முரசொலி தலையங்கம்

“மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதி எங்கே? - நிதி இருக்கும் போது கொடுத்தால் என்ன?” : முரசொலி சரமாரி கேள்வி!

மாநிலங்களின் நிதி உரிமையை ஒன்றிய அரசு பறித்துச் சென்ற நிதியையாவது மாநிலங்களுக்கு - உண்மையாகத் தர வேண்டியதற்கு தராமல் இழுத்தடிப்பது ஏன் என்பதுதான் நம்முடைய கேள்வி.

“மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதி எங்கே? - நிதி இருக்கும் போது கொடுத்தால் என்ன?” : முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாளிதழ்களில் ஒரே நாளில் இரண்டு செய்திகள் அடுத்தடுத்து இடம் பெற்று இருந்தன.

முதல் செய்தி: “ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” என்பது ஆகும்!

அதற்கு அருகிலேயே இன்னொரு செய்தி : “தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 21 ஆயிரம் கோடியை விடுவிக்கவும்” என்பது ஆகும்!

ஜி.எஸ்.டி. மூலமாக தனது வருவாயை அளவுக்கு அதிகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒன்றிய அரசு, மாநிலங்களுக்குத்தர வேண்டிய நிதியைத் தருவதில்லை என்பதையே இந்த இரண்டு செய்திகளும் உணர்த்துகிறது. நிதி இல்லை என்றால் பரவாயில்லை, நிதி இருக்கும் போது கொடுத்தால்தான் என்ன என்பதுதான் நமது கேள்வி!

கடந்த மார்ச் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய், இதுவரை இல்லாத வகையில் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசே தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறது.

கடந்த ஜனவரியில் ரூ.1.40 லட்சம் கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியிருந்தது. அதுவே அதிகபட்ச அளவாக இருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச்சில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,42,095 கோடியாக இருந்ததாக ஒன்றிய நிதியமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சி.ஜி.எஸ்.டி.) ரூ.25,830 கோடியும், மாநில சரக்கு- சேவை வரியாக (எஸ்.ஜி.எஸ்.டி.) ரூ.32,378 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐ.ஜி.எஸ்.டி.) ரூ.74,470 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.9,417 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது மாநில சரக்கு சேவை வரிதான் அதிகமான தொகை ஆகும்.

கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி. வருவாயானது கடந்த ஆண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வருவாயானது, நிர்ணயிக்கப்பட்ட ரூ.5.70 லட்சம் கோடி இலக்கைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதும், வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகப்படியான ஜி.எஸ்.டி. வருவாய்க்கு காரணமாகும். வரி விதிப்பை ஜி.எஸ்.டி. கவுன்சில் மறு சீரமைப்பு செய்ததும் வருவாய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021 மார்ச்சில் ரூ.1,828 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வருவாய், கடந்த மார்ச்சில் ரூ 2,089 கோடியாக அதிகரித்து, 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வருவாயை - அதாவது மாநிலங்களின் நிதி உரிமையை ஒன்றிய அரசு பறித்துச் சென்றதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறோம். அப்படி எடுத்துச் சென்ற நிதியையாவது மாநிலங்களுக்கு - உண்மையாகத் தர வேண்டியதற்கு தராமல் இழுத்தடிப்பது ஏன் என்பதுதான் நம்முடைய கேள்வி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதுடில்லியில், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதில் அவர் முக்கியமாக வைத்த கோரிக்கை, ஒன்றிய அரசில் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை என்பது ஆகும்.

14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோரினார் முதலமைச்சர். 2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதி மன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. தேர்தல் நடத்தாததால் நிதியை விடுவிக்கவில்லை என்று அப்போது காரணம் சொல்லப்பட்டது. இப்போதுதான் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டதே. இதன்பிறகும் நிதியை விடுவிக்காமல் இருப்பது சரியா என்பதுதான் நம்முடைய கேள்வி.

2017-18 ஆம் ஆண்டுக்கான மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிய பிறகும் செயல்பாட்டு மானியத்தை தமிழ்நாட்டுக்கு விடுவிக்கவில்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் இதனைப் பெற்றுவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் ஏன் தரவில்லை?

அதேபோல் 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. “ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகள் பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந் தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது” என்று முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் உண்மையான நிதிநிலைமையைத் தெரிவித்துள்ளார்கள். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதனை விடுவியுங்கள் என்பது நமது மாநிலத்தின் உரிமைக் கோரிக்கை ஆகும்.

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப் படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால்தான் இழப்பீடு வழங்கும் காலத்தையும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீங்கள். உங்களுக்கு நான் அதிகம் விளக்கிச் சொல்ல வேண்டியது இல்லை'' என்று ஒன்றிய நிதி அமைச்சரிடம் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன், நிதிநிலைமையை அறிந்து, நிதிவழங்கி, தமிழ்நாட்டுக்கான நன்மையைச் செய்வாரா?

banner

Related Stories

Related Stories