முரசொலி தலையங்கம்

“அமைதியாக நடந்த வாக்குப்பதிவு - சட்டத்தின் ஆட்சிக்கு அடையாளமாய் திகழும் தி.மு.க அரசு” : முரசொலி பாராட்டு!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதன் அடையாளம் தான் அமைதியாகத் தேர்தல் நடந்திருப்பது.

“அமைதியாக நடந்த வாக்குப்பதிவு - சட்டத்தின் ஆட்சிக்கு அடையாளமாய் திகழும் தி.மு.க அரசு” : முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்திருப்பது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதன் அடையாளம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்திருப்பது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதன் அடையாளம் தான் அமைதியாகத் தேர்தல் நடந்திருப்பது. இதுதான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய தீர்ப்பு ஆகும்.

ஒரு ஆட்சியின் முதலாவது இலக்கணம் என்பது, அந்த ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் பயமின்றி, பதற்றமின்றி, எந்தவிதமான அச்சத்துக்கும் ஆளாகாமல் வாழ்கிறார்களா என்பதுதான். அந்த அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுகள் கணிக்கப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு அத்தகைய அமைதியை, அச்சமற்ற தன்மையை தமிழக மக்கள் உணர்கிறார்கள்.

அதன் அடையாளம்தான் தமிழகத்துக்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் படையெடுத்து வருவது ஆகும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு மாநிலத்தில் யாரும் முதலீடுகள் செய்ய மாட்டார்கள். தொழில்களைத் தொடங்க மாட்டார்கள். நிறுவனங்களை ஆரம்பிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டுக்கு கடந்த ஒன்பது மாத காலத்தில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது, எனவே தொழில்களைத் தொடங்கலாம், நிறுவனங்களை ஆரம்பிக்கலாம் என்று தொழில் அதிபர்கள் நினைப்பதுதான். அதனைத் தான் பல்வேறு ஆங்கில ஊடகங்கள் திரும்பத் திரும்ப எழுதி வருகின்றன.

புதிய தொழில்கள் தொடங்குவது என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் கணிக்க முடியாது. அது இந்த நாட்டின் சமூக அமைதியின் வளர்ச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து, இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்திருப்பதன் மூலமாக சட்டம் ஒழுங்கு மிகச் சீராக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. இவைகளில் 12 ஆயிரத்து 826 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை விட இதில் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

வேட்பாளர்கள் அதிகம். அதனால் தான் அமைதி எங்காவது கேள்விக்குறி ஆகி, வன்முறை வெடித்து, அது பரவக் கூடிய வாய்ப்பு உள்ள தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல் ஆகும். ஆனால் வன்முறைகள் நடைபெறவில்லை. அது எங்கும் பரவவில்லை. தொடர் வன்முறைகள் நடக்கவில்லை. அந்த வகையில் அமைதி தவழும் நாடாக தமிழ்நாடு அமைந்துவிட்டது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அமைத்திருந்தார்கள். 31 ஆயிரத்து 29 வாக்குப்பதிவு மையங்கள் இருந்தன. அனைத்து இடங்களிலும் முறையான, அளவான காவலர்கள் தங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 1.33 லட்சம் காவலர் கள் பாதுகாப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தேர்தல் பணியில் 1.33 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கெடுத்தார்கள். இதன் காரணமாக தேர்தல் அமைதியாக நடந்தது. அமைதியான வாக்குப் பதிவாக அமைந்தது.

தமிழகத்தில் 60.70 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. அரியலூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

இப்படி அமைதியாகத் தேர்தல் நடக்கிறதே என்பதைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் சில இடங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்த நினைத்தார்கள். அதன் மூலமாக ஏதாவது சிக்கலைத் தூண்ட முடியுமா என்று பார்த்தார்கள். மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் அவரது உடையைச் சொல்லி விஷமத்தை விதைக்கப் பார்த்துள்ளார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர். உடனே தேர்தல் பொறுப்பாளர்கள், அந்த நபரை வெளியேற்றச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். கொந்தளிப்பு உடனடியாக தவிர்க்கப்பட்டது.

கோவையை கடந்த பத்தாண்டு காலத்தில் சூறையாடிய எஸ்.பி.வேலு மணி கும்பல், தர்ணா என்ற பெயரால் தறிகெட்டு ஆடியது. அவர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். வரப்போகும் தோல்விக்கு ஒரு காரணத்தைத் தேடி இத்தகைய தர்ணா நாடகத்தை வேலுமணி ஆடியது அம்பலம் ஆனது.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரோ செலுத்தி விட்டதாக வதந்தியைக் கிளப்பினார்கள். அது குறித்த உண்மைத் தகவலை அறிந்து கொள்ளாமல் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் டுவிட்டரில் பதிவிட்டார். ‘முன்னாள் போலீஸ்காரர்' இதனை தீவிரமாக விசாரித்து அதன்பிறகு செய்தி போட்டிருக்க வேண்டும்.

‘எடுத்தவுடன் அடிக்கும் போலீஸ்காரராக' அவர் இருந்திருப்பார் போல. அப்படியே அரசியலிலும் நடந்து கொண்டார். அப்படி நடக்கவில்லை என்று வாக்குப்பதிவு மைய முகவர் சொன்னபிறகு, ஒன்றிய இணை அமைச்சர் வாக்களித்துச் சென்றுவிட்டார். அதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. இப்படி உருவாக்க நினைத்த அனைத்து அஸ்திரங்களும் முனை மழுங்கிய நிலையில் அமைதியாக நடந்துவிட்டது தேர்தல்.

அமைதி அரசு, ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்கி வருவதையே இந்தத் தேர்தல் நடந்த முறையும் காட்டுகிறது. தேர்தல் வெற்றியும் அதையே எடுத்துச் சொல்வதாக அமையும்.

banner

Related Stories

Related Stories