முரசொலி தலையங்கம்

“'பண்பட்ட - சமமான' கல்விக்கு அடித்தளம் அமைக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”: முரசொலி நாளேடு பாராட்டு!

அனைவர்க்கும் கல்வி. அனைவர்க்கும் உயர் கல்வி. அனைவர்க்கும் பண்பட்ட கல்வி. அனைவர்க்கும் சமமான கல்வி - ஆகிய உன்னதமான நோக்கம் கொண்டதாக தமிழக அரசின் திட்டங்கள் அமைந்துள்ளன.

“'பண்பட்ட - சமமான' கல்விக்கு அடித்தளம் அமைக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”: முரசொலி நாளேடு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பள்ளி மேலாண்மைக் குழுக்கள்!

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது ஆகும். முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறையானது செய்து வருகிறது.

அனைவர்க்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி, குறைபாடு ஏற்பட்டதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தின் நோக்கம் இதுதான். 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் 30 லட்சம் மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளார்கள். இத்திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 80,138 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அனைவரையும் பள்ளிகளை நோக்கி வரவைக்கும் கல்வியில் சிறந்த திட்டம் இது.

புதிய செயலி மூலமாக பள்ளி செல்லாத 1,88,487 குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய வகுப்பில் சேர்த்து பயிற்சிகள் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில் பயிலும் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் படி பயிற்சி அளிக்க இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும், தேவையான பொருள்களும் கல்வியும் வழங்கப்படுகிறது. கஸ்தூரிபா காந்தி திட்டத்தின்படி பெண் குழந்தைகளுக்கான கல்விக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் ரூ.37.82 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த நூலகம் ஏற்படுத்த ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில்தான் ‘நம்பள்ளி- நம்பெருமை’ என்ற திட்டத்தை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். ""நம் பள்ளி - நம் பெருமை என்று ஆனால்தான் நம் நாடு - நம் பெருமை ஆகும்" என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த அரசு, கல்விக்குத்தான் மிக அதிகளவு முக்கியத்துவம் தருகிறது என்றும் எத்தனை ‘மிக மிக’ வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கி றார்கள். ஒன்றிய அரசு கொண்டு வரும் கல்வித் திட்டங்கள் அனைத்தும் மாணவர் களின் தொடர்ச்சியான கல்விக்குத் தடை போடும் திட்டங்களாக இருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும், பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் பள்ளி மேலாண்மைக் குழு என்பது பள்ளிகளை மேன்மைப்படுத்துவதாக மட்டுமல்ல, கல்வியை மேம்படுத்துவதாக - அறிவை மேம்படுத்துவதாக - எதிர்கால இளைய சமுதாயத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் போன்றோ ரைக் கொண்டதாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியையும் முழுமையான பள்ளியாக மாற்ற இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் பள்ளிக்கு என்ன தேவையோ அதனை அவர்கள் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலமாக தரமான கல்வி மட்டுமல்ல, சமமான கல்வியானது அனைவர்க்கும் கிடைக்க இருக்கிறது.

பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமே இதன் நோக்கம் அல்ல.

* அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.

* குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலையும் உருவாக்க வேண்டும் - என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை விட முக்கியமாக மாணவர்கள் - பெற்றோர்கள் - ஆசிரியர்கள் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் ஒத்த சிந்தனையோடு செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்றும், தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான் இன்றைய காலத்துக்கு ஏற்ற மிகமிக முக்கியமான பார்வையாகும்.

"கல்வியின் நோக்கம் ஒரு மாணவன் கல்வி கற்று பள்ளியை விட்டுச் செல்லும் பொழுது அவன் உலக வாழ்க்கையை வாழ்வதற்காக மட்டும் கல்வி கற்காமல் தனது உள்ளத்தாலும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு கல்வியைக் கற்க வேண்டும்" என்றார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அத்தகைய பாணியில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு என்பது மேன்மையான தாக அமைந்துள்ளது.

அனைவர்க்கும் கல்வி. அனைவர்க்கும் உயர் கல்வி. அனைவர்க்கும் பண்பட்ட கல்வி. அனைவர்க்கும் சமமான கல்வி - ஆகிய உன்னதமான நோக்கம் கொண்டதாக தமிழக அரசின் திட்டங்கள் அமைந்துள்ளன. "இல்லம் தேடி கல்வி’’ என்பது அனைவரையும் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ என்ற திட்டமானது அனைவரையும் உயர் கல்விக்குத் தகுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் என்பவை பண்பட்ட கல்விக்கும், சமமான கல்விக்கும் அடித்தளம் அமைப்பவையாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு என்பது, இந்தியாவுக்கு ‘முன்மாதிரி அரசாகச்’ செயல்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories