முரசொலி தலையங்கம்

மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கும் முதல்வர்.. உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சிதான்: முரசொலி தலையங்கம்!

மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கும் முதல்வர்.. உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சிதான்: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.18 2022) தலையங்கம் வருமாறு:

பிப்ரவரி 19 ஆம் நாள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.

21 மாநகராட்சிகள் - 138 நகராட்சிகள் - 490 பேரூராட்சிகள் - என மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது.

1374 மாநகராட்சி உறுப்பினர்கள் - 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் - 3468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில் மிகப்பெரிய, அதேநேரத்தில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது - மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் 12 பேர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 243 பேர். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் 122 பேர்.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 2113 பேர். ஊராட்சி மன்றத் தலைவர்கள் 4032 பேர் என மொத்தம் 6522 பேர் வெற்றி பெற்றார்கள். இரண்டு தேர்தலையும் இணைத்து நடத்த அன்றைய அ.தி.மு.க. அரசு தயங்கியது. முழுமையான வெற்றியை தி.மு.க. பெற்றுவிடும் என்பதால்தான் இணைத்து நடத்த மறுத்தார்கள். ஆனாலும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 65 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களைக் கழகம் கைப்பற்றியது. இம்முறை முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று தனது தேர்தல் பரப்புரையில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

“இவை அனைத்திலுமே கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிவேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் ஏதோ பேராசைப் படுகிறான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நான் நினைப்பது பேராசை அல்ல. என்னுடைய இந்த எண்ணம் என்பது சுயநலமான எண்ணம் அல்ல. பொது நலத்தோடுதான் இப்படி ஆசைப்படுகிறேன்.

அனைத்து இடங்களிலும் முழுமையான வெற்றியை நாம் அடைந்தால் தான் - கோட்டையில் இருந்து நாம் அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக் கோடி மனிதரையும் சென்றடையும். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் திட்டங்களை -அரசாங்கம் வழங்கும் உதவிகளை - மக்கள் கையில் சேர்க்கும் கடமையும், பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து நன்மைகளும் அனைவரையும் சென்றடைய நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நான் சொல்கிறேனே தவிர, வேறல்ல!” என்று தலைவர் அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் சீரழிந்து விட்டது. அதிலும் குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் மொத்தமாகச் சீரழிந்துவிட்டன. உள்ளாட்சி அமைப்புகளை ஊழலாட்சி அமைப்புகளாக மாற்றிவிட்டார் அன்றைக்கு அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி. அதனால்தான் இந்த தேர்தல் மிகமிக முக்கியமானது ஆகும்.

குடவோலை முறைமூலமாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே கடைப்பிடித்த இனம் தமிழினம். ஓலைகளில் பெயரை எழுதி, குடத்தில்போட்டு அதில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியின் மாண்பைப் போற்றி வந்தோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இத்தகைய மக்கள் பிரதிநிதிகளாக இந்தியர்கள் வரலாம் என்ற சலுகையை முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் அன்றைய வைஸ்ராய் ரிப்பன். அதனால்தான் சென்னைமாநகராட்சியின் மாபெரும் கட்டடத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கிராமப்புற சுயாட்சி முறையை தனது அரசியல் நெறிமுறைகளில் ஒன்றாக உத்தமர் காந்தியடிகள் ஒலித்து வந்தார்கள். அனைத்து கிராமங்களும் அதிகாரம் பெற வேண்டும் என்றார். அனைத்துக் கிராமங்களும் தற்சார்பு கொண்டவையாக வளரவேண்டும் என்றார். மக்களாட்சி என்பது சிற்றூர்கள் வரை பரவியிருக்க வேண்டும் என்றார். இவை அனைத்துக்கும் மேலாக கிராமங்கள் என்பவை சிறுசிறு குடியரசுகளாக இருக்க வேண்டும் என்றார். அதனால்தான் கழக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு, அப்பிரதிநிதிகள் கையில் முறையாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. ஆட்சியானது, மக்களுக்கு கடந்த ஒன்பது மாத காலத்தில் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வருகிறது. இவை அனைத்தும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மூலமாகத்தான் முழுமையாகப் போய்ச்சேர வேண்டும்.ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட விரக்தியில் மக்களைப் பழிவாங்கக்காத்திருக்கும் அ.தி.மு.க.வினர் கையில் இந்த அமைப்புகள் சென்றால்அவர்கள் தங்களது அசிங்க அரசியலை அங்கும் அரங்கேற்றுவார்கள்.இதனை தமிழக மக்கள் முழுமையாக உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.இதனைத்தான் முதலமைச்சரின் வேண்டுகோள் தெளிவாகச் சொல்கிறது.

“மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கிற தி.மு.க. அரசாங்கம் மாநிலஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் - கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்து திட்டங்களும் -அனைத்து கிராமங்களுக்கும் - நகரங்களுக்கும் செல்லும்.அனைத்து வீதிகளுக்கும், வீடுகளுக்கும் வந்து சேரும்.எந்தத் தடையும் இல்லாமல் ஆற்று நீர் பாய்ந்து செல்வதைப் போல -மக்கள் நலத் திட்டங்களும் எந்தத் தடையும் இல்லாமல் உங்களைவந்து சேர உள்ளாட்சியிலும் தொடர வேண்டும் நம்ம ஆட்சி. உள்ளாட்சியிலும் மலர வேண்டும் நல்லாட்சி.” என்ற தலைவரின் முழக்கம் மக்கள் மனங்களில் வேரூன்றி விட்டது. உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி தான்!

banner

Related Stories

Related Stories