
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன்.07 2022) தலையங்கம் வருமாறு:
2020 ஜனவரி மாதமே உலகநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான தொடர்பைக் கட்டுப்படுத்தி இருந்தால் - தொற்றே உள்ளே நுழைந்திருக்காது. கேரளாவில் இருந்து வந்த மாணவிக்கு தொற்றை உறுதி செய்தது ஜனவரி 31. உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசர நிலையை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவித்தது. சோவியத் நாடு தனது நாட்டுக்குள் வந்த வெளிநாட்டவர் அனைவரையும் உடனடியாக வெளியில் அனுப்பியது. நம்முடைய பிரதமர், ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை அமைப்பை அறிவித்துக் கொண்டு இருந்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் பேசிக் கொண்டு இருந்தார் நம்முடைய பிரதமர். சீன அதிபர் ஷி ஜின் பிங்க்கு நம்முடைய பிரதமர் கடிதம் அனுப்பினார். “கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. உயிரிழப்புகள் துரதிஷ்டவசமானவை. உங்களுக்கு இந்தியா துணை நிற்கும்” என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. சீனாவுக்கு முகக்கவசம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவுவதால் மருத்துவ உபகரணங்கள் எதையும் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று ஜனவரி 31ஆம் தேதி எடுத்த முடிவை வாபஸ் வாங்கி இருக்கிறார்கள் பிப்ரவரி 11ஆம் தேதி.
“வைரஸ் இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது. இதனை பிரதமர் அலுவலகமும், சுகாதாரத் துறையும் கண்காணித்து வருகிறது” என்று ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலாளர் டெல்லியில் கூறினார் பிப்ரவரி 15 ஆம் தேதி. பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியா வாரி வழங்குவதாக இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி பெருமைப்பட்டுக் கொண்டார். உலகம் முழுக்க 2000 பேர் இறந்துவிட்டதாக புள்ளிவிவரம் சொல்லிக் கொண்டு இருந்த போதுதான் இந்தியாவுக்குள் வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
குஜராத் மைதானத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களைத் திரட்டி வைத்துக் கொண்டு அமெரிக்க அதிபரோடு நின்றார் பிரதமர். விஷவாயு தடுப்பு உபகரணங்கள், அறுவைச் சிகிச்சைக் கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாசப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டோருக்கான உபகரணங் கள் உள்ளிட்ட 8 பொருட்களின் மீதான தடையை நீக்கி சீனாவுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தது பா.ஜ.க. அரசு.
மார்ச் 3 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடி விட்டது. மார்ச் 5ஆம் தேதி தான் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமான முதல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தார்கள். இந்த சூழ்நிலையிலும் இந்திய அரசாங்கம் பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கான திட்டமிடுதலில் இருந்தது. மார்ச் 17ஆம் தேதி வங்கதேசத்துக்கு பிரதமர் செல்ல இருக்கிறார் என்று அரசு அறிவித்தது.
இவ்வளவுக்கு மத்தியிலும் மத்தியபிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டு வர கொல்லைப்புற வாசலில் இருந்து மர்ம எம்.எல்.ஏ.க்களை இழுத்துக் கொண்டு இருந்தார்கள்.
மார்ச் 15ஆம் தேதி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 84 ஆகி, இரண்டு பேர் பலியானார்கள் என்பதற்குப் பிறகு தேசியப் பேரிடர் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. இரண்டே இரண்டு பேருக்குத் தொற்று ஏற்பட்டதும் கேரள மாநிலப் பேரிடர் என்று அறிவித்தவர் பினராயி விஜயன். பிப்ரவரி 4ஆம் தேதியே அறிவித்துவிட்டார் பினராயி. 41 நாள் கழித்து அறிவித்தது பா.ஜ.க. அரசு.
இந்தியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்ட அன்று, காஷ்மீரைச் சேர்ந்தவர்களோடு தீவிர ஆலோசனையில் இருந்தார் பிரதமர். இவை அனைத்துக்கும் பிறகுதான் மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, ஜனவரி முதல் வாரத்தில் செய்திருக்க வேண்டியதை மார்ச் கடைசி வாரத்தில் செய்ததன் விளைவுதான் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பாதிப்புகள் என்பதை மறக்க முடியுமா?
தடுப்பூசியை வாழ்க்கைப் பிரச்சினையாக இல்லாமல் வர்த்தகப் பிரச்சினையாகப் பார்த்தார்கள். இல்லை என்று மறுக்க முடியுமா? ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தடுப்பூசியை தக்க வைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததன் விளைவே தடுப்பூசித் தட்டுப்பாடு என்பது புரியாத கணக்கு அல்ல. குறிப்பிட்ட தடுப்பூசியை குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்க என எல்லாமே குறிப்பிட்டவர்களுக்கான அரசாக மாறியதே தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்பதை மறுக்க முடியுமா?
இவை அனைத்துக்கும் மேலாக ஊரடங்கு காரணமாக - ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு கால்நடையாக மக்களை பாவ யாத்திரை பண்ண வைத்ததை விடக் கொடுமை இருக்க முடியுமா? நாட்டின் ஒரு
எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு 2020 ஆம் ஆண்டும் நடந்துதான் போகவேண்டும் என்ற கொடூரச் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்த நிதி உதவி என்ன? உணவு உதவி என்ன? உயிர் உதவி என்ன? கொரோனா இல்லை என்பதால் இவை எதுவும் நடந்ததை மறந்து விட முடியுமா?
மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டார்கள் என்றால் இதில் பா.ஜ.க. அரசின் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி விடை சொல்லப்பட வேண்டியதுதானே? தங்களது சாதனையாகக் காஷ்மீரைக் காப்பாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவுதான் காஷ்மீரின் அழிவுக்குக் காரணம் என்று சொன்னார்கள். அந்த சட்டத்தை நீக்கிய பிறகும் அங்கு பயங்கரவாத தாக்குதல் நின்றதா? இன்றைக்கு காஷ்மீரின் முழு அதிகாரம் யார் கையில் இருக்கிறது? அப்போதும் வன்முறை நடக்கிறது என்றால் காரணம் யார்? பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
எட்டு மாதங்களில் காஷ்மீரில் கொல்லப்பட்டவர்கள் 28 பேர். கொல்லப் பட்டவர்களில் 7 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அப்படி ஒரு அரசை உருவாக்க என்ன தயக்கம்? புதிய புதிய கொலையாளிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றால் - இதற்கும் 370 சட்டத்துக்கும் அதனை நீக்கியதற்கும் தொடர்பில்லை என்றுதானே பொருள்?
( தொடரும்)








