முரசொலி தலையங்கம்

”நேதாஜி வழி என்னவென்று தெரியுமா?”.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!

நேதாஜி கொள்கைப்படி பா.ஜ.க. அரசு நடப்பதாகச் சொல்லிக் கொள்வது, அவருக்கு இத்தனை ஆண்டுகள் கடந்து இழைக்கும் அவமானம் ஆகும்.

”நேதாஜி வழி  என்னவென்று தெரியுமா?”.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.10, 2022) தலையங்கம் வருமாறு:

சொந்த இயக்கத்தில் சொல்வதற்கு தலைவர்கள் யாரும் இல்லாததால் மாற்று இயக்கத் தலைவர்களை கபளீகரம் செய்தாக வேண்டிய அரசியல் நெருக்கடி பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சர்தார் படேல் அவர்களுக்கு, இத்தனை ஆண்டுகள் ஆண்ட காங்கிரசு கட்சிகூட இத்தனை பெரிய சிலையை அமைத்தது இல்லை; பா.ஜ.க.தான் அமைத்தது. தங்களிடம் சொல்வதற்கு படேல் போன்ற ஒரு தலைவர் இல்லாமல் போனது காரணமாக இருக்கலாம்!

அடுத்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கையில் எடுத்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையை மறுவடிவமைப்பு செய்து, அதற்கு ‘கடமைப் பாதை’ என்று பெயர் சூட்டி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28 அடி உயரம் கொண்ட சிலையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். பாராட்டுக்குரியதுதான் இது. அதனைத் திறந்து வைத்து பிரதமர் பேசி இருப்பதுதான் நெஞ்சை அடைக்கிறது.

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காட்டிய வழியைப் பின்பற்றியிருந்தால் இந்தியா முன்பே உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால் நேதாஜி மறக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ‘இந்தியா கேட்’ அருகே அமைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர போஸின் சிலை நமக்கு உத்வேகத்தையும் வழிகாட்டியாகவும் திகழும். இந்தியாவின் வருங்காலத்தை இதில் காணலாம். அந்தச் சக்தி இந்தியாவுக்கு புதிய பாதையை உருவாக்கும். நேதாஜியின் கனவு, லட்சியங்களின் அடிப்படையில் மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகள் அரசின் கொள்கைகளாக அமைந்துள்ளன” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

”நேதாஜி வழி  என்னவென்று தெரியுமா?”.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!

நேதாஜியின் கொள்கைப் படி தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்றால் எப்படி என்பதை அவர்தான் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விளக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும்; நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து - நேதாஜியை தங்களவராக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.வின் தந்திரம்தான் இந்த உரையில் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசியத்தின் அனைத்துப் பண்பாட்டு விழுமியங்களையும் ஒருங்கே கடைப்பிடித்த உன்னதத் தலைவர் ஆவார். தனது காலத்தில் இந்து –- முஸ்லிம் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் மட்டுமல்ல; மதச்சார்பற்ற நெறியைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார்.

சோசலிசத் தத்துவத்தை தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டிருந்தார். அரசியலில் எதேச்சாதிகார - சர்வாதிகாரத் தன்மைகளுக்கு எதிரானவராகவும் இருந்தார்.

ஆய்வாளர் சுபாஷினி அலி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளார். அந்த வகையில் நேதாஜியின் கொள்கையும், பா.ஜ.க.வின் கொள்கையும் ஒட்டாது என்பதே உண்மை. நேதாஜி, தான் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் கொள்கையாக ‘ஒற்றுமை,- நம்பிக்கை, - தியாகம்’ என்பதை அறிவித்திருந்தார். அதில் முதல் சொல்லே, பா.ஜ.க.வுக்கு கசப்பானது ஆகும்.

