முரசொலி தலையங்கம்

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் என்ன?.. புட்டு புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பா.ஜ.க. அனுப்பி வைக்கும் ஆளுநர்களின் வேலை இதுவாக இருக்குமானால், கெடுத்தல் பா.ஜ.க.வுக்குத்தான்.

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் என்ன?.. புட்டு புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-07-2023)

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் - 2

ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றாக நிலைப்பாடு எடுத்துள்ளார்கள். முதலமைச்சர் அவர்கள் என்ன விமர்சனங்களை வைக்கிறார்களோ, அதே விமர்சனம்தான் அனைத்து தரப்பிடம் இருந்தும் வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இக்கடிதங்கள் அலட்சியப்படுத்த வேண்டியவை என்றாலும், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள விவரங்கள் மற்றும் சட்டம் குறித்து தனது நிலையை விளக்க விரும்புவதாகவும் என்றுதான் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த இரண்டு கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் கோரப்பட வில்லை அல்லது வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் அவர்கள் பதிவு செய்திருந்தார்கள். அரசியலமைப்பு எந்திரத்தின் சீர்குலைவு, மறைமுகமான அச்சுறுத்தல் போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்ட முதல் கடிதத்தை அனுப்பிய சில மணி நேரத்திலேயே, அட்டார்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பதற்காக அதனை திரும்பப் பெறுவதாகக் கூறி இருப்பதன்மூலம், இதுபோன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன், சட்ட ஆலோசனையைக் கூட ஆளுநர் கேட்கவில்லை என்பதும், உள்துறை அமைச்சரின் கருத்தைக் கேட்பதற்காக இந்த முடிவை நிறுத்தி வைத்ததும், அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தில் ஆளுநர் அவசரகதியில் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் என்ன?.. புட்டு புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!

விசாரணைக்கு உள்ளாகும் நபருக்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நபருக்கும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபருக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர் மட்டுமே தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இதனை உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள இதற்கான பிரிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்படி, தண்டிக்கப்படும் நபர் மட்டுமே எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவது தெளிவாகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் அமைச்சராக நீடிப்பதில் எந்த தடையும் இல்லை என்றும், அரசியல் அமைப்பின் 75-–வது பிரிவு இதனை தெளிவுபடுத்தி உள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது பிரதமரின் உரிமை என இந்த சட்டப்பிரிவில் குறிப்பிட்டு உள்ளதையும், பிரதமருக்கு உள்ள உரிமைகள், முதலமைச்சருக்கும் பொருந்தும் என அரசியல் சட்டப்பிரிவு 164-ல் குறிப்பிடப்பட்டு உள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக்கி உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட விசாரணை அமைப்பு அமைச்சர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்வதால் மட்டுமே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விசாரணையின்போது, நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துகளை இறுதி தீர்ப்பாக கருத வேண்டியது இல்லை என்றும், சட்டமன்றத்திற்கு மட்டுமே அமைச்சர்கள் பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த விளக்கங்களின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதைத்தான் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அஜித் சின்ஹா சொல்லி இருக்கிறார். 'அமைச்சர்கள் பதவி நீக்க விவகாரத்தில் முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் ஆளுநரால் ஒருதலைபட்சமாகச் செயல்பட முடியாது' என்று அஜித் சின்ஹா சொல்லி இருக்கிறார்.

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் என்ன?.. புட்டு புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!

இது தனிப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையது மட்டுமல்ல, முதலமைச்சரின் அதிகாரம் தொடர்புடையது ஆகும். 'ஒருதலைப்பட்சமாக ஒரு அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியாது. அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்வது முதலமைச்சரே' என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி சொல்லி இருக்கிறார். இது தான் முதலமைச்சர் அவர்கள் சொல்வதும்!

தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்துஸ்தான் டைம்ஸ், தி டிரிபியூன் உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் அனைத்தும் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து விட்டன. மற்ற மாநிலங்களில் இருந்து வெளியாகும் நாளிதழ்களும் கண்டித்து விட்டன. இவை அனைத்துமே, ஆளுநர் ஆர்.என்.ரவி அத்துமீறிச் செயல்படுகிறார் என்பதையே சொல்கின்றன. அரசியல் ரீதியாகவோ, கருத்து முரண்பாடுகளின் அடிப்படையிலோ ஒருவர் விமர்சிக்கப்படுவது வேறு. அது இயற்கையானதுதான். ஆனால், சட்டத்தை மீறிச் செயல்படுவதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தர மறுக்கிறார். நிறுத்தி வைக்கிறார். 'நிறுத்தி வைத்தாலே நிராகரித்ததாக அர்த்தம்' என்கிறார்.

* மாநில அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்படும் உரையை வாசிக்க மறுக்கிறார். அதை திருத்துகிறார். தனக்கு விருப்பமானதை வாசிக்கிறார்.

* மாநில அமைச்சரை திடீரென நீக்குகிறார் - இவை அனைத்தும் அதிகார அத்துமீறல்கள் ஆகும்.

'அரசியலமைப்புச் சட்டம் வழங்காத அதிகாரத்தையோ –- அரசியலமைப்புச் சட்டத்தையோ ஆளுநர் பயன்படுத்த முடியாது' என்று மகாராஷ்டிரா மாநில விவகாரம் குறித்த தீர்ப்பில் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் சொன்னது. இதையெல்லாம் உணர்ந்து செயல்படுபவராக ஆர்.என்.ரவி இல்லை.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பா.ஜ.க. அனுப்பி வைக்கும் ஆளுநர்களின் வேலை இதுவாக இருக்குமானால், கெடுத்தல் பா.ஜ.க.வுக்குத்தான். ஆர்.என்.ரவிக்களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. முன்னாள் ஆளுநர்கள் என்ற கோதாக்களில் டீ பார்ட்டிகளில் முதல் வரிசை நாற்காலி எங்கும் கிடைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்ற நாற்காலி கூடக் கிடைக்காது என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.

banner

Related Stories

Related Stories