முரசொலி தலையங்கம்

“தன்னை ஒரு ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் ஆளுநர் ரவி” : ஆளுநருக்கு எதிராக சாட்டையை சுழற்றும் முரசொலி!

சரியாகச் சொன்னால், அவருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் - அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர் அவர்கள்

“தன்னை ஒரு ஜனாதிபதியாக நினைத்துக்  கொள்கிறார் ஆளுநர் ரவி” : ஆளுநருக்கு எதிராக சாட்டையை சுழற்றும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலைவைக்க ஆளுநர் ரவி முடிவு எடுத்துவிட்டதாகவே தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது.

தன்னை ஏதோ அவர் ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் போலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் அவரது வேலையே தவிர, ஊறுகாய்ப்பானையில் ஊற வைப்பது அவரது வேலை அல்ல.

சரியாகச் சொன்னால், அவருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் - அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர் அவர்கள். ஒருவேளை, தமிழக பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று அவர் நினைத்து விட்டாரா எனத் தெரியவில்லை.

யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் தமிழக ஆளுநர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீட் விலக்கு சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பியது. உடனடியாக அதனை பரிசீலனை செய்யாமல் வைத்து இருந்தார். காலதாமதம் செய்தார். திடீரென்று ஒரு நாள் திருப்பி அனுப்பினார்.

அப்படித் திருப்பி அனுப்பியதை ஆளுநர் மாளிகையே ஊடகங்களுக்குச் சொன்னது. சில விளக்கங்களை தான் அரசிடம் கேட்டிருப்பதாகச் சொன்னார். அரசும், இரண்டாவது முறையாக சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பியது. இரண்டு முறை, ஆளுநரைச் சந்தித்துள்ளார் முதல்வர்.

‘இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பினால் மறுபடியும் நான் திருப்பி அனுப்ப முடியாது. குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கிறேன்’ என்று தன்னிடம் ஆளுநர் சொன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே சொன்னார்கள். இந்த நிலையிலும் இன்னும் காலதாமதம் செய்து வருகிறார்.

“இப்படி ஒரு சட்டமுன்வடிவு குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் கிடையாது. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் அதனை அனுப்புவேன்’’ என்று ஆளுநர் சொல்லி வருகிறார். இதனைப் போன்ற அபத்தமான சிந்தனை இருக்க முடியாது. காலநிர்ணயம் வைக்கவில்லை என்றால், அவரே தனக்குத் தானே ஒரு காலநிர்ணயத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே!

‘ஒரு காலத்தில் தமிழ்நாட்டு ஆளுநராக ரவி வருவார். அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்வார். அதனால் அனைத்துக்கும் காலநிர்ணயம் வைக்க வேண்டும்’ என்று அரசியல் சட்ட மேதைகளுக்கு யோசனை வராமல் போய்விட்டது. அத்தகைய தீர்க்க தரிசனம் அவர்களுக்கு இருந்திருந்தால் எல்லாவற்றுக்கும் ‘நேரம்’ குறித்து அரசியல் சட்டத்தையே ‘பஞ்சாங்கமாக’ எழுதி இருப்பார்கள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டமேதைகள் சட்டத்தை வடித்தார்களே தவிர, சட்டமீறல்கள் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வரும் எனச் சிந்திக்கவில்லை.

அதனுடைய விளைவுதான் நாமும், மற்ற பல மாநிலங்களும் ஆளுநர்கள் மூலமாக அனுபவிப்பது ஆகும். இத்தகைய சூழலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகமிகப் பொறுமையாகச் செயல்படுகிறார். நேற்றைய தினம் ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் என்பது மாநில நலனுக்கானதே. நீட் தேர்வு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தனக்கு மனவேதனை அளிப்பதாகச் சொல்லி இருந்தார்.

“மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும்” என்று அறிவுரை சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

“ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமூகமாகவும் இருக்கும்” என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதல்வர். அத்தகைய உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. ஆனால் ஆளுநரின் போக்கு இதனை விரும்பாததாக அமைந்துள்ளது.

நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் கொண்டு வருவோம் என்று தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டது தி.மு.க. அதனை ஏற்று கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் (ஓய்வு) ஏ.கே.இராஜன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவில் பலரும் இடம் பெற்றார்கள்.

ஒரு லட்சம் பேரிடம் கருத்துகள் பெறப்பட்டன. அந்தக் கருத்துகளின் அடிப் படையில் அரசிடம் அறிக்கை தரப்பட்டது.

அந்த அறிக்கையைப் பரிசீலிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்களே சட்டமுன் வடிவைத் தயாரித்தார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்று நிறைவேற்றப்பட்டது.

 ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுநிறைவேற்றப்பட்டது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆளுநரைச் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

‘நீங்கள் நிறைவேற்றியதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவு எங்களுக்கு இன்னும் வரவில்லை’ என்று உள்துறை அமைச்சரகம் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

பிரதமர் அவர்களைச் சந்தித்த முதலமைச்சர், நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உள்துறை அமைச்சரிடமும் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார் முதலமைச்சர். 

உயர்நீதிமன்றத்தால் விவாதிக்கப்பட்ட பிரச்சினை இது.

உச்சநீதிமன்றத்தால் விவாதிக்கப்பட்ட விவகாரம் இது.

நீட் தேர்வின் கொடுமையை இந்த நாடு அறியும்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளும் அதிகம். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைக்க 25 லட்சம் வரை ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் மாணவர்களும் - பெற்றோரும் கம்பி எண்ணிவருகிறார்கள். சிலர் தலைமறை வாக இருக்கிறார்கள்.

நீட் தேர்வில் 500 மதிப்பெண் வாங்கியவர்க்கு இடம் கிடைக்காமல் போகும். ஆனால் 120 வாங்கியவரும் பணம் கொடுத்தால் கல்லூரியில் சேரலாம் என்பதே உண்மை.

மூன்றாண்டு காலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி எடுத்துக்கொள்ள வசதியானவர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளே போக முடியும். பள்ளிப் படிப்புக்குக் கூட பணம் செலுத்த முடியாமல் படித்த பிள்ளைகளுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆகும்?

கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை அல்ல இது. தனியார் கோச்சிங் சென்டர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சில அதிகாரிகளால் நுழைக்கப்பட்ட தேர்வுதான் நீட்.

அனைத்துக்கும் மேலாக, பதினைந்துக்கும் மேற்பட்ட உயிர்கள் தங்களைத்தாங்களே மாய்த்துக் கொண்டு இருக்கின்றன. அதற்குப் பிறகும் ‘எனக்குக் கால நிர்ணயம் இல்லை’ என்று ஒருவர் சொன்னால், அவரை என்ன என்று சொல்வது?

‘தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’ ஆகும். ‘Justice delayed is justice denied' என்பது சட்டவியலின் முதல் கோட்பாடு ஆகும். அதனைப் புரிந்தும், தெரிந்தும், தெளிந்தும் ஆளுநராக இருப்பவர் செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories