முரசொலி தலையங்கம்

“இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னுதாரணம்.. 'திராவிட மாடல்' பாதையை உலகம் பார்க்கும்” : முரசொலி!

உலகத்தின் பாதையில் அல்ல, நமது பாதையை உலகம் பார்ப்பதற்கான ஆட்சியாகச் செயல்படுத்திக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

“இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னுதாரணம்.. 'திராவிட மாடல்' பாதையை உலகம் பார்க்கும்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.நா.வின் குறிக்கோள்களும் திமுகவின் குறிக்கோள்களும் 2

ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்களை ஒப்பிட்டு எழுத வேண்டிய தேவை இப்போது ஏன் ஏற்பட்டது என்பதை முனைவர் சுதாகர் பிச்சைமுத்து அவர்கள் ஒப்பிட்டுச் சொல்லி இருப்பதுதான் மிக மிக முக்கியமானது ஆகும்.

''சமீப காலத்தில் அரசின் மக்கள் நலத்திட்டங்களை 'இலவசங்கள்' (freebies) என்ற குறுகிய பார்வையில் சிலர் மட்டம் தட்டி பேசுகின்றனர். குறிப்பாக, திராவிட ஆட்சிகள் இலவசத்தைத் தந்து மக்களை சோம்பேறிகள் ஆக்கி வைத்திருக்கிறார்கள், கல்வி நிறுவனங்களில் தரம் கெட்டு விட்டது என்றெல்லாம் விசமப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

திராவிட அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் (மதிய உணவு தொடங்கி இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, மாணவிகளுக்கு மிதி வண்டி, இதர) மூலம் பயனடைந்த பலருமே இந்த விசமப் பரப்புரைகளை நம்புகிறார்கள் என்பதுதான் அதிக வருத்தத்தை தருகிறது.

உலக நாடுகள் பலவற்றிற்கு ஆய்வு நிமித்தம் சுற்றி வரும் என்னால் அந்நாடுகளில் உள்ள மக்கள் நலத்திட்டங்களைப் பார்க்கும் போது அதை அவர்களின் 'உரிமை'களாக பார்க்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த குறுகிய பார்வை" என்று கேள்வி எழுப்பிய சுதாகர் பச்சைமுத்து, அதற்கான விடையாகத்தான் இந்தப் புத்தகத்தை எழுதியதாகச் சொல்கிறார்.

''உண்மையில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட முதல் தலை முறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம் பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் நம் சமூகத்திற்குக் கிடைத்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் திராவிட ஆட்சிகள் முன்னெடுத்த சமூக நலத்திட்டங்கள் மூலம் எப்படி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சமூகங்கள் வளர்ச்சியை எட்டியுள்ளன என்றும், அதன் வழியே முன்னேறிய மாநிலங்களில் நம் மாநிலம் முதன்மையாக உள்ளது என்பதையும் நாம் வெகுசன மக்களுக்கு, தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

2014 பிரதமர் தேர்தலின் போது ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட 'குஜராத் மாடல்' எனும் போலி பிம்பத்தை போல அல்ல நம் தமிழக மாடல். நம் தமிழக மாடல் உண்மையிலேயே மிகச்சிறந்தது, அது எப்படி சிறந்தது என தரவு களுடன் இந்நூலில் சொல்லியுள்ளேன்" என்று சொல்லி இருக்கிறார் சுதாகர் பச்சைமுத்து.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தை வளப்படுத்தி வருவது 'திராவிட மாடல்' என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைவர்க்குமான வளர்ச்சி - இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று சொல்லி வருகிறார். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதை நோக்கி இவ்வையகம் செல்ல வேண்டும் என்பதையும் சொல்லி வருகிறார்.

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இது சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரம் தான். தேசிய சராசரி பணவீக்கமானது 6.2 சதவிகிதத்தில் இருந்து 7.79 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கமானது 5.37 சதவிகிதமாக குறைந்தது.

இது குறித்து பிசினஸ் லைன் எழுதிய கட்டுரையில், தமிழகத்தில் உணவுப் பொருள் விலை குறைந்துள்ளது என்று குறிப்பிட்டது. எரிபொருள் விலை அதிகரித்தாலும், பெண்களுக்கு வழங்கிய இலவச பேருந்து வசதி அதனை ஈடுசெய்து விட்டது என்று குறிப்பிட்டது. பெண்களின் போக்குவரத்து செலவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.

'' கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது" என்று வர்த்தக இதழ்கள் அப்போது எழுதியது. இதற்குக் காரணமாக அமைந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தான்.

வளர்ச்சி என்பதை தொழில் வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாக மாற்ற திமுக திட்டமிட்டு இருப்பதுதான் இதன் தனித்தன்மை ஆகும். தொழில் நிறுவனங்கள், வேலைகளை உருவாக்குவதை விட முக்கியமானது அதற்கான பணியாளர்களை - திறமையாளர்களை உருவாக்குவது ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மையான திட்டமாகவும் - கனவுத் திட்டமாகவும் இருக்கும் 'நான் முதல்வன்' திட்டமானது இத்தகைய நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்களைத் தகுதிப்படுத்துவதன் மூலமாக தமிழகத்தைத் தகுதிப்படுத்த நினைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதனுடைய பயன்பாடு என்பது இப்போது தெரிவதை விட பத்து - பதினைந்து ஆண்டுகள் கழித்துத்தான் மிகத் தெளிவாகத் தெரியும். 'காமராசர் உணவு போட்டதால் பள்ளிக்குப் போனேன்.

கட்டணமில்லை என்று சொன்னதால் கல்லூரிக்கு போனேன்' என்பதைப் போல, 'முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் நான் எனது தனித்திறமைகளை வளர்த்து முன்னேறினேன், இந்தளவுக்கு உயர்ந்து நிற்கிறேன்' என்று அன்று சொல்வார்கள்.

ஐ.நா.குறிக்கோள்களை வைத்துக் கொண்டு திமுக இத்தகைய திட்டமிடுதல்களைச் செய்யவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். நீதிக்கட்சியின் முதல் அறிக்கை வெளியான ஆண்டு 1916. அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட கோட்பாடுகளின் விரிந்த வடிவம் - செழுமைப்படுத்தி வளர்ந்த வடிவம் தான் திமுகவின் இன்றைய தேர்தல் அறிக்கை ஆகும்.

ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமுதாயம் எழுந்து நிற்க எது தேவையோ அதனை நீதிக்கட்சியின் தலைவர்கள் தங்களது அறிக்கையாகக் கொடுத்தார்கள். அதனை வென்றெடுக்கத் தேவையான தடைகளை தந்தை பெரியார் உடைத்தார். அதற்கு ஆட்சியியல் வடிவம் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா. அதன் விரிந்த பொருளை அடையாளம் கண்டார் தமிழினத் தலைவர் கலைஞர். விரிந்த பொருளின் அனைத்து வளர்ச்சியையும் அடையத் துடிக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அதனால் தான் இன்றைய 'திராவிட மாடல்' அரசானது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கு முன்னுதாரணமான ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. உலகத்தின் பாதையில் அல்ல, நமது பாதையை உலகம் பார்ப்பதற்கான ஆட்சியாகச் செயல்படுத்திக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

banner

Related Stories

Related Stories