முரசொலி தலையங்கம்

“ஆன்மிகப்போலிகளின் உண்மை முகத்தைக் கிழித்து அடையாளம் காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” : முரசொலி புகழாரம் !

‘சாதி’ என்பது ஒழிக்கப்பட்ட சூழல் இன்னும் ஏற்படவில்லை என்றாலும், ‘சாதி'ப் பிரிவினையுடன் பொதுவெளியில் செயல்படுவது அவமானம் என்கிற அளவுக்கு பக்குவப்பட்ட சமூகம்தான் தமிழ்ச்சமூகம்.

“ஆன்மிகப்போலிகளின் உண்மை முகத்தைக் கிழித்து அடையாளம் காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” : முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஆற்றிய உரை, அரசியல் - ஆட்சியியல் - அறவியல் - இறையியல் ஆகிய அனைத்துக்கும் இலக்கணம் வகுப்பதாக அமைந்திருந்தது.

“அனைத்தையும் உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை மூலமாகவும் சிறப்பான பணிகளை இந்த அரசு செய்து வருகிறது. கோவிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் திராவிடமாடல் என்று நான் சொல்லி வருகிறேன்.

இன்னும் சொன்னால், திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் இந்துசமய அறநிலையத்துறைச் சட்டமே - 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோவில்களை முறைப்படுத்துவதற்காக ஒரு சட்டம் வேண்டும் என்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று சட்டம் போட்ட ஆட்சிதான் நீதிக்கட்சியின் ஆட்சி. எது திராவிட மாடல் என்று கேலி பேசுபவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்குச் சிலர் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல, ஆன்மிகத்தின் பேரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தைப் பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருக்க முடியாது.

* ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் எங்கள் அறநெறி.

* ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எங்கள் அறநெறி.

* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்கள் அறநெறி.

* எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்பது தான் எங்கள் அறநெறி. அத்தகைய நெறிகொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்” என்று முழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் திருவண்ணாமலை என்ற மாவட்டத்தில் மட்டும் அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், “இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கிற கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல, அவர்கள் ஆன்மிகவியாதிகள். ஆன்மிகப்போலிகள்” என்றும் உண்மையான முகத்தைக் கிழித்து அடையாளம் காட்டி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்ததும், பெருவாரியான வெற்றிகளைப் பெற்றதும், முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்த நேரத்தில் இருந்து முதலமைச்சர் அவர்கள் துடிப்போடும், சிறப்போடும் திட்டங்கள் தீட்டி வருவதும், நித்தமும் மக்களைச் சந்தித்து வருவதும், கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் வரை நிறைவேற்றப்பட்டு வருவதும், இதன் மூலமாக மக்கள் செல்வாக்கு என்பது முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதையும் பார்க்க ‘சிலருக்குப்’ பிடிக்கவில்லை. சில பத்திரிக்கைகளுக்கும் பிடிக்கவில்லை. அம்மிக் குழவியால் தனது வயிற்றை காந்தாரி தானே அடித்துக் கொண்டதைப் போல அடித்துக் கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்கு, இந்த ஆட்சி மீதோ, முதலமைச்சர் மீதோ குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்படி ஏதாவது தென்பட்டாலும் அதனை உடனடியாக முதலமைச்சர் அவர்கள் சரி செய்து விடுகிறார். இத்தகைய ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு அவர்களது கெட்ட மூளை சம்மதிக்கவில்லை.

அதனால் அவதூறு கிளப்புவதையே தங்களது தொழிலாக மாற்றி - இந்து சமய அறநிலையத் துறை குறித்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள். ‘வாட்ஸ் அப்’களில் கடைந்தெடுத்த பொய்களைப் பரப்புகிறார்கள். கோவிலை இடிப்பதாகவும், பல அர்ச்சகர்களுக்கு வேலைகள் போனதாகவும், ஆச்சாரம் கெட்டுப்போனதாகவும் பொய்களைப் பரப்புகிறார்கள். அப்படி எதுவும் நடக்க வில்லை. ஆனால் நடப்பதைப் போல பொய்க்காட்சிகள் சித்தரிக்கப் படுகின்றன.

இதன் மூலமாக இந்த ஆட்சி மீது களங்கம் கற்பித்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு உண்மைகள் தெரியும். அவர்களது இயல்பான வாழ்க்கை இயல்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மனமகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் வாழ்கிறார்கள். ‘தி.மு.க. ஆட்சிதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் தங்கள் காப்பரண்’ என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்து அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அத்தகைய மக்களை சாதி, மதம் ரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறது ஒரு கும்பல். தமிழ்நாடு எப்போதும் தனது தனிப்பட்ட விருப்பங்களை, அரசியலுக்குள் புகுத்திப் பார்ப்பதை அங்கீகரிப்பது இல்லை. மதமும், அவரவர் வணங்கும் தெய்வமும் அவரவர் விருப்பம் என்பதை உணர்ந்த, பக்குவப்பட்ட சமூகம்தான், நமது தமிழ்ச்சமூகம். ‘என் சாமி எனக்கு உசத்தி என்பதைப் போல உன் சாமி உனக்கு உசத்தி’ என்பதை ஒப்புக் கொண்ட சமூகம் நமது தமிழ்ச்சமூகம்.

‘சாதி’ என்பது ஒழிக்கப்பட்ட சூழல் இன்னும் ஏற்படவில்லை என்றாலும், ‘சாதி'ப் பிரிவினையுடன் பொதுவெளியில் செயல்படுவது அவமானம் என்கிற அளவுக்கு பக்குவப்பட்ட சமூகம்தான் தமிழ்ச்சமூகம். அனைவரும் கலந்து வாழும் சமூக அமைப்பானது கல்வியால் - வேலைகளால் - நகரமைப்புகளால் - நாகரிகத்தால் - கம்யூன் வாழ்க்கையால் இங்கு ருவாக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் உருவாக்கியது நமது திராவிட இயக்கம், திராவிடத்தின் தனிப்பெரும் தலைவர்கள். அதனைப் போற்றிப் பாதுகாத்து வருகிறார் நமது முதலமைச்சர் அவர்கள். அவர் முன்னெடுக்கும் திட்டங்கள் சாதி- மத சக்திகளை முனை மழுங்க வைத்துள்ளது. அதனைத்தான் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நமது திராவிடப் பாதையில் இருந்து நாம் விலகமுடியாது என்பதைத்தான் முதலமைச்ச்சரின் திருவண்ணாமலை உரை தெளிவுபடுத்துகிறது.

banner

Related Stories

Related Stories