முரசொலி தலையங்கம்

“தர்மம் பற்றி நீங்கள் பேசலாமா பன்னீர்?: அ.தி.மு.க.வுக்குள் நடப்பது இருபக்கமும் சகுனிகள் ஆடும் ஆட்டமல்லவா?

“‘மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும்’ என்கிறார் பன்னீர். அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதனை மக்கள் செய்துள்ளார்கள்." என முரசொலி நாளேடு சாடியுல்ளது.

“தர்மம் பற்றி நீங்கள் பேசலாமா பன்னீர்?: அ.தி.மு.க.வுக்குள் நடப்பது இருபக்கமும் சகுனிகள் ஆடும் ஆட்டமல்லவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.,25 2022) தலையங்கம் வருமாறு:

‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றது செயற்கையான வெற்றி’ என்று ‘செயற்கைத்’ தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டுள்ளார். ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழக்க வேண்டிய சூழல் வந்ததால் ‘செயற்கை’யாக முதலமைச்சர் ஆனவர் பன்னீர்செல்வம். அதே ஜெயலலிதா ஊழல் வழக்கில் நான்காண்டு சிறைக்குப் போனதாலும் ‘செயற்கை’ முதலமைச்சராக ஆக்கப்பட்டவர் பன்னீர்செல்வம். அத்தகைய நபர் சொல்கிறார், ‘தி.மு.க பெற்றது செயற்கையான வெற்றி’ என்று!

ஜெயலலிதா வைத்துவிட்டுப்போன நாடாளுமன்றத் தொகுதிகள் அனைத்தையும் அவர்களிடம் இருந்து மக்கள் பறித்தார்கள். இதுதான் இயற்கையான வெற்றி. பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியை அவர்களிடம் இருந்து மக்கள் பறித்தார்கள். இதுதான் இயற்கையான வெற்றி. உள்ளாட்சி அமைப்புகளை மொத்தமாகப் பறித்தார்கள். இதுவும் இயற்கையான வெற்றிதான்.

இந்த மூன்று தேர்தல்களிலும் வாக்களித்தவர்கள் மக்கள்தான். ‘மர்ம மனிதர்கள் அல்ல’. மக்கள்தான் வாக்களித்தார்கள். இதைக் கூட ஓ.பன்னீர்செல்வத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. தனது தோல்விக்கு மக்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ‘மக்கள் சக்தி வெல்லும்’ என்கிறார் பன்னீர். ஆமாம்! மக்கள் சக்தி வென்றதால்தான் தி.மு.க. வென்றுள்ளது. அ.தி.மு.க தோற்கடிக்கப்பட்டுள்ளது.

‘மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும்’ என்கிறார் பன்னீர். அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதனை மக்கள் செய்துள்ளார்கள். சரியாகச் செய்துள்ளார்கள். முழுமையாகச் செய்துள்ளார்கள். அ.தி.மு.க. ஆதரவு நாளேடும் - தி.மு.க.வைப் பார்த்தால் வயிறு எரியும் நாளேடுமான - ஒரு நாளேடே - ‘கட்டெறும்பானது அ.தி.மு.க.’ என்று தலைப்பிட்டு தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை கட்டெறும்பு ஆக்கியதுதான். மக்கள்தான் ஆக்கினார்கள்.

முதலில் அந்தக் காரியத்தை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து செய்தார்கள். பின்னர், அதனை மக்களே சரியாகச் செய்து முடித்தார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது நியமனப் பதவிகளால் நிரம்பியது அல்ல. மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் தேர்தல்தான். கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்களித்த பெரும்பான்மையிலும் பெரும்பான்மையான மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

21 மாநகராட்சிகள் -132 நகராட்சிகள் -435 பேரூராட்சிகள் - என அனைத்தையும் மொத்தமாக கழகக் கூட்டணி கைப்பற்றி உள்ளது. இது மேஜிக் அல்ல. மக்கள்தான் வந்து வாக்களித்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக மேற்கு மண்டலத்து மக்கள் கொடுத்துள்ள வெற்றி என்பது மகத்தானது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் மனதில் ஒரு குழப்பம் இருந்தது. அந்தக் குழப்பமும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்பதை மக்கள் காட்டி விட்டார்கள்.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளைக் குறிவைத்து களம் இறங்கியது அ.தி.மு.க. இதில் வெற்றி பெறுவதன் மூலமாக தங்களை தக்கவைக்கப் பார்த்தார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் மரண அடியையே பழனிசாமி -பன்னீர்செல்வம் அண்ட் கோ -வுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

கோவையில் மொத்த வார்டுகள் 100. இதில் 3 இடங்கள்தான் அ.தி.மு.க பிடித்துள்ளது.

