முரசொலி தலையங்கம்

வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி.. பொற்காலத்துக்கான அடித்தளத்தை உருவாக்கும் முதல்வர் - முரசொலி !

தமிழ்நாட்டின் பொற்காலத்துக்கான அடித்தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள்.

வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி.. பொற்காலத்துக்கான  அடித்தளத்தை உருவாக்கும் முதல்வர் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத்துறைச் செயலாளர்களுடன் நடத்தி இருக்கும் ஆலோசனைக் கூட்டமானது, அரசு நிர்வாகத்தை முடுக்கிவிடும் செயலாக அமைந்திருக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள், உடனுக்குடன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தாக வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவு அவசியத் தேவையாகும்.

ஒரு முதலமைச்சர் எத்தனையோ அரிய பல திட்டங்களை உருவாக்கி அறிவித்தாலும், அதனைக் கடைக்கோடி மனிதன் கையில் கொண்டுசேர்க்க வேண்டியவை நிர்வாக அமைப்புகள்தான். அதாவது அதிகாரிகள்தான். ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகச் சொல்லப்படுபவைகளில் ஒன்று நிர்வாகம். அந்த நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்படுமானால், எந்தத் திட்டமும் அதற்கு உரிய பயனைத் தராது.

சாதாரண நன்மை அளிக்கும் திட்டங்களைக்கூட முழுமையாகச் செயல்படுத்தும் போது அது முழு நன்மையை ஏற்படுத்தி விடுவது உண்டு. பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அரைகுறையாகச் செயல்படுத்தும் போது சிறு நன்மைகூட விளையாமல் போய்விடுவதும் உண்டு. ( ஒரே ஒரு உதாரணம் - கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள்! ) இவை அனைத்துமே நிர்வாகத்தின் கையில் - அதாவது அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது.

எந்த ஒரு திட்டத்தையும் முதலமைச்சரின் திட்டமாக - ஒரு கட்சி ஆட்சியின் திட்டமாக இல்லாமல் - அதிகாரிகள் அனைவரும் தங்கள் திட்டமாக நிறைவேற்றுவார்களேயானால் அதனால் விளையும் நன்மை என்பது பெரியது. அதனால்தான் - திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள். அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும்.

அதிகாரிகள், புறக்கணித்தால் அது மெலியும். அதிகாரிகள் என்பவர்கள் தனி மனிதர்களாக இருக்க முடியாது. செயல்படவும் முடியாது. அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்பட வேண்டும். அத்தகைய காலம்தான் பொற்காலமாக அமையும். அத்தகைய பொற்காலத்துக்கான அடித்தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள்.

அரசுத் துறை அதிகாரிகளுடன் இரண்டு நாட்களாகக் கலந்துரையாடல் நடத்திய முதலமைச்சர் அவர்கள், அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். சில திட்டங்களில் இருக்கும் சுணக்கத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எந்தளவு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதேகாலத்துக்குள் முடியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் முதலமைச்சர்.

திட்டங்களை வகுக்கவும், நிறைவேற்ற வழிமுறைகளைச் சொல்லவும் துறைசாரா வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனைகளைப் பெறுங்கள் என்று முதலமைச்சர் வழிகாட்டி உள்ளார்கள். முதலமைச்சர் ஆனதும் தமிழ்நாட்டுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அவர் அமைத்தார். அது உலகம் பாராட்டும் குழுவாக அமைந்திருந்தது.

பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்!

எஸ்தர் டஃப்லோ அவர்கள் - உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர்!

அரவிந்த் சுப்பிரமணியம் அவர்கள் - ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் !

ஜான் ட்ரீஸ் அவர்கள் - பொருளாதார நிபுணர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர்!

எஸ்.நாராயணன் அவர்கள் - ஒன்றிய அரசின் நிதிச் செயலாளராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளை திறம்பட வழிநடத்தியவர்!

மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் இந்தியாவைப் பற்றி அதிகமாக அறிந்தவர்கள். தமிழகச் சமூக நிலையை உணர்ந்தவர்கள். இவர்களுக்கும் முதலமைச்சருக்குமான கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆலோசிப்பதாக இல்லாமல், அவர்கள் தங்களது ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்கள்.

பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில கொள்கை வளர்ச்சிக் குழு - தினந்தோறும் பல்வேறு ஆலோசனைகளின் மூலமாக அரசை வழிநடத்தி வருகிறது. இதேபோல் திறமையான புலமையை உள்வாங்கி வளர வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணமாக இருக்கிறது.

வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தச் சொன்னதும், அரசுத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டதும், திட்டங்கள் எந்தளவு செயல்படுத்தப்படுகிறது என்பதை கள ஆய்வுகள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும்.

அனைத்துக்கும் மேலாக துறையின் அமைச்சர் - அரசுச் செயலாளர் - மாவட்ட ஆட்சியர்கள் ஆகிய மூவரும் ஒரே நேர்கோட்டில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர். “ஏழை எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இன்றிப் பணியாற்றுங்கள்” என்ற அவரது கட்டளைதான் கல்வெட்டாகச் செதுக்கப்பட வேண்டியது ஆகும். இதனை மட்டும் அரசு அதிகாரிகள் சிறப்புக் கவனத்துச் செயல்படுத்தினால் தமிழ் மக்களின் வளர்ச்சியை, மகிழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தொடர்ச்சியான ஆய்வுகளே, தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும் என்பதை நித்தமும் செயலால் காட்டி வருகிறார் முதலமைச்சர்!

banner

Related Stories

Related Stories