முரசொலி தலையங்கம்

‘நீட்’ விலக்கு.. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை கேபினெட் சிஸ்டத்துக்கே எதிரானது : எச்சரிக்கும் முரசொலி !

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஒரு சட்டம் - ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படுமானால் அதை ஆளுநர் கேள்வி கேட்கலாம்.

‘நீட்’ விலக்கு.. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை கேபினெட் சிஸ்டத்துக்கே எதிரானது : எச்சரிக்கும் முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அவர் இனியும் தாமதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கும், அவருக்கும் பெருமை சேர்க்காது.

அரியலூர் அனிதா திருப்பூர் ரீத்துஸ்ரீ பெரவள்ளூர் பிரதீபா பட்டுக்கோட்டை வைஷியா புதுச்சேரி சிவசங்கரி விழுப்புரம் மோனிஷா கோவை சுபஸ்ரீ அரியலூர் விக்னேஷ் மதுரை ஜோதிஸ்ரீதுர்கா - இவர்கள் எல்லாம் யார்? ‘நீட்’ தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள். இவர்களை மனதில் வைத்து ஆளுநர் விரைந்து முடிவெடுத்தாக வேண்டும். அடுத்த ‘நீட்’ தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை இதில் செலுத்தியோ - அல்லது தவறான சில மனிதர்களின் வழிகாட்டுதல் படியோ ஆளுநர் தாமதிப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்காது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு 10.6.2021 அன்று அமைக்கப்பட்டது.

மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. ‘நீட்’ தேர்வினால், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை என்பதைப் புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்பதைப் பட்டியலிட்டுச் சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே - அந்த தகுதி, திறமை கூட இந்த தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

இதனடிப்படையில் ‘நீட்’ தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள். தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஒரு சட்ட முன்வடிவை வடிவமைத்தது. அதுதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை தயாரிப்பதற்கு முன்னால் இத்தனை முயற்சிகள் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு - அதாவது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. நவம்பர் 27 ஆம் நாள், ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தினார். டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை. பிப்ரவரி 1 ஆம் தேதி, பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதனையே அறிக்கையாக ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதனை ஆளுநர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டதே சரிதானா? என்று சபாநாயகர் எழுப்பிய கேள்வியும் வலிமையானதே. இன்று வரை ஆளுநர் மாளிகையால் பதில் சொல்லப்படாத கேள்வியாகவே அது இருக்கிறது.

ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட அதே சட்டமசோதாவை மீண்டும் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. அதே ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் மறுபடியும் ஒரு மாத காலம் அமைதியாக இருந்தார். மார்ச் 15 ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் இதனை வலியுறுத்தினார். ‘நான் விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்' என்று அப்போது சொன்னார் ஆளுநர். ஆனால் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள் கேட்ட எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம், ‘இன்னும் சட்டமசோதா எங்களுக்கு வரவில்லை' என்று பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. ஆளுநர் யார் கருத்தையும் கேட்பது பற்றி ஆட்சேபனை இல்லை. அவர் எப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்பதுதான் ஒரே கேள்வி. ஒருமுறை திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை, மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் மறுமுறை திருப்பி அனுப்ப முடியாது என்பதை ஆளுநர் அறிவார். எனவே, அவருக்கு மாற்றுப் பாதை இல்லை.

குடியரசுத் தலைவருக்குத்தான் அவர் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டின் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை - சட்டமசோதாவை திருப்பி அனுப்பும் அளவுக்கு - அதில் ஒப்புதல் தர மறுக்கும் அளவுக்கு கட்டற்ற அதிகாரம் ஆளுநர்களுக்குத் தரப்படவில்லை. அப்படி நடந்து கொள்வது அரசியலமைப்புச் சட்டத்தில் நெறிமுறைகளுக்கு முரணானது. சட்டமன்றங்களின் மாண்புக்கு விரோதமானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஒரு சட்டம் - ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படுமானால் அதை ஆளுநர் கேள்வி கேட்கலாம். அப்படி இந்த சட்டத்தில் எதுவுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு விரோதமானதாக ‘நீட்’ தேர்வு அமைந்துள்ளது. அதனைத்தான் தமிழ்நாடு அரசின் மசோதாவும் வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்திய அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் மசோதாதான் இது.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமுன்வடிவு சரியானதா இல்லையா என்று அட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்திக் கொள்வார். குடியரசுத் தலைவரின் பணியை, ஆளுநர் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை என்பது இன்றைய கேபினெட் சிஸ்டத்துக்கே எதிரானது.

1920 ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த ‘இரட்டையாட்சி' முறை அமலில் இருப்பதைப் போல ஆளுநர்கள் செயல்பட முடியாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த சட்டமுன் வடிவை அறிமுகப்படுத்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருவேண்டுகோளை ஆளுநர் அவர்களுக்கு வைத்தார்கள்.

“பேரறிஞர் அண்ணா அவர்கள், 30.3.1967 அன்று இதே அவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய போது, ‘கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில் ஒரு பகுதி இன்றைய தினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்திப்பார்க்கிறேன்.

அது போன்றதொரு சூழலை - நமது ஆளுநர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்றும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி- இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த சட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்” என்றும் முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். அதையே இந்த தலையங்கம் வழிமொழிகிறது.

banner

Related Stories

Related Stories