முரசொலி தலையங்கம்

வள்ளுவரிடம் தொடங்கி இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார் ஆளுநர்.. இவருக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருக்கு!

வள்ளுவரிடம் தொடங்கிய ஆளுநர் ரவி, இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார்.

வள்ளுவரிடம் தொடங்கி இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார் ஆளுநர்.. இவருக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (24-06-2023)

வள்ளலாரையுமா?

ஆளுநர் ஆர்.என்.இரவிக்குப் பதில் சொல்லவே எரிச்சலாக இருக்கிறது. எதையும் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக அவர் இல்லை. தினமும் காலையில் செய்தித்தாளைத் திறந்தால் ஆளுநர் என்ன சொல்லி இருப்பாரோ என்ற எரிச்சல் பற்றிக் கொள்கிறது. அவருக்குச் சுத்தமாக, அடுத்தவர் சொல்வதை உள்வாங்கும் மனம் இல்லை.

தமிழ்நாட்டில் பல்லுடைக்கப்பட்ட சனாதனக் கும்பலின் அழுக்கு முகங்கள் எழுதித் தரும் கிழிந்துபோன பழைய வாய்ப்பாடுகளை - புதிய பொன்மொழிகளைப் போல தமிழ்நாட்டு மேடைகளில் ஆளுநர் சொல்வதைப் பார்த்தால் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. 'இவை எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன் உடைக்கப்பட்ட பர்னிச்சரப்பா' என்று அவருக்கு யார் சொல்வது?

அருட்பிரகாச வள்ளலார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியத்தைக் காவு வாங்கத் தொடங்கியவர். சமஸ்கிருதத்தை ' அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி பாஷை' என்று சங்கராச்சாரியார் சொன்னபோது, 'அனைத்து மொழிகளுக்கும் தமிழ்தான் தந்தை மொழி' என்று சொன்னவர்தான் அருட்பிரகாச வள்ளலார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். ''சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும்'' என்று சொல்லப்பட்டு உள்ளது. இப்படி தி.மு.க. ஆதரிக்கும் ஒருவர், சனாதனத்தை ஆதரிப்பவராக இருந்திருக்க முடியாது என்பதாவது ஆளுநருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?

வள்ளுவரிடம் தொடங்கி இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார் ஆளுநர்.. இவருக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருக்கு!

‘ஆறாம் திருமுறை’ பாடல்களைத் தொகுத்து, 'இராமலிங்கர் பாடல் திரட்டு' என்ற நூலை 1940 ஆம் ஆண்டுகளிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். வள்ளலார் நகரை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்தவர் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதன்பிறகாவது வள்ளலாரைப் பற்றி பார்த்துப் பேச வேண்டாமா ஆளுநர்?

வடலூர் போன ஆளுநர் என்ன பேசி இருக்கிறார் தெரியுமா? 'வள்ளலாரின் நூல்களைப் படித்தபோது அவை பிரமிப்பை ஏற்படுத்தின. 10 ஆயிரம் ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்' என்று பேசி இருக்கிறார் ஆளுநர். வள்ளலாரின் எந்த நூலைப் படித்தார் என்று தெரியவில்லை. கோல்வால்கர் எழுதியதை வள்ளலார் என்று கொடுத்து விட்டார்களா எனத் தெரியவில்லை.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மிகத் தெளிவாக ஆளுநருக்குப் பதில் அளித்துள்ளார். '' சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்கும் அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்துகொள்ளாமல் தர்ம ரட்சகராகப் புதிய அவதாரம் கொண்டிருக்கிறார்" என்று சொல்லி இருக்கிறார் தங்கம் தென்னரசு.

அதைவிட, ''ஒன்றிய அரசின் ‘தனிப்பெருங்கருணை’ வாய்க்கப் பெற்றதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர்" என்றும் கிண்டல் அடித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

நியமனப் பதவியில் வந்தவர், கிண்டி மாளிகையை தனது விருப்பத்துக்குச் சிதைக்க முடியாது. வள்ளுவரிடம் தொடங்கிய ஆளுநர் ரவி, இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார்.

* சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார்.

* “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுள் அடங்கி உலகியல் நடத்த வேண்டும்” -– என்பதே அவரது கொள்கை.

* “சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்

சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்” -– எனப் பாடியவர் அவர்.

* “சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்” – - என்று முடிவுக்கு வந்தவர் அவர்.

வள்ளுவரிடம் தொடங்கி இப்போது வள்ளலாரிடம் வந்துள்ளார் ஆளுநர்.. இவருக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருக்கு!

* சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்

அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே

– என்று பாடியவர் வள்ளலார் பெருமான்.

‘கடவுள் ஒருவரே’ என்பதும், ‘அவரை உண்மை அன்பால் ஒளி வடிவில் வழிபாடு செய்ய வேண்டும்’ என்றும், சாதி சமயம் முதலிய எவ்வகை வேறுபாடும் கூடாது என்பதும்; எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் உள்ள நேய ஒருமைப்பாட்டைக் கைக்கொள்ள வேண்டும் என்றும், ஏழைகளின் பசி தவிர்த்தலே சீவகாருண்ய ஒழுக்கம் என்றும், ‘புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது’ என்றும் - – இவையே சமரச சன்மார்க்க நோக்கம் என்றும் கூறினார் வள்ளலார்.

அதனைப் பரப்புவதற்காக 1865 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவினார். கடவுளை ஒளி வடிவில் காண சத்திய ஞான சபையை உருவாக்கினார். ‘உள்ளமே திருக்கோயில்’ என்றார். இத்தகைய வள்ளலாரை நால் வருணக் கும்பலோடு சேர்த்துச் சிதைக்கப் பார்க்கிறார் ஆளுநர். இவருக்குச் சனாதனமும் தெரியவில்லை, வள்ளலாரும் தெரியவில்லை, எல்லாம் தெரிந்தவர்போல நடிக்க மட்டும் தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் கடந்த ஆண்டு நடந்த விழாவில் பேசும்போது, ''தமிழ்நாடு பல்வேறு சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் வளமான வரலாற்றை நமக்களித்து அதன் முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அதன் காரணமாக சமுதாய உரிமைகளைப் பாதுகாக்க ஏதுவாக இருக்கிறது. அதிகமாக நேசித்து அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உயரிய கோட்பாட்டை வள்ளலார் மற்றும் பெரியார் அவர்களிடம் நாம் கற்றுக் கொண்டோம் என்பதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அவர்களின் கருத்துக்களில் ஒன்றிணைந்து தோளோடு தோள் நிற்கும் பெருமை நமக்குக் கிடைத்திருக்கிறது" என்றார்.

இத்தகைய தெளிவான படிப்பு இவருக்கு இல்லை. இத்தனைக்கும் கவுல், பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் அவருக்கு வள்ளலாரையும், பெரியாரையும் தமிழ்நாட்டையும் உள்வாங்கும் தன்மை இருந்தது. இவருக்கு அதில் துளியும் இல்லை.

அமைதித் தமிழ்நாட்டை கொள்கைரீதியாகவும் நிர்வாக ரீதியாக குழப்பும் எண்ணம் மட்டுமே இருக்கிறது. இதைவிடப் பெரிய படையெடுப்புகளைப் பார்த்தது தமிழ்நாடு. இதைவிடப் பெரிய குழப்பவாதிகளை எதிர்கொண்டு முறியடித்தது தமிழ்நாடு.

banner

Related Stories

Related Stories