முரசொலி தலையங்கம்

மக்கள் மனங்களில் ஊடுருவி ’திராவிட மாடல்’ தத்துவத்தின் முதல்வராக நிற்கிறார் மு.க.ஸ்டாலின் - முரசொலி நாளேடு

கட்சியின் தலைவர், இனத்தின் தலைவர் என்பதையும் தாண்டி ஆளுமைத்திறன் கொண்ட திராவிட மாடல்’ என்ற தத்துவத்தின் தலைவராக நிமிர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

மக்கள் மனங்களில் ஊடுருவி ’திராவிட மாடல்’ தத்துவத்தின் முதல்வராக நிற்கிறார் மு.க.ஸ்டாலின் - முரசொலி நாளேடு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை முழுமையாக உடன்பிறப்புகளின் கூட்டம் கைப்பற்றி இருக்கிறது. இருந்த இடங்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை அள்ளியதன் மூலமாக தமிழ்நாடே, தி.மு.க. நாடாக மாறி இருக்கிறது. 1967 தேர்தலில் வெற்றிச் செய்திகள் வந்து கொண்டு இருந்தபோது, "ரேடியோ ஸ்டேஷனுக்குள் நம்ம ஆள் யாராவது புகுந்துவிட்டானா?’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கேட்டதாகச் சொல்வார்கள்.

அந்த மாதிரி, மொத்த ஊடகங்களும் உடன்பிறப்புகளின் வெற்றிச் செய்தியை மட்டுமே நேற்றைய தினம் மொத்தமாகச் சொல்லிக் கொண்டு இருந்தன. ஒன்பது மாதங்களுக்கு முன்னால் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்ததைவிட, மாபெரும் வெற்றியாக - மகத்தான வெற்றியாக - மாற்றுக்குறையாத வெற்றியாக - முழுமையான வெற்றியாக - சிறப்பான வெற்றியாக -சீர்மிகு வெற்றியாக உள்ளாட்சி அமைப்புத் தேர்தலின் வெற்றி அமைந்துள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல. சாமான்யமான வெற்றியுமல்ல.

‘உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும்’ என்று சிலர் வியாக்கியானம் சொல்லி தங்களது விஷத்தை மறைக்க முடியாது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. முழுமையாகத் தோற்று, தி.மு.க. வென்றது வரலாறு. அவ்வளவு ஏன், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடியின் ஆளும் கட்சியை வீழ்த்தி 70 சதவிகித இடங்களை தி.மு.க. பெற்றதை யாரும் மறந்துவிட முடியாது. எனவே, ‘உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும்’ என்ற வாதம் கூட சக்கையானது. சரியானது அல்ல. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி - தோல்விகள் மேடு பள்ளங்களாக அமையும். சில மாவட்டங்கள் வெற்றி பெறும், சில மாவட்டங்களின் நிலைமை மாறுபடும். ஆனால் ஒரே மாதிரி சீராக சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலைப்போல தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இதுதான் உன்னிப்பாக கவனிக்கவேண்டியது ஆகும்.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் உள்ளூர் அரசியலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். உள்ளூர் மக்கள் தேவைகள் முன்னெழுந்து வரும். அந்த வட்டாரத்து மக்களில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதும் அழுத்தம் பெறும். அதனால் கட்சிகளின் வெற்றி - தோல்விகள் கூட சீரானதாக இல்லாமல் மாறி மாறி வரும். ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தலில் ஒரே சீராக - தமிழ்நாடு முழுவதும்- ஒற்றை மனதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். உள்ளூர் பிரச்சினைகளைத் தாண்டி, மாநிலம் முழுமைக்குமான ஒரு கவனத்தை வாக்காளர்கள் அடைந்திருப்பதை இது காட்டுகிறது. அந்தக் கவனம் என்பது, ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

