முரசொலி தலையங்கம்

ATM எண்ணிக்கை எல்லாம் பொருளாதார அளவுகோலா?.. ஒன்றிய அரசை சாடிய முரசொலி தலையங்கம்!

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவிகிதமாகஇருக்கும் என்று பொருளாதார அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது உண்மையா, அல்லது போலியான பெருமைக் கூற்றா என்ற விவாதம்தொடங்கி உள்ளது.

ATM எண்ணிக்கை எல்லாம் பொருளாதார அளவுகோலா?.. ஒன்றிய அரசை சாடிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.03 2022) தலையங்கம் வருமாறு:

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவிகிதமாகஇருக்கும் என்று பொருளாதார அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது உண்மையா, அல்லது போலியான பெருமைக் கூற்றா என்ற விவாதம்தொடங்கி உள்ளது. வெறும் அறிக்கைகளின் மூலமாக மட்டும் வளர்ச்சியைக் கண்டு விடலாம் என்று நினைக்கும் பா.ஜ.க. அரசின் விளம்பரப் பெருமையாக இந்த பொருளாதார ஆய்வறிக்கை இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. அவர்களது கடந்த காலச் செயல் பாடுகள்தான் இப்படி நினைக்க வைக்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால், அதற்கு முன்பாக நடப்பு நிதியாண்டுக்கான (2021-22) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தலைமையிலான குழு இதனைத் தயாரித்துள்ளது.

“கடந்த 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது. அடுத்த நிதியாண்டில், சவால்களை எதிர் கொள்ளும் வகையில் இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக அறிகுறிகள்காட்டுகின்றன. இந்தியாவின் தனித்துவ நடவடிக்கைகள் இதற்கு ஒரு காரணம் ஆகும். ஒவ்வொரு காலாண்டிலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கவனித்தால், கடந்த நிதியாண்டின் பின்பாதியில் பொருளா தாரம் மீண்டு வருவதை உணரலாம். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பொருளாதார பாதிப்பு குறைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் 2019-2020 நிதியாண்டில் இருந்த கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் மீண்டு வருவதைத் தெரிந்து கொள்ளலாம். தனியார் துறை முதலீடு வேகம் எடுக்கப் போகிறது. பொருளாதாரம் வேகமாக மீள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்கிறது.

கடந்த நிதியாண்டில், சுகாதாரத்துக்குச் செலவிட்டதால் நிதி பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் அரசின் வருவாய் மீண்டு எழுந்துள்ளது. வங்கித் துறையும் நல்ல நிலையில் உள்ளது. வாராக்கடன் அளவு குறைந்துள்ளது.” என்று இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

“தடுப்பூசி போடுவது அதிகரிப்பு, சப்ளை சார்ந்த சீர்திருத்தங்கள், கட்டுப் பாடுகள் தளர்வு, ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். 8 முதல் 8.5 சதவிகித வளர்ச்சி இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதில் சந்தேகத்துக்குரியது, நடப்பு நிதியாண்டில் அரசின் வருவாய் மீண்டு வந்துள்ளது என்ற கருத்துதான். இதனை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சி பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய அளவிற்கு மீண்டும் அதிகரித்துவிட்டது என்று பொருளாதார ஆய்வறிக்கை பொய் கூறுகிறது. இது மோடி அரசின் வெற்று படாடோபமே தவிர உண்மை அல்ல. உண்மை என்ன என்பதை பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு (சி.எம்.ஐ.இ.) விரிவாக வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 அக்டோபர், நவம்பர் விபரங்களின்படிமுதன்மைத் துறையான விவசாயத் துறையின் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதைத் தவிர, வேறு எந்தத் துறையிலும் வளர்ச்சி அதிகரிக்க வில்லை”என்று கூறி இருக்கிறார்.

இந்த அறிக்கையின் அனைத்து விஷயங்களையும் வரிக்கு வரி மறுத்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை மறுபடியும் சொல்லி சலிப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற அவர், “கடந்த இரண்டு ஆண்டுகள் மக்களை மிகவும் வறுமையில் தள்ளியுள்ளனர். லட்சக் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 84 சதவிகிதக் குடும்பங்கள் வருவாய் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. 4.6 கோடி குடும்பங்கள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலக பட்டினி குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா104 ஆவது இடத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலை தற்பெருமை பேசுவதற்கான நேரம் இல்லை. தவறை உணர்ந்து மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரம் இது”என்று சொல்லி இருக்கிறார் ப.சிதம்பரம்.

சமூகத் தரம், மக்கள் வாழ்நிலை எந்தளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது, மேம்பட்டது என்பது குறித்து இந்த அறிக்கையில் இல்லை. தனியார் நுகர்வு குறைந்து போனதாக இந்த அறிக்கையில் உள்ளது. அந்த நுகர்வு ஏன்குறைந்தது என்பதற்கும், அது மீண்டதா என்பதற்கும் உரிய காரணங்கள் இல்லை. விண்வெளியில் தனியார் துறைகளின் முதலீட்டை ஈர்ப்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

இரவு நேர இந்தியாவை சாட்டிலைட் புகைப்படம் எடுத்துக் காண்பித்துள்ளார்கள். இதன் மூலம், எத்தனை பகுதிகளின் மின்சார வசதி பெருகியிருக்கிறது என்பதைப் பெருமையுடன் சொல்லி இருக்கிறார்கள்.

நாடெங்கும் பெருகியுள்ள வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை, தேசிய நெடுஞ் சாலைகளின் அடர்த்தி, விமான நிலையங்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் காட்சிப்படுத்தினர். இவை மட்டுமே இந்தியாவின் பெருமையாக சாட்டிலைட் படங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம். சென்டர்களின் எண்ணிக்கையைப் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகச் சொல்லும் அளவுக்குப் போய்விட்ட பிறகு இதுபோன்ற அறிக்கைகளில் ஆராய்ச்சி செய்வதற்கு என்ன இருக்கிறது?

banner

Related Stories

Related Stories