முரசொலி தலையங்கம்

“தரையில் தவழ்ந்து பதவியைப் பிடித்த பழனிசாமி இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?” : முரசொலி கடும் சாடல்!

தன் கையில் இருந்த முதலமைச்சர் பதவியை வைத்து ஊழலைத் தவிர எதுவும் செய்யத் தெரியாமல் நான்காண்டு காலத்தை நாசமாக்கிய நச்சு சக்திதான் இந்த பழனிசாமி என்பது நாம் சொல்லி மக்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.

“தரையில் தவழ்ந்து பதவியைப் பிடித்த பழனிசாமி இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?” : முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சொல்ல வெட்கமாக இல்லையா பழனிசாமி?

‘பழைய வெட்டி’ பழனிசாமி, நாட்டு மக்கள், தான் ஆண்ட லட்சணத்தை மறந்திருப்பார்கள் என்று நினைத்துப் பேசி வருகிறார்.

‘’திராவிட மாடலை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதன்மை இடத்திற்கு வர அடித்தளம் இட்டதும் அ.தி.மு.க. தான்” என்று பேசுவதற்கு பழனிசாமிக்கு வெட்கமாக இல்லை.

நாடும், நாட்டு மக்களும் நம்மைப் போல ‘ஞாபக மறதிகள்’ என்று இவர் நினைத்துவிட்டார். ‘அறுக்க மாட்டாதவருக்கு 58 அரிவாள்’ என்பதைப் போல, தன் கையில் இருந்த முதலமைச்சர் பதவியை வைத்து ஊழலைத் தவிர எதுவும் செய்யத் தெரியாமல் நான்காண்டு காலத்தை நாசமாக்கிய நச்சு சக்திதான் இந்த பழனிசாமி என்பது நாம் சொல்லி மக்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.

நாடும், நாட்டு மக்களும் சிரிப்பாய்ச் சிரித்து வெறுப்பாய் வெறுத்து ஓரமாய் ஒதுக்கிய ‘து.ஒ.’ ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. அவர் தனது சட்டைப் பையில் மெடல் மாட்டிக் கொள்ளலாம்; கொடநாடு கொலை – கொள்ளைக்காக! மெடல் மாட்டிக் கொள்ளலாம்; பொள்ளாச்சி பாலியல் வன்மங்களுக்காக! மெடல் மாட்டிக் கொள்ளலாம்; தூத்துக்குடியில் துள்ளத்துடிக்க 13 பேரைக் கொன்றதற்காக! மற்றபடி, திருட்டு பாணி ஆட்சி நடத்தியவர், ‘திராவிட மாடல்’ பற்றிப் பேசக் கூடாது; பேசவே கூடாது.

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது பழனிசாமி காலத்தில்தான் நடந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது, ‘எனக்கு இது தெரியவே தெரியாது’ என்றவர் அவர்தான். ‘டி.வி.யைப் பார்த்துத் தான் உங்களைப் போல தெரிந்து கொண்டேன்’ என்று சொன்னவர் பழனிசாமி. ஆனால் உண்மை என்ன என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை முழுமையாக சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு அறியலாம். அப்போது பழனிசாமி பேசலாம், தான் ஆண்ட லட்சணத்தை!

இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் இப்போது இருக்கிறது. அப்போது உள்துறையைக் கவனித்துக் கொண்டு இருந்தவர் பழனிசாமிதான்.

அவரது நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகைய சரிவினை, - சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை, 2017-–18 மற்றும் 2018–-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இவர்.

உயிர்நீத்த காவல்துறையினருக்கு 2020–ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட, முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக்கூட மே 2021 வரை கையெழுத்திடாமல் விட்டுச் சென்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

2011 தி.மு.க. ஆட்சி விட்டுச் சென்ற மொத்தக் கடன் 1,01,541 கோடி ரூபாய், பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி விட்டுச் சென்ற கடன் 5,70,189.20 கோடி ரூபாய். அரசுத் துறையில் 5 லட்சம் கோடிக்கு கடன் ஆகிவிட்டது. இரண்டு லட்சம் கோடி கடனில் பொதுத்துறை நிறுவனங்களைத் தள்ளி வைத்தார் பழனிசாமி. கடந்த பத்தாண்டு காலத்தில் ஐந்து மடங்கு கடன் கூடி இருக்கிறது. பழனிசாமி இருந்தபோது, தொழில் தொடங்க வசதியான மாநிலங்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்தது தமிழ்நாடு. இப்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறி வந்திருக்கிறது. இவை எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையேதவிர -பழனிசாமிக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக வேண்டுமானால் பழனிசாமி மெடல் குத்திக் கொள்ளலாம். அவரது ஆட்சிக் காலத்தில்தான் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறையில் ரெய்டு நடந்தது. இதைவிட பெரிய சாதனை பழனிசாமிக்கு வேண்டுமா?

ஜெயலலிதா மரணம் அடைந்ததால், -சசிகலா சிறைக்குப் போனதால், - பன்னீர் செல்வம் ‘தர்மயுத்தம்’ என்ற நாடகக் கம்பெனி தொடங்கியதால் – ‘முதலமைச்சர்’ என்ற நாற்காலியை அடைய மண்புழுவைப் போல வயிற்றைத் தரையில் தேய்த்துச் சென்று அடைந்தவர் பழனிசாமி.

இவரது பாணி என்பது, ‘தரை பாணி’ ஆகும். தரையில் தவழ்ந்துபோய் பதவியைப் பிடித்து -தமிழ்நாட்டை கட்டாந்தரைக்குக் கொண்டுவந்ததுதான் இவரது பாணி ஆகும்.

banner

Related Stories

Related Stories