முரசொலி தலையங்கம்

5ம் ஆண்டில் தலைவர்.. 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து புதிய எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் முதல்வர்!

‘ஒன்றிய’ அரசிடம் மாநில சுயாட்சிக் கொள்கையை நிலைநாட்டப் போராடி வருகிறார். ஒன்றிய ஆட்சியை கூட்டாட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்.

5ம் ஆண்டில் தலைவர்.. 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து புதிய எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 29, 2022) தலையங்கம் வருமாறு:

28.8.2018 - புதிய விடியல் நாள்!

மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழினத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செலுத்தப் பாடுபட்டுக் கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நாள்!

காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவும் திருவாரூர் தந்த திராவிடத் திருமகன் கலைஞரும் - கட்டிக் காத்த கழகத்தை மூன்றாம் தலைமுறையாக இருந்து - தனது தலையால் தாங்க மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி எடுத்துக் கொண்ட நாள்!

கலைஞரின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா? - அவரைப் போல இவரால் முடியாதே? - என்று ஏக்கத்தால் சிலரும் - எரிச்சலால் சிலரும் புலம்பிக் கொண்டு இருந்த போது - அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமைதியாக மேடையேறி அவர் பேசத் தொடங்கும் போதுதான் - அண்ணாவே நேரில் வந்து பேசுவதைப் போலவும் - கலைஞரையே நேரில் கண்டது போலவும் இருந்தது!

பலரையும் ஆச்சர்யக் குறிகளாகவும் - அதிர்ச்சிக்குறிகளாவும் ஆக்கி அவர் முழங்கினார்!

‘‘நான் தலைவர் கலைஞர் இல்லை. அவர் போல் பேசத் தெரியாது. பேசவும் முடியாது. அவரைப் போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். இது பெரியார், - அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம்மிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்றாலும் தலைவரின் கொள்கை தீபம் நம்மிடத்தில் இருக்கிறது. தலைவர் கலைஞரின் கொள்கை தீபம் நம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்குச் சமம். அந்த முப்படை நம்மிடம் இருக்கிறது என்ற தைரியத்தில் துணிச்சலில், இந்தத் தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு, ஆதரவோடு இன்று நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்” - என்று அவர் சொல்லிவிட்டுச் சொன்னார்.

5ம் ஆண்டில் தலைவர்.. 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து புதிய எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் முதல்வர்!

‘‘விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஓர் அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன். நான் - நம் கழகம், - நம் தமிழினம், - நம் நாடு, - நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்” - என்றார் ‘தலைவர்’ மு.க.ஸ்டாலின் அவர்கள்!

இந்த நான்காண்டு காலத்தில் இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் உயிர்பெற்று வந்துவிட்டது. நின்று நிலைபெற்றுவிட்டது.

முதலில் அரசியல் வெற்றிகளை கழகத்துக்குப் பெற்றுக் குவித்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் - ஒரே ஒரு தொகுதி நீங்கலாக- அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற வைத்தது அவரது உழைப்பின் சாட்சியம் ஆகும். இன்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக முன்னேற்றக் கழகம் உட்கார்ந்து இருக்கிறது. இந்தியாவுக்குத் தேவையான அரசியல் நெறிகளுக்காக போராடும் மாபெரும் கூட்டமாக நாடாளுமன்றத்தை நடுங்க வைத்துக் கொண்டு இருக்கிறது நாடாளுமன்ற மக்களவை –- மாநிலங்களவை அணி!

பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லை தமிழகத்தில். 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலாக தோல்வியையே தழுவி நின்றோம். இம்முறையும் பணபலத்தால், அதிகார பலத்தால், ஆள்பலத்தால் வெல்வதற்கு பழனிசாமி கூட்டம் தனது அனைத்து அராஜகங்களையும் செய்து கொண்டு இருந்தது. அவை அனைத்தையும் ஏறிமிதித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆறாவது முறையாக அரியணை ஏற வைத்தது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்புக்கும் - திறமைக்கும் கிடைத்த சாட்சியம் ஆகும்!

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, - ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி,- அவை அனைத்திலும் பெரும்பான்மை இடங்களைக் கழகம் கைப்பற்றக் காரணமாக அமைந்தது அவரது திறமையும் ஆற்றலுமே ஆகும்!

5ம் ஆண்டில் தலைவர்.. 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து புதிய எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் முதல்வர்!

அந்த வகையில் தன்னை எதிர்நோக்கி வந்த அனைத்துத் தேர்தல் களங்களையும் வெற்றிக் களங்களாக மாற்றியதன் மூலமாக இந்த நான்காண்டு காலத்தில் அனைத்து அரசியல் வெற்றிகளையும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் காட்டி விட்டார்கள்.

கொள்கையை விடாமல் பேசுவது ஒரு காலக்கட்டம் என்றால், அதனை ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றிக் காட்டுவது என்பது இரண்டாவது கட்டம். இரண்டிலும் தனது உறுதித் தன்மையை நிரூபித்துக் காட்டி விட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘திராவிட மாடல்’ என்று சொன்ன ஒற்றைச் சொல்லில் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் யார் என்று அவர் முகம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தமிழாட்சியாக - தமிழர் ஆட்சியாக நடத்திக் காட்டி வருகிறார். சமூகநீதித் தத்துவத்தில் சிறுசரிவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ‘ஒன்றிய’ அரசிடம் மாநில சுயாட்சிக் கொள்கையை நிலைநாட்டப் போராடி வருகிறார். ஒன்றிய ஆட்சியை கூட்டாட்சியாக மாற்ற முயற்சிக்கிறார். இந்தியப் பத்திரிக்கைகள் அனைத்தும் அவரைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளன. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற ஆட்சி தங்கள் மாநிலத்திலும் உருவாக வேண்டும் என்ற அவர்களது ஏக்கம் புரிகிறது!

‘‘திராவிட முன்னேற்றக் கழகம் எனும் 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து கொண்டு முற்றிலும் புதிய ஓர் எதிர்காலத்தை நோக்கிக் கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்துச் செல்ல நான் நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய கோட்டை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தான் தலைவராக பொறுப்பேற்கும் போது சொன்னார் தலைவர். இன்று செய்து காட்டி இருக்கிறார் ‘முதல்வர்’, என்றும் அவர் முதல்வர்! மாண்புமிகு முதல்வர் ஏற்றமிகு வாழ்க!

banner

Related Stories

Related Stories