முரசொலி தலையங்கம்

'பன்முகத்தன்மை அவசியம்': குடியரசு தின உரையில் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய குடியரசு தலைவர்: முரசொலி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைப்பதன் மூலமாக தனது உள்ளக்குமுறலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிப்படுத்தி இருக்கிறார்.

'பன்முகத்தன்மை அவசியம்': குடியரசு தின உரையில் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய குடியரசு தலைவர்: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-01-2023)

குடியரசுத் தலைவரின் குமுறல்!

இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு நாளை முன்னிட்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைப்பதன் மூலமாக தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

''பல்வேறு மொழிகள், பிரிவுகள் உள்ளிட்ட இந்தியாவின் பன்முகத்தன்மை நம்மைப் பிரிக்கவில்லை. மாறாக ஒன்றிணைக்கவே செய்கின்றன. அதன் காரணமாகவே நம்மால் ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற முடிந்துள்ளது" என்று அழுத்தம் திருத்தமாக குடியரசுத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

''பலதரப்பு மக்களைக் கொண்டிருந்தபோதிலும் ஒரு நாடாக இருப்பது என்பது வரலாறு காணாதது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற மையக்கருதான் அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமாக இருந்து காலத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடித்திருக்கிறது. அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வைதான் நமது குடியரசைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. ஏழ்மை, கல்வியறிவில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி, உலக அரங்கிலேயே தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஒரு தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. சட்டமேதை அம்பேத்கரும், அவருக்குப் பிறகு வந்தவர்களும் நமக்கான தார்மீகக் கட்டமைப்பையும் பாதையையும் உருவாக்கித் தந்துள்ள நிலையில் அதில் தொடர்ந்து பயணிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது" –- என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அவர்கள்.

இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்துவரும் வேளையில் குடியரசுத் தலைவர் தனது குமுறலை வெளிப்படுத்தியதாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது.

'பன்முகத்தன்மை அவசியம்': குடியரசு தின உரையில் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய குடியரசு தலைவர்: முரசொலி!

கடந்த ஆண்டு உத்தகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பேசியவர்கள், பிற மதத்தவர்களை அழிப்பதற்காக காவல்துறையும், இராணுவமும் ஒன்று சேர வேண்டும் என்று பேசினார்கள். 'ஆயுதங்கள் வெல்லட்டும், நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம், தேவைப்பட்டால் அதற்காக கொலையும் செய்வோம்' என்று பேசினார்கள். இது போன்ற பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும் என்று ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமை தளபதிகள் ஐந்து பேரும், நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதினார்கள். இந்திய எல்லையின் தற்போதைய நிலைமையைச் சுட்டிக்காட்டி, 'இத்தகைய வன்முறை அழைப்புகள் உள்நாட்டில் ஒற்றுமையைச் சீர்குலைக்கும்' என்றும் 'வெளிப்புற சக்திகளுக்கு ஊக்கமளிக்கும்' என்றும் எச்சரித்திருந்தார்கள். இத்தகைய வெறுப்புப் பேச்சுகளைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள், இந்தியத் தலைமை நீதிபதிக்கும் அப்போது கடிதம் எழுதி இருந்தார்கள். இதை உச்சநீதிமன்ரம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இத்தகைய வன்முறை பேச்சுகள் சமூக ஊடகங்களில் பரவிய பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் அந்த மாநில அரசு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஒரே ஒருவர் பெயரை மட்டும் சேர்த்தது.

'பன்முகத்தன்மை அவசியம்': குடியரசு தின உரையில் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய குடியரசு தலைவர்: முரசொலி!

உத்தரப்பிரதேச மாநிலம் –- அமேதி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் அடித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர். உன்னா என்ற ஊரில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் சொன்ன ஒரு பெண் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அதனை விபத்தாக மாற்றிவிட்டார்கள். பசுவதையைத் தடுக்கிறோம் என்ற பெயரால் சிறுபான்மை மக்களும், தலித்துகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வகுப்புவாத வன்முறைகள் 2017 ஆம் ஆண்டு அதிகரித்தது. இப்படி எத்தனையோ சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்து வருகின்றன.

ஒரு காலத்தில் சில ஊர்வலங்களில் வன்முறைகள் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் வன்முறையை உருவாக்குவதற்காக ஊர்வலங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று சில பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்துகின்றன. பா.ஜ.க. ஆளூம் மாநிலங்களிலும், அதன் கூட்டணிகள் ஆளும் மாநிலங்களிலும் இவை அதிகமாக நடக்கின்றன என்றும், இந்த மாநிலங்களில் மதவாத சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் – ஒழுங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் அந்த பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். “வகுப்புவாத வன்முறையானது இந்தியாவுக்கு புதிதல்ல, ஆனால் இப்போது நடப்பதெல்லாம் வித்தியாசமானது” என்று அவர்கள் எழுதி வருகிறார்கள்.

சமீப காலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த ஆண்டு கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

''உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மற்றும் மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்சினையை தூண்டுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும்.

'பன்முகத்தன்மை அவசியம்': குடியரசு தின உரையில் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய குடியரசு தலைவர்: முரசொலி!

வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

'நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்' என்று பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் - இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். ''இங்கு பலிபீடத்தில் இருப்பது சிறுபான்மையினர் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டமும் தான்'' என்று அவர்கள் சொல்லி இருந்தார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் குடியரசுத் தலைவரையே இப்படிப் பேச வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories