முரசொலி தலையங்கம்

திராவிடர்களும் ஆளுநரும் (1).. ‘திராவிடம்' குறித்து ஆளுநருக்கு பாடம் எடுத்து பதிலடி கொடுத்த ‘முரசொலி’ !

தமிழ், தமிழ் இலக்கியம், கல்வி, பண்பாடுகள், சனாதனம், வேதங்கள் குறித்து அவர் சொல்லி வரும் கருத்துகள் எல்லாம் அதரப் பழைய கவைக்குதவாத கருத்துகள் ஆகும். எந்த ஆய்வு அடிப்படையும் இல்லாத கற்பனாவாதங்கள் ஆகும்.

திராவிடர்களும் ஆளுநரும் (1)..   ‘திராவிடம்' குறித்து ஆளுநருக்கு பாடம் எடுத்து பதிலடி கொடுத்த ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக ஆளுநராக வந்திருக்கும் ஆர்.என். ரவி அவர்கள் இங்கு வந்ததில் இருந்து ஆகாத கருத்துகளைச் சொல்வதையே தனது வேலையாக வைத்துச் செயல்பட்டு வருகிறார். தமிழ், தமிழ் இலக்கியம், கல்வி, பண்பாடுகள், சனாதனம், வேதங்கள் குறித்து அவர் சொல்லி வரும் கருத்துகள் எல்லாம் அதரப் பழைய கவைக்குதவாத கருத்துகள் ஆகும். எந்த ஆய்வு அடிப்படையும் இல்லாத கற்பனாவாதங்கள் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக ‘திராவிடம்' குறித்த ஆராய்ச்சியில் இப்போது அவர் இறங்க ஆரம்பித்திருக்கிறார். வேலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் அவர்கள், “ஆங்கிலேயர்கள் தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்று நோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துத்தான் வடக்கில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென் பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் தான் திராவிடர் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள்” என்ற அரிய கண்டு பிடிப்பை ஆளுநர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

திராவிடர்களும் ஆளுநரும் (1)..   ‘திராவிடம்' குறித்து ஆளுநருக்கு பாடம் எடுத்து பதிலடி கொடுத்த ‘முரசொலி’ !

இதில் இரண்டு விதமான தவறான வரலாறுகளைக் கட்டமைக்க ஆளுநர் நினைக்கிறார்.

* ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால் இங்கே எந்த வேற்றுமையும் யாரிடமும் இல்லை என்பது.

* ஆங்கிலேயர்கள் தான் திராவிடர் என்ற சொல்லை வைத்து வட இந்தியா - தென் இந்தியா என்று பிரித்தார்கள் என்பது இரண்டாவது. இவை இரண்டுமே தவறான வரலாறு ஆகும்.

இந்தியச் சாதி அமைப்பு - சமூக அமைப்பு குறித்த சாதாரணப் புரிதல் இருப்பவர்கள் கூட இந்தியச் சமூக அமைப்பில் இருந்த வேறுபாடு - மாறுபாடுகளுக்கான தோற்றுவாய் எது என்பதை அறிவார்கள். இந்தத் தோற்றத்துக்கான வரலாறு யாரால், எப்போது, எதனால் தொடங்கப்பட்டது என்பதை அறிவார்கள். இவை அனைத்தையும் மறைக்க நினைக்கிறார் ஆளுநர்.

இன்னொன்று, ‘திராவிடர்' என்றால் ஏதோ திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிட இயக்கங்களின் வார்த்தையாக ‘திராவிடம்' இங்கே உச்சரிக்கப்படுவதாக நினைத்து தனது காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகிறார் ஆளுநர்.

‘திராவிடம்' என்பது இனச் சொல்லாக, இடச் சொல்லாக, மொழிச்சொல்லாக இருந்து இன்று ஒரு அரசியல் சொல்லாக வளர்ந்து நிற்கிறது. ‘தமிழ் - தமிழன் - தமிழம்' என்று சொல்லத் தெரியாத வட இந்தியர்களால் - அதாவது ‘ழ' என்ற எழுத்தை உச்சரிக்க முடியாதவர்களால் திராவிடம் என்று உச்சரிக்கப்பட்டது என்பதே பாவாணர் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் முடிவு.

‘மொழி வரலாறு' எழுதிய மு.வரதராசனார் அவர்கள், வால்மீகி இராமாயணத்திலும் மனு நூலிலும் பாரதத்திலும் பாகவதத்திலும் திராவிடர் என்ற சொல் வழக்கு உள்ளது என்கிறார். “கி.பி. எட்டாம் நூற்றாண்டில் குமரிலப்பட்டர் என்பவர் ஆந்திர திராவிட பாஷா என்ற தொடரை வழங்கியுள்ளார். அவர் கருத்துப்படி ஆந்திரா என்பது தெலுங்கைக் குறிக்கவும், திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதாகிறது.

திராவிடர்களும் ஆளுநரும் (1)..   ‘திராவிடம்' குறித்து ஆளுநருக்கு பாடம் எடுத்து பதிலடி கொடுத்த ‘முரசொலி’ !

1573 இல் தாரநாத் என்பவர் எழுதிய புத்தமத நூலில் ‘திரமிள' என்ற சொல் தமிழைக் குறிக்கிறது. தென்னாட்டு மக்களை பொதுவாகக் குறிக்க திராவிடர் என்ற சொல்லை வடநூல்கள் வழங்குகின்றன. தமிழில் உள்ள ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள் ‘திராவிட வேதம்' என்று குறிக்கப்படுதலும் உண்டு.

சங்கராச்சாரி யார் திருஞானசம்பந்தரை ‘திராவிடச் சிசு' என்று கூறியுள்ளார். விந்திய மலைக்குத் தெற்கே வழங்கிய மக்களை மகாராஷ்டிரர், ஆந்திரர், திராவிடர், கருநாடகர், கூர்ச்சரர் என்று பகுத்து பஞ்ச திராவிடர் என்று கூறும் மரபும் வடமொழியில் காணப்படுகிறது. தமிழைத் திராவிடம் என்ற பெயரால் குறிப்பிட்டமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். தமிழ் என்ற சொல்லுக்கு நேரான வடசொல் திராவிடன் என்பதைக் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.

தமிழ், திராவிடம் என்பவை வேறுபட்ட இரண்டு சொற்கள் போல் காணப்படினும் ஒன்றன் திரிபே மற்றது என்பதையும் அவர் உடன்படுகிறார்” என்று சொல்லும் மு.வ., “தமுளியா என்ற திரிபை டச்சு பாதிரிமார்களும் தமிழிரி என்ற திரிந்த வடிவத்தை ரோமர்களும், தெஹிமோலோ என்ற திரிபைச் சீனரும் வழங்கியது போலவே தமிழொலி பயிலாத ஆரியர், தமிழ் என்பதையே தமிளோ, தரமிளோ, திரமிளல்ம், திரவிடம், திராவிடம் எனத் திரித்து வழங்கினர் எனக் கொள்வதே பொருந்தும்” என்கிறார். இப்படிச் சொன்னவர் மு.க. அல்ல, மு.வ.!

திராவிடர்களும் ஆளுநரும் (1)..   ‘திராவிடம்' குறித்து ஆளுநருக்கு பாடம் எடுத்து பதிலடி கொடுத்த ‘முரசொலி’ !

ஆளுநர் சொல்வதைப் போல ஆங்கிலேயர் உருவாக்கிய சொல் அல்ல, ‘திராவிடம்'. இரா.இராகவய்யங்கார் தான் எழுதிய 'தமிழ் வரலாறு' நூலில், “வடமொழியாளர், த்ரமிளர் எனத் தமிழ்மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் நாட்டினரையும் மொழியினரையுங் குறித்தனர் என்பது உண்மை” என்கிறார்.

“விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாட்டைப் ‘பஞ்ச திராவிடம்' என்று வடநூலார் வழங்குதல் நூல்களிற் கண்டது. ‘ஐவகைத் திராவிடத்தினும் வேறாய்த் தெற்கே தலைசிறந்தது தமிழே யென்பதும்' என்று சொல்லும் அவர், காஞ்சி புராணத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுகிறார். ‘எவ்வினையு மோப்புதலாற்றிராவிட மென்றியல் பாடை' என்கிறது காஞ்சிப்புராணம். இப்புராணம் எழுதியவர் ஆங்கிலேயர் அல்ல. ‘திரவிடம்' என்ற சொல்லை தமிழைக் குறிக்கப் பயன்படுத்துகிறார் தாயுமானவர். “ வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவர். அவர் ஆங்கிலேயர் அல்ல.

நிகண்டுகள், மற்ற நூல்களில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு குறித்து மொழியாராய்ச்சியாளர் கே.வி.இராமகிருஷ்ணராவ் தனது ஆய்வுக்கட்டுரையில் பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிக் காட்டுகிறார். இவை அனைத்தும் ஆங்கிலேயர் இங்கு வருவதற்கு முந்தையவை ஆகும்.

7,8,11 ஆகிய நூற்றாண்டுகள் என்று சொல்லப்படும் நாமதீப நிகண்டில் தமிழ் என்பதற்கு ‘திரவிடம்' என்று சொல்லை சிவசுப்பிரமணியக் கவிராயர் பயன்படுத்தி இருக்கிறார். இவரது நூலைத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம், நாட்டில் பேசப்படும் 18 மொழிகளுள் ஒன்றாக திராவிடத்தைக் குறிப்பிடுகிறது. ‘காந்தத்து உபதேசக் காண்டம்’ என்ற நூல் அகத்தியருக்கு சிவபெருமான் திராவிடத்தின் இலக்கணத்தை எப்படி சொல்லிக் கொடுத்தார் என்கிறது. பிரயோக விவேகம் நூலின் ஆசிரியர் சமஸ்கிருதச் சொல்லான திரமிளம் தான் தமிழ் என்றாகி இருக்க வேண்டும் என்று மாற்றிச் சொல்கிறார்.

இவர்கள் யாரும் ஆளுநர் சொல்வதைப் போல ஆங்கிலேயர்கள் அல்ல!

banner

Related Stories

Related Stories