முரசொலி தலையங்கம்

இலங்கையை அடுத்தடுத்து தாக்கிய நெருக்கடி.. முதலில் தீர்க்க வேண்டியது எது? முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

ராஜபக்ஷேவினர் முதலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்களா? நாட்டைக் காப்பாற்ற முன் வருவார்களா? என கேள்வி எழுப்பி முரசொலி நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கையை அடுத்தடுத்து தாக்கிய நெருக்கடி.. முதலில் தீர்க்க வேண்டியது எது? முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெருக்கடிக்கு முன் நெருக்கடி!

இலங்கை நாடு இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதற்கு முன்னால் அரசியல் நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டும் விட்டது. பொருளாதார நெருக்கடி என்பதை ஆட்சியில் இருப்பவர்கள்தான் தீர்த்தாக வேண்டும். அப்படித் தீர்க்கும் முடிவை எடுப்பதற்கு முன்னால் அவர்கள் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டார்கள். எனவே, முதலில் தீர்க்கப்பட வேண்டியது அரசியல் நெருக்கடியா? அல்லது பொருளாதார நெருக்கடியா?

இலங்கையில் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் - பிரதமராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்போகின்றன. இலங்கை நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

அதிபர் என்ற முறையில் கோத்தபயவுக்கு எதிராகவும், பிரதமர் என்ற வகையில் மகிந்த அரசுக்கு எதிராகவும் இந்தத் தீர்மானங்கள் தரப் பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியக் கூட்டணியும் இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானங்கள் வெற்றி பெறுமானால் மகிந்த ஆட்சியானது கவிழ்ந்து விடும். அதிபராக இருக்கக் கூடிய கோத்தபய தானாக முன் வந்து பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகவில்லை என்றால் அவரை பதவி விலக வேண்டிய தீர்மானத்தை தனியாக நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் மகிந்த, கோத்தபய ஆகிய இருவரையும் பதவி விலகச் சொல்லியே நடைபெறுகின்றன. பதவி விலகாமல் இருப்பதற்கான அனைத்து தந்திரங்களையும் அவர்கள் இருவரும் செய்து வருகிறார்கள். ‘தேசிய அரசு’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் இவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது. சொந்தக் கட்சியிலும் கடுமையான எதிர்ப்பு இவர்கள் இருவருக்கும் கிளம்பி உள்ளது.

அதிபரை பதவி விலகக்கோரி இலங்கையில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து வேலை நிறுத்தம் செய்துள்ளன. இலங்கை நாடு முழுவதும் இருக்கும் ஆயிரம் தொழிற் சங்கங்கள் ஒன்றாக இணைந் துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர்களது அறிவிப்பை ஏற்று இலங்கை நாடே முழுமையாக ஸ்தம்பித்து நின்றுவிட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கை நாட்டின் அரசு ஊழியர்களும் பங்கெடுத்ததுதான் மிக முக்கிய மானது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்தியத் தூதரைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். ‘இடைக்கால அரசு’ அமைப்பதற்கான ஏற்பாடு குறித்து இதில் பேசியதாகக் கூறப்படுகிறது. ‘நாடு மிகப்பெரிய குழப்பத்தில் இருக் கிறது’ என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இனவாதம் - மதவாதம் ஆகிய இரண்டும் இணைந்துதான் மகிந்த சகோதரர்களைக் கடந்த பத்தாண்டுகளாகக் காப்பாற்றி வந்தது. ஆனால் இவர்கள் அந்த நாட்டு மக்களைக் காப்பாற்றவில்லை. இனவாதமும் - மத வாதமும் மக்களது பசியை அடக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். ‘பசித்த வயிற்றுக்கு முன்னால் எல்லாத் தத்துவமும் மண்டியிடும்’ என்பதைப் போல இன்றைய தினம் அனைத்து முகமூடிகளும் கிழிந்து நிற்கிறார்கள் மகிந்த சகோதரர்கள்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற வகையில் தமிழின அழிப்புப் போரையே இலங்கை அரசு நடந்தியது. இதனை அந்த நாட்டு மக்கள் உணராமல் போனார்கள். ‘நாட்டுக்காக நடக்கும் போர்’ என்று அவர்கள் நினைத்தார்கள். உள்நாட்டுப் போரை நடத்துவதன் மூலமாக அரசியலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள மகிந்த சகோதரர்கள் திட்டமிட்டார்கள். ‘வெற்றி நாயகர்களாக’ 2008 முதல் வலம் வந்தார்கள். அந்த பிம்பம் அனைத்தும் இன்று சிங்கள மக்களாலேயே தூள் தூளாக அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் எங்கே கடன் வாங்கலாம் என்பதைத் தாண்டி அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு மாற்று சிந்தனை இல்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் கடன் வாங்குவது பற்றியும், சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் மட்டுமே இலங்கை அரசு சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.

"2015 முதல் 2019 வரையிலான இலங்கையின் பொருளாதார முன்னேற்ற வேகமானது படிப்படியாக 7 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. வெளிநாட்டுக் கடன் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பானது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. கொரோனா காலம் என்பது இலங்கையை எழ முடியாத அளவுக்கு வீழ்த்தி விட்டது" என்று அந்த நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் யாருடைய தவறுகள்? அந்த நாட்டு ஆட்சியாளர்களின் தவறுகள் தானே!

2015 முதல் அந்த நாட்டின் நிலைமை மோசமானதற்கு காரணம் கண்டு பிடித்து தடுக்க முடியாதவர்கள் - 2022 இல் தனது தலைக்கு ஆபத்து வந்ததும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதும், தேசிய அரசு அமைக்கப் போவதாகச் சொல்வதும், ரணிலிடம் மன்னிப்புக் கேட்பதுமான அரசியல் ஓரங்க நாடகங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

"விஜயன் இலங்கைக்கு வரவில்லை என்றால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது என்பது மாதிரி காரணம் சொல்லக் கூடாது" என்று முன்னாள் பிரதமர் ரணில் கிண்டலாகப் பதில் அளித்துள்ளார்.

இப்படி நாலாபக்கமும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்கள் ராஜபக்ஷேக்கள். அதாவது, ராஜபக்ஷேவினர் முதலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்களா? நாட்டைக் காப்பாற்ற முன் வருவார்களா?

banner

Related Stories

Related Stories