முரசொலி தலையங்கம்

“கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தமிழ்நாடு அரசு’.. ஆனாலும் எச்சரிக்கை தேவை” : ‘முரசொலி’ அறிவுறுத்தல் !

தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக தொற்று என்பது ஒரு நாளைக்கு 100 என்ற எண்ணிக்கையை விடக் குறைந்து விட்டது. தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான நடவடிக்கையின் காரணமாக இந்த நிலைமையை நாம் எட்டியுள்ளோம்.

“கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தமிழ்நாடு அரசு’.. ஆனாலும் எச்சரிக்கை தேவை” : ‘முரசொலி’ அறிவுறுத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அனைவருக்குமான நல்ல செய்திதான் இது .... கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் எச்சரிக்கை தேவை என்பதையே அனைவரும் கவனத்தில் வைத்தாக வேண்டும்.

நேற்றைய தினம் எடுக்கப்பட்ட சோதனையில், மொத்தம் 41 பேருக்குத் தான் கொரோனா தொற்று இருந்துள்ளது. இதில் 19 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள். அதிலும் சென்னையில்தான் 13 பேருக்குத் தொற்று ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மற்ற 22 மாவட்டங்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். எனவே, அந்த மாவட்டம் முழுமையாக கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படும் நிலைமையில் இருக்கிறது. இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95 பேர் தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களாக தொற்று என்பது ஒரு நாளைக்கு 100 என்ற எண்ணிக்கையை விடக் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் ஏழாவது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான நடவடிக்கையின் காரணமாக இந்த நிலைமையை நாம் எட்டியுள்ளோம்.

ஆனாலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை நாம் விட்டுவிடக்கூடாது என்று அரசு எச்சரிக்கையுடன் இருக்கிறது. கடந்த 22ஆம் தேதியன்று கோட்டையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி இருக்கிறார். கொரோனா நோய்த் தொற்றை தமிழக எல்லையுடன் சுருக்கிப்பார்க்க முடியாது என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இத்தகைய சூழல் இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து - மார்ச் 24ஆம் தேதி மட்டும் 1,938 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. 22 ஆம் தேதி 1581 என்றும், 23ஆம் தேதி 1778 என்றும் என அதிகரித்து 1938 ஆகியுள்ளது. எனவே தான் கொரோனா நான்காவது அலை குறித்த ஆய்வுகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இப்படி ஒரு அலை உருவாகும் என எந்த ஆய்வு நிறுவனமும் அறிக்கை தரவில்லை என்றாலும், அந்த ஆய்வுகளை முடுக்கிவிட ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்குக் காரணம், சில ஆசிய நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தான். கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா, தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 980 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி பேர் இன்றைய தினத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்

கிறார்கள். அதேபோல் உயிரிழப்புகளும் தென்கொரியாவில் தினமும் அதிகமாகி வருகிறது. இதேபோல் வியட்நாமில் நேற்று மட்டும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வகையில் ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் குறையாத நிலையில் நாம் மிகமிக எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் முறையான சிகிச்சை தரப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் முதல் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் 50 லட்சம் பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 1.32 கோடிப் பேர். இவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தான் கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றும். இப்படி போட்டுக் கொள்ளாதவர்கள், மறைமுகமாக கொரோனா பரவலுக்கும் காரணமாகி விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அரசு, தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. எனவே, தடுப்பூசி எங்கே போடுகிறார்கள் என்று தேடிச் செல்ல வேண்டியது இல்லை. அருகிலேயே தடுப்பூசி முகாம்கள் அதிகம் நடக்கின்றன. தடுப்பூசித் தட்டுப்பாடும் இப்போது அறவே இல்லை. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முழுமையாகத் தங்களை இப்பணிக்கு ஒப்படைத்துக் கொண்டுள்ளார்கள்.

அரசு மிகுந்த அக்கறையுடன் - வேகமாகவும் செயல்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு அலட்சியம் வேண்டாம். வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி. எப்போதும், எப்படியும், எந்த வகையிலும் பரவலாம். எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதலமைச்சர் சொல்வதைப் போல, ‘நம்மையும் காப்போம் ; நாட்டையும் காப்போம்'!

banner

Related Stories

Related Stories