கடந்த ஒன்பது மாத காலமாக அவரை உற்றுக் கவனிக்கும் மக்கள் அவரது ஒன்பது மாதச் செயல்பாடுகளுக்குக் கொடுத்த சான்றிதழ்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். கடந்த பத்தாண்டுக் காலமாக மக்கள் பார்த்த மூன்று முகங்கள் ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும், பழனிசாமியும். மகாராணியைப் போல வாழ்ந்தார் ஜெயலலிதா. எதுவும் தெரியாதவரைப்போல நடித்தார் பன்னீர்செல்வம். உதவாக்கரையாக இருந்தாலும் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆணவமாக நடந்து கொண்டார் பழனிசாமி. இந்த மூவரையும் பார்த்துப் பழகிய தமிழ்நாட்டு மக்களுக்கு ‘அரசியல்வாதி’ என்றாலே இப்படித்தானோ என்ற விரக்தி மனோபாவம் தொற்றிய நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து அமர்கிறார்.

அவர் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்யவில்லை. மக்களின் மனங்களுக்குள் ஊடுருவினார். மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முதல் ஆளாக இருந்தார். தடுப்பூசி போடும் இடத்துக்கு வந்தார். கொரோனா நோயாளிகள் படுத்திருக்கும் இடத்துக்குள் போனார். மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கினார். இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினார். மருத்துவமனைகளுக்குள் போனார். அருந்ததியர் காலனியை பார்வையிட்டார். ஆதிதிராவிடர் விடுதியை பார்வையிட்டார். காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். மழையில் மிதந்த தெருக்களுக்குள் போனார். வீடுகளுக்குள் சென்றார். குடைப் பிடித்தபடி வீதிகளில் நடந்தார். முட்டு அளவு தண்ணீரில் போய் மக்கள் குறை கேட்டார். இரண்டு நாட்களுக்குள் தண்ணீரை முற்றிலுமாக அகற்றிவிட்டு அந்த இடத்துக்கும்போய் பார்வையிட்டார்.

இலங்கை அகதிகள் முகாம்களுக்குள் சென்றார். அர்ச்சகர்களுக்கு நிதி கொடுத்தார். மொட்டை போடுபவர்களையும் கருணையோடு கவனித்தார். பல்லாயிரம் கோடிக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழலில் ஆர்வமாக இருந்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக அனுமதித்தார். கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு பணிகளைத் தொடங்கி வைக்கிறார். சென்னையிலேயே இருந்து விடாமல் குமரி முனை வரை சென்று மக்களைப் பார்த்தார். தொழிலதிபர் நலன் மட்டுமல்லாமல் தொழிலாளர் நலனையும் கவனித்தார். இவை அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக அவர் சூட்டிய பெயர்தான் ‘திராவிட மாடல்’அத்தகைய ‘திராவிட மாடலாக’ இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இத்தகைய ஒரு முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்கள் பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்க்கிறார்கள். அதனால்தான் கட்சி சார்பற்றவர்களாலும் அவர் ஈர்க்கப்படுகிறார். அரசியலை வெறுத்தவர்களாலும் கவனிக்கப்படுகிறார். இளைஞர்களை - அவர் தம் இளமைக் காலத்தில் ஈர்த்ததைக் காட்டிலும் - இப்போது அதிகமாக ஈர்க்கிறார். குழந்தைகள் அவரைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். இந்த வெற்றி என்பது அந்த ஒற்றை மனிதரை மனதில் வைத்து மக்கள் அளித்த வாக்குகள் ஆகும். ‘திராவிட மாடல்’ முதல்வரின் வெற்றி ஆகும். அவர் முன்னிலும் அதிகமாக மக்களுக்குச் சேவையாற்ற மக்கள் வழங்கிய வாழ்த்துப்பாடல் ஆகும். மொத்தத்தில் ஒரு கட்சியின் தலைவர் என்பதைத் தாண்டி -இனத்தின் தலைவர் என்பதையும் தாண்டி - ஆளுமைத் திறன் கொண்ட -‘திராவிட மாடல்’ என்ற தத்துவத்தின் தலைவராக நிமிர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories