முரசொலி தலையங்கம்

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை’ என்ற நூலானது தமிழினத்தின் பெருமிதமாக வெளியாகி இருக்கிறது.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழினத்தின் பெருமிதம்!

‘‘இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்” - என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதற்கு அரண் சேர்க்கும் வகையிலான ஆய்வுக் கருவூலம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை’ என்ற நூலானது தமிழினத்தின் பெருமிதமாக வெளியாகி இருக்கிறது. அதனையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களில் இருந்து எதனை மேற்கோள் காட்டினாலும், ‘இவனுகளுக்கு வேற வேலை இல்லை’ என்பது சிலரது விமர்சனமாக இருக்கும். ‘புலவர்களின் பொய்களை எல்லாம் வரலாறாக வாசித்துக் காட்டுகிறார்கள்’ என்று கோபம் காட்டுவார்கள். இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் இவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை என்பார்கள். ஆனால் அவர்களே வேதகால நாகரிகம் என்றும் சரஸ்வதி நாகரிகம் என்றும் கதை விடுவார்கள். இந்தக் கதைகளுக்கான ஆதாரம் எதையும் காட்ட மாட்டார்கள்.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

திராவிட இயக்க மேடைகளிலும் தமிழறிஞர் தம் நூற்களிலும் மேற்கோள் காட்டிப் பேசப்பட்ட பாடல்கள் அனைத்துக்குமான ஆதாரக் குவியலாக ஆராய்ச்சித் தொகுப்பாகத் தான் ஆர்.பாலகிருஷ்ணனின் இந்த புத்தகம் வெளியாகி இருக்கிறது. ‘சிந்து வெளிப்பண்பாட்டில் திராவிட அடித்தளம்’ என்ற நூலை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இவர், ‘சிந்து முதல் வைகை வரை’ என்ற மிகப்பெரிய நூலை இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

1924 ஆம் ஆண்டு சிந்துவெளிப் பண்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் வாழ்ந்த தடயங்களை அந்தக் கண்டுபிடிப்பு மெய்ப்பித்தது. அப்போதே திராவிட இயக்க மூதறிஞர்களில் ஒருவரான சாத்தான்குளம் இராகவன் அவர்கள், ‘ஆதிச்சநல்லூரும் பொருநை வெளிநாகரிகமும்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

‘சிந்து வெளிநாகரிகம் பற்றி நான் அப்போது தந்தை பெரியாரிடம் பேசினேன்’ என்று சாத்தான்குளம் இராகவன் எழுதி இருக்கிறார். கா.அப்பாத்துரையார் தொடர்ச்சியாக இது பற்றி எழுதினார். மா.இராசமாணிக்கனார், தேவநேயப்பாவாணர் ஆகியோர் தமிழர் தம் தோற்றம் குறித்து எழுதினார்கள். அப்போதும், ‘இவை எல்லாம் இலக்கிய மேற்கோள்கள்’ என்று புறம் தள்ளப்பட்டன.

அகழாய்வுத் துறையும் இது பற்றி மிக நீண்டகாலமாக மெளனத்தில் இருந்தது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் இதன் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்து ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் முன்னெடுத்ததன் விளைவாக தமிழர் வரலாற்றுத் தடங்கள் தொல்லியல் ஆய்வு முறையில் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. சிந்துவெளி முதல் கீழடி வரையில் தமிழினத்தின் பெருமையானது நிரம்பித் தழும்புகிறது.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

‘சிந்து முதல் வைகை வரை’ நூலானது இடப்பெயராய்வு முறைப்படி ஆராய்கிறது. நாம் பயன்படுத்தும் முக்கியமான தமிழ்ச் சொற்களில் பெரும்பாலானவை சிந்துவெளிப் பகுதியாக முன்பு இருந்த பகுதிகளில் இப்போதும் பயன்படுத்தப்படும் சொற்களாக இருக்கின்றன என்பதை ஆராய்ந்து சொல்லி இருக்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.

கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, பாரி, பேகன், கரிகாலன், சோழன், சேரல், உதியன், மாறன், சாத்தனார், கபிலர், நக்கீர, கோட்டை, வேல், ஆகிய சொற்கள் மருவிய சொற்களாக இன்னமும் பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

கண்ணகி தெய்வமாக தமிழ் மரபில் இருப்பதைப் போல குஜராத்தில் கண்கை கோவிலும், கண்கேஸ்வரி கோவிலும் உள்ளதாகச் சொல்கிறார். மொகஞ்சதோரா பெண்கள் சிலம்பு அணிந்துள்ளார்கள். தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இப்போது கண்ணகி என்ற பெயரில் 24 ஆயிரத்து 710 பெண்கள் இருக்கிறார்கள் என்கிறார். பாகிஸ்தான், ஆப்கனில் ‘கண்ணகி’ என்ற பெயர் மருவி இன்னமும் இருக்கிறது என்கிறார்.

சிந்து வெளியில் ‘காளைகள்’ தான் இருந்தன. இது திராவிடச் சின்னம் ஆகும். சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. ஆரியச் சின்னம் என்பது, ‘குதிரை’கள் தான். குதிரையையும், சக்கரம் பொருத்திய தேரையும் ஆரியச் சின்னமாகச் சொல்வார்கள். இவை சிந்துவெளியில் இல்லை.

‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ : தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும்.. முரசொலி புகழாரம்!

வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை. இவை இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடமே சிந்து வெளி என்பதை நிருவும் ஆர்.பாலகிருஷ்ணனின் வரலாற்று ஆய்வானது தமிழினத்தின் பெருமிதங்களை மீட்கும் பயணத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது. ‘நாம் இந்தியாவையே ஒரு காலத்தில் ஆண்டவர்கள்’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். ‘வரலாற்றை தெற்கில் இருந்து எழுதுங்கள்’ என்றார் பேரறிஞர் அண்ணா. ‘பார் போற்றும் இனம் மட்டுமல்ல, பார் ஆண்ட இனம்’ என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அதனை ஆதாரங்களின் மூலமாக மெய்ப்பிக்கும் வரலாற்றின் தொடர்ச்சியை மேலெடுத்துச் செல்வோம்!

banner

Related Stories

Related Stories