முரசொலி தலையங்கம்

‘நீட்’ தேர்வு.. ஆளுநரின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய மீண்டும் சட்டப்போரை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

‘நீட்’ தேர்வு இது ஒரு மோசடித்தனமான கல்விக் கொள்ளை ஆகும்.

‘நீட்’ தேர்வு..  ஆளுநரின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய மீண்டும் சட்டப்போரை தொடங்கியது தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (22-02-2023)

‘நீட்’ –- மீண்டும் சட்டப் போர்!

உச்சநீதிமன்றத்தில் ‘நீட்’ தேர்வு தொடர்பான சட்டப்போரை மீண்டும் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒன்றிய அரசும் - அதன் பிரதிநிதியான ஆளுநரும் போட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்க வேண்டிய இடம் உச்சநீதிமன்றம்தான் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்து இந்த புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்றத்தால் 2017 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு கோரும் சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை ஒன்றிய உள்துறை திருப்பி அனுப்பியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால் மீண்டும் ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். ஆளுநர் இதுவரைக்கும் முடிவெடுக்காமல் அப்படியே போட்டு வைத்துள்ளார். ‘எந்த முடிவாக இருந்தாலும் உடனடியாக எடுக்க வேண்டும்’ என்று நித்தமும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அவர், ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவை மட்டும் பல மாதங்களாக அப்படியே முடிவெடுக்காமல் போட்டு வைத்திருக்கிறார். ஊருக்கு எடுக்கும் பாடத்தை அவரே கடைப்பிடிப்பது இல்லை!

‘நீட்’ தேர்வு..  ஆளுநரின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய மீண்டும் சட்டப்போரை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

‘நீட்’ கட்டாயம் என்ற இந்திய மருத்துவக் கவுன்சில் விதியை எதிர்த்து ஏற்கெனவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் புதிய மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

* மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வானது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அதிலும் குறிப்பாக ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பது ஒரு அதிகார வரம்பு மீறலும் அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்று.

* அரசியலமைப்பு வழங்கி உள்ள அடிப்படை உரிமையான சமத்துவத்துக்கு எதிரானது ஆகும்.

* கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை ஆகும். மாநிலக் கல்வி முறையின் அதிகாரம், மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் மீதான அதிகாரம் என்பது மாநில அரசின் உரிமை ஆகும். ‘நீட்’ தேர்வானது, மாநிலங்களின் இந்த உரிமையை முற்றிலுமாகப் பறிக்கக் கூடியதாக இருக்கிறது.

* தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அது சிதைக்கிறது. ‘நீட்’ தேர்வு என்பதே சி.பி.எஸ்.சி., என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தின் கீழ் வரும் பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு ஏற்ற மாதிரியே கேள்விகள் கேட்கப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்கள் தேர்வு எழுத அதிகம் சிரமப்படுகிறார்கள்.

‘நீட்’ தேர்வு..  ஆளுநரின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய மீண்டும் சட்டப்போரை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

*கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்தாலும் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏனென்றால், பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் மட்டுமே அவர்களால் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதே உண்மை ஆகும்.

* பயிற்சி மையங்களில் சேர முடியாததால் நகர்ப்புற மாணவர் களோடும், வசதி படைத்த மாணவர்களோடும் கிராமப்புற ஏழை மாணவர்களால் போட்டி போட முடியாது.

* மருத்துவப் படிப்பு வியாபாரம் ஆதல், முறைகேடுகள், பணம் பறித்தல் ஆகியவை ‘நீட்’ தேர்வால் தடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவை எதுவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பது இல்லை. தனியார் கல்லூரிகளில் ஒருவேளை நடக்கலாம். முறைகேடுகளைக் களைவதே ‘நீட்’ என்று சொல்வது, முறைகேடுகள் நடைபெறாத அரசு கல்லூரிகளுக்கு பொருந்தாது. அப்படி இருக்கும் போது அனைத்துக் கல்லூரிக்கும் சேர்த்து தேர்வு வைப்பது பொருத்தம் இல்லாதது - – இப்படி வலுவான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 10.6.2021 அன்று இக்குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. நீட் தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியை பெற முடியவில்லை என்று புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே- அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

‘நீட்’ தேர்வு..  ஆளுநரின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிய மீண்டும் சட்டப்போரை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

இதனடிப்படையில் ‘நீட்’ தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். அவர்கள் ஒரு சட்டத்தை வடிவமைத்தார்கள். அதுதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல லட்சம் பேரின் எண்ணத்தால் உருவானது இந்தச் சட்டம். கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதி களால் உருவாக்கப்பட்டது இந்தச் சட்டம். இதனை நியமனத்தின் மூலமாக பதவிக்கு வந்த ஆளுநர் தடுத்து வைத்திருப்பது சட்டத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கே எதிரானது ஆகும்.

அந்தத் தேர்வும் ஜனநாயகப் பூர்வமான, ஒழுங்கான, முறைகேடு அற்ற, சமத்துவமான தேர்வு அல்ல. பயிற்சி மையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை சம்பாதித்துத் தரக் கூடிய தேர்வு ஆகும். ரூபாய் மூன்று லட்சம் கட்டி - பயிற்சி பெற்று – - ஏழில் ஒரு பங்கு மதிப்பெண்ணைப் பெற்று தேர்ச்சிக்குரியவர் ஆகி - பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவக் கல்லூரிக் குள் புகுந்துவிடும் நவீன கொள்ளைப்புற வழிதான் ‘நீட்’ தேர்வு. இது ஒரு மோசடித்தனமான கல்விக் கொள்ளை ஆகும். இதனைத் தடுப்பது ஒன்றே எதிர்கால மருத்துவக் கல்விக்கு நன்மை பயக்கும். அதற்கான சட்டப்போரை மீண்டும் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு.

banner

Related Stories

Related Stories