஆம் தேதியுடன் முடிய வேண்டும். இந்த நிலையில் 2022 நவம்பர் 18 வரை நீட்டித்து மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்றும் அவர் ஓய்வு பெறவில்லை. இந்த பதவியில் இவரே ஐந்து ஆண்டுகள் இருக்க வாய்ப்பு ஏற்படுத்தும் காரியங்களையும் செய்தார்கள். சி.பி.ஐ. இயக்குநர் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்ததைப் போல அமலாக்கத் துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கினார்கள். 2023 ஆம் ஆண்டு நவம்பர் 18 வரையில் அவர் பதவியில் நீடிப்பார் என்று உத்தர விட்டார்கள். பொதுவாக இத்தகைய பதவியில் இருப்பவர்களை தேர்வு செய்யும் முறையும் வெளிப்படையானதாக இருக்கும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடித்தான் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்வார்கள். அப்படிச் செய்யாமல் ஒன்றிய அரசு தான் விரும்பிய ஒருவருக்கே இப்படி பணி நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருப்பது நேர்மையற்ற செயல் என்பதால் அது பொதுவெளியில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் செயலை சட்டவிரோதம் என சொல்லி விட்டது உச்சநீதிமன்றம்.. இதை விட பெரிய அவமானம் உண்டா?  -முரசொலி

மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயா தாக்கூர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா ஆகியோர் இந்த மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்தார்கள். அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை அவ்வப்போது நீட்டிக்க முடியாது என்ற நிர்வாக விதிமீறலைச் சுட்டிக் காட்டிய இவர்கள், இதில் உள்ள அரசியல் உள்நோக்கத்தையும் அம்பலப் படுத்தி இருந்தார்கள்.

"தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே ஒன்றிய அரசு அழித்துள்ளது. அமலாக்க முகமைகளின் நியமனமானது நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும். நியமனமானது ஒருதலைப்பட்சமானதாக நடந்தால், அவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவார்கள்" என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுதான் இந்தி யாவின் பல மாநிலங்களில் நடக்கிறது. அதனைத்தான் மனுவில் சொல்லி இருந்தார்கள்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தார்கள். சஞ்சய் மிஸ்ராவின் நியமனமானது சட்டவிரோதமானது என்பதை தெளிவாகச் சொல்லி விட்டார்கள் மூன்று நீதிபதிகள்.

ஒன்றிய அரசின் செயலை சட்டவிரோதம் என சொல்லி விட்டது உச்சநீதிமன்றம்.. இதை விட பெரிய அவமானம் உண்டா?  -முரசொலி

“ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த நபரால் மட்டுமே அந்தப் பதவிக்குரிய கடமையைச் செய்ய முடியுமா? அமலாக்கத் துறையில் அவரது வேலையைச் செய்வதற்கு வேறு யாரும் இல்லையா? அவர் பதவிக்காலம் முடிந்துவிட்டால் அமலாக்கத்துறையே செயல்பட முடியாமல் போய்விடுமா?" என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் மிகமிக முக்கியமானது. “நவம்பர் மாதம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார். அதற்கு மேல் நீடிக்க மாட்டார்" என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சொன்னதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. “ஜூலை மாதத்தோடு அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். தங்களது உள்நோக்கத்துக்கு ஒருவரைப் பயன்படுத்தியது பா.ஜ.க. என்பது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டு ஆகிவிட்டது.

"அமலாக்கத்துறை என்பது எந்த ஒரு தனி நபருக்கும் அப்பாற்பட்ட நிறுவனம்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார். இதற்குப் பதில் அளித்த இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், *பிறகு ஏன் சஞ்சய் மிஸ்ராவுக்கு மூன்று முறை பணி நீட்டிப்பு வழங்கினீர்கள். சில தனிநபர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அரசியல் நலன் களுக்காக சேவை செய்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது" என்று குற்றம் சாட்டி இருக்கிறார். ஜூலை மாத கடைசியுடன் சஞ்சய் மிஸ்ரா பதவி விலகிவிட்டால் மட்டும் இது மறக்கப்பட்டு விடக் கூடாது. "அமலாக்கத்துறை இயக்குநரின் பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என்றால் அவராலும் அவரது குழுவாலும் எடுக்கப் பட்ட எல்லா முடிவுகளும் ஆராயப்பட வேண்டும். அல்லது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட வேண்டும்" என்று மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி சொல்லி இருக்கிறார். இதுவும் நியாயமான கருத்து தானே!..

banner

Related Stories

Related Stories