நேதாஜி அவர்கள் காங்கிரசுத் தலைவராக இருந்த காலத்தில் காங்கிரசு உறுப்பினர்கள் யாரும் இந்து மகாசபையிலோ, முஸ்லீம் லீக்கிலோ உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று தடை விதித்து இருந்தார். அதாவது மதச்சார்பற்றவர்களாக காங்கிரசு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று சொன்னார். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசுடன் இணைந்து ‘காங்கிரஸ் சோசலிஸ்ட்’களாகச் செயல்பட்டு வருவதை நேதாஜி தடுக்கவில்லை. அத்தகையவர்களை ஊக்குவிப்பவராக நேதாஜி இருந்தார்.

”நேதாஜி வழி  என்னவென்று தெரியுமா?”.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!

‘’மதச்சார்பு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள், காங்கிரசு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு எதிலும் உறுப்பினராக இருக்க முடியாது’’ என்ற விதியைச் சேர்த்தவரே நேதாஜிதான். அவர் காங்கிரசு கட்சித் தலைவராக இருக்கும்போதுதான் இந்த விதி சேர்க்கப்பட்டது. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகாசபையில் சேர்ந்தபோது அவரைச் சந்தித்த நேதாஜி, அவரைக் கடுமையாக எச்சரித்தார்.

கல்கத்தா மாநகராட்சித் தலைவராக இருந்தபோது முஸ்லிம்களுக்கான பணி இட ஒதுக்கீட்டை துணிச்சலுடன் நேதாஜி கொண்டுவந்து அமல்படுத்தினார்.

இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைக் கமாண்டராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ரங்கூனில் இருந்த பகதூர் ஷா ஜபாரின் நினைவிடத்துக்குச் சென்று நேதாஜி மலர் வளையம் வைத்தார். ‘1857 முதல் சுதந்திரப் போரின் போது, இந்து -– -முஸ்லிம் ஒற்றுமைக்கு மாபெரும் முன்னுதாரணமாக திகழ்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று நேதாஜி அப்போது சொன்னார். ‘அவரது உடலை எடுத்து வந்து டெல்லி செங்கோட்டையில் அடக்கம் செய்வேன்’ என்றும் சொன்னவர் அவர்.

1931 ஆம் ஆண்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவராக நேதாஜியும், அதன் செயலாளராக கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.தேஷ்பாண்டேவும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தியாவில் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்று 1933 ஆம் ஆண்டு சொன்னவர் நேதாஜி. இந்தியாவின் பயணம் என்பது சோசலிசத் திசைவழியில் செல்ல வேண்டும் என்றார். ‘எந்த வகைப்பட்ட பாசிசமாக இருந்தாலும் அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதே’ என்றும் சொன்னார். அதனால்தான் அவர், காங்கிரஸ் மாகாணக் கமிட்டித் தலைவராக ஆனபோது, கம்யூனிஸ்ட்களான பங்கிம் முகர்ஜியை துணைத்தலைவராகவும், பஞ்ச் கோபால் பாதுரியை துணைச் செயலாளராகவும் நியமித்துக் கொண்டார்.

”நேதாஜி வழி  என்னவென்று தெரியுமா?”.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முரசொலி தலையங்கம்!

இடதுசாரி சக்திகளின் ஆதரவு இருந்ததால்தான் காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை வீழ்த்திவிட்டு, காங்கிரஸில் அகில இந்தியத் தலைவராக நேதாஜி ஆக முடிந்தது. ‘’பாசிச நாட்டில் என்னை கம்யூனிஸ்ட் என்றே முத்திரை குத்துவார்கள்’’ என்று சொன்னவர் நேதாஜி.

சமரசமற்ற விடுதலைப் போராட்டம், - நம்பகமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, -நீர்த்துப் போகாத சுதந்திரம்,- ஆகியவற்றை – தனது இலக்காகச் சொன்னவர் நேதாஜி. ‘விடுதலை இந்தியாவை சோசலிசம் வழிநடத்த வேண்டும்’ என்று சொல்லி வந்தார். அத்தகைய நேதாஜி கொள்கைப்படி பா.ஜ.க. அரசு நடப்பதாகச் சொல்லிக் கொள்வது, அவருக்கு இத்தனை ஆண்டுகள் கடந்து இழைக்கும் அவமானம் ஆகும்.

banner

Related Stories

Related Stories