சேலத்தில் மொத்த வார்டுகள் 60. இதில் 7 இடங்களைத்தான் அ.தி.மு.க பிடித்துள்ளது.

ஈரோட்டில் மொத்த வார்டுகள் 60. இதில் 6 இடங்களைத்தான் அ.தி.மு.க.பிடித்துள்ளது.

திருப்பூரில் மொத்த வார்டுகள் 60. இதில் 19 வார்டுகளை அ.தி.மு.க கைப்பற்றி உள்ளது.

இதுதான் அ.தி.மு.க.வின் கோட்டையாக இவர்கள் சொல்லிக் கொண்ட மேற்கு மண்டலத்தின் நிலைமை ஆகும்.

இந்த தோல்வியைக் கொடுத்தவர்கள் மக்கள்தானே தவிர, வேறு யாருமல்ல.

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 15 வார்டுகளும், மதுரையில் 100 வார்டுகளில் 15 வார்டுகளும், திருச்சியில் 65 வார்டுகளில் 3 வார்டு, நெல்லையில் 44 வார்டுகளில் 4 வார்டும், கரூரில் 48 வார்டுகளில் 2 வார்டும், கடலூரில் 45 வார்டுகளில் 6 வார்டும் - மட்டுமே அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதுவும் மக்கள் கொடுத்தது தானே தவிர, வேறு யாருமல்ல.

தி.மு.க வாக்குகளை மட்டுமல்ல, அ.தி.மு.க ஆதரவு வாக்குகளையும் சேர்த்து தி.மு.க வாங்கிவிட்டது. இதுதான் உண்மை. ஒன்பது மாத கால தி.மு.க ஆட்சி -அதிலும் குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் அளித்த பரிசுதான் இந்த தேர்தல் வெற்றியாகும்.

தங்கள் கையில் இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யாமல் கூடிக் கழித்து - கும்பல் கொள்ளையை நடத்திய கூட்டம்தான் பழனியும்- பன்னீரும். இரண்டு தேர்தலாக மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத கும்பல் அது. தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் மத்திய பா.ஜ.க.வின் காலில் அடகு வைத்து அவர்களது பாதம் தாங்கிக் கிடந்த கூட்டம் இந்தக் கூட்டம். மக்களை முடிந்த வரையில் - முடிந்த நேரம் எல்லாம் ஏமாற்றிய கும்பல் அது. இன்னும் சொன்னால், ஜெயலலிதாவுக்கும், அவர்களை வளர்த்து விட்ட சசிகலாவுக்கும் துரோகம் செய்து வயிறு வளர்த்த கூட்டம் அந்தக் கூட்டம். இவை அனைத்தும் மக்களுக்குத் தெரியும்.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை அவிழ்க்காத ஆட்சி அ.தி.மு.க ஆட்சி.ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும் - கொள்ளையும் நடந்தது அ.தி.மு.க ஆட்சியில். இப்படி ஜெயலலிதாவுக்கே உண்மையாக இல்லாதவர்கள் அவர்கள். இத்தகையவர்கள் மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள். அதனால் மக்கள் கொடுத்த தண்டனைதான் இந்த தேர்தல்.

இதனை உணரும் திறன், பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துக்கோ இல்லை. வழக்கம்போல் தனது இற்றுப்போன டயலாக்கை மீண்டும் சொல்லத் தொடங்கி இருக்கிறார் பன்னீர். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வுமாம். இறுதியில் தர்மம் வெல்லுமாம்.

தர்மத்தைப் பற்றி தர்மம் பேசலாம். அதர்மம் பேசக்கூடாது. பன்னீர்செல்வத்தின் அதர்ம வரலாறுகள், மகாபாரதத்தை விட பெரிது. ‘மகாபாவ’ பாரதமாக வேண்டுமானால் அதனை எழுதலாம். ஒரு பக்கம் தருமனும் இன்னொரு பக்கம் சகுனியும் ஆடிய சூது அது. ஆனால் அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் சதுரங்க ஆட்டத்தில் இரண்டு பக்கமும் சகுனிகள் அல்லவா ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!

banner

Related Stories

Related Stories