முரசொலி தலையங்கம்

“‘நவீன பெருந்தலைவர் காமராசராக' உருவாக்கி இருக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி பாராட்டு!

234 தொகுதியையும் தன் தொகுதியைப் போலவே நினைத்து தீட்டிய திட்டம்தான் ஐந்தாவது திட்டமாகும். பரந்து பட்ட உள்ளம் இருந்தால் மட்டும்தான் இத்தகைய திட்டங்களைத் தீட்ட முடியும்.

“‘நவீன பெருந்தலைவர் காமராசராக' உருவாக்கி இருக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிந்தனையால் தீட்டும் திட்டங்களுக்கும் - இதயத்தால் தீட்டும் திட்டங்களுக்கும் வேறுபாடு உண்டு. முன்னது அறிவுப்பூர்வமானது. பின்னது, உணர்வுப்பூர்வமானது. அறிவுப்பூர்வமான திட்டங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் உணர்வுப் பூர்வமான திட்டங்கள் என்பவை அனைவரது மனதையும் கவரும். அத்தகைய மகத்தான ஐந்து திட்டங்களை - ஆட்சியின் இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

* முதலாவது திட்டம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற திட்டமாகும். நகரப்பகுதியிலும், கிராமப் பகுதியிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது.

பள்ளிகள் மிகத்தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலரது குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து இந்தத் திட்டத்தைத் தீட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இத்தகைய காலை உணவின் மூலமாக இன்னும் பல்லாயிரம் குழந்தைகள் பள்ளிகளை நோக்கி ஈர்க்கப் படுவார்கள்என்பதில் சந்தேகம் இல்லை. பள்ளிக்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு வயிற்றில் பசி இருந்தால் அவர்களால் படிப்பில் கவனத்தைச் செலுத்த இயலாது.

இவை அனைத்தையும் மனதில் வைத்து ‘நவீன பெருந்தலைவர் காமராசராக' முதலமைச்சர் அவர்கள் மாறி இத்தகைய திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

* இரண்டாவது திட்டமானது - ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கு ஏற்ற எடையில்லை, வயதுக்கு ஏற்ற உயரமும் இல்லை, மிகமிக மெலிவாக இருந்தார்கள். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

‘உடலினை உறுதி செய்' என்றார் மகாகவி பாரதியார். ‘விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்' என்று பாடினார் அந்தக்கவிஞர். அத்தகைய உடலினை உறுதி செய்யும் திட்டமாக இந்தத் திட்டத்தை வடிவமைத்து இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

* மூன்றாவது திட்டம் - தகைசால் பள்ளிகள் - என்ற திட்டமாகும். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் அதேநேரத்தில் அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். அவர்களது ஆளுமைத்திறன் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

இன்றைய கல்விச் சூழலில் இத்தகைய முன்னெடுப்பு மிகமிக அவசியமாகும். வெறும் பட்டம் வாங்குவதோடு கல்வி முடிந்துவிடவில்லை. அதிக மதிப்பெண் என்பது அனைவரும் வாங்கு கிறார்கள். அதனையும் மீறிய தனித்திறமை இருப்பவர்களால்தான் சிறந்த வேலை வாய்ப்பையும் - அந்த வேலையில் உயர்ந்த இடத்தையும் பெற முடியும். அத்தகைய திறமைசாலிகளை உருவாக்கும் திட்டமாக இதனை முதலமைச்சர் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.

‘நான் முதல்வன்' திட்டம் தொடங்கிய முதலமைச்சரின் இன்னொரு பரிமாணம்தான் இது!

* நான்காவதாக அறிவிக்கும் திட்டமானது நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அமைக்கும் திட்டமாகும். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல் நகர்ப்புறங்களில் இந்த நலவாழ்வு மையங்கள் அமைய இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற நலவாழ்வு மையங் களிலும் காலையும் மாலையும் ஏழை - எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து, 2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும் என்று முதலமைச்சர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு சுகாதாரக் கட்டமைப்பை அருகில் உள்ள இடங்களில் கிடைக்கச் செய்யும் மாபெரும் முயற்சி இது.

* ஐந்தாவது திட்டம் - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டமாகும். இது 234 தொகுதியிலும் நடைமுறைக்கு வரப்போகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத திட்டத்தை தொகுத்து எழுதி - அதில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றாக செயல்படுத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இதயத்தால் தீட்டிய திட்டங்கள் ஆகும். பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு என்பதும், குழந்தைகள் சத்தான உணவை உண்டு உடல் உறுதியுடன் வளர வேண் டும் என்பதும் ஒவ்வொரு பெற்றோரின் உள்ளத்து ஏக்கமாகும். அந்த ஏக்கத்தைப் போக்கும் திட்டம் ஆகும். அதே போல் நல்ல - தரமான கல்வி என்பதும் அனைத்துப் பெற்றோரின் விருப்பமாகும். அருகிலேயே மருத்துவ மனைகள் இருந்தால் நல்லது என்பது ஏழை மக்களின் ஏக்கமாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக 234 தொகுதியையும் தன் தொகுதியைப் போலவே நினைத்து தீட்டிய திட்டம்தான் ஐந்தாவது திட்டமாகும். பரந்து பட்ட உள்ளம் இருந்தால் மட்டும்தான் இத்தகைய திட்டங்களைத் தீட்ட முடியும். முன்னுரிமை தர முடியும். நிதி ஒதுக்க முடியும். அத்தனையும் செய்து தரும் முதல்வர் அவர்கள், கோட்டையில் மட்டுமல்ல மக்களின் இதயங்களில் ஆட்சி செய்கிறார்.

banner

Related Stories

Related Stories