முரசொலி தலையங்கம்

“கடமை தவறிய நிலையை மறைப்பதற்காகத்தான் இத்தனை பசப்பு வார்த்தைகளா பிரதமரே?” : முரசொலி கடும் சாடல்!

“அகில இந்திய அளவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. செய்யத் தவறிய கடமைகளால்தான் இந்திய நாடு இன்று இத்தகைய பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது.” என முரசொலி தலையங்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளது.

“கடமை தவறிய நிலையை மறைப்பதற்காகத்தான் இத்தனை பசப்பு வார்த்தைகளா பிரதமரே?” : முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன., 22 2022) தலையங்கம் வருமாறு:

இந்திய நாட்டின் பன்முகத் தன்மை காக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதைக் கேட்கும் போது காதுக்கு இனிமையாக இருக்கிறது. தேன் வந்து பாய்வது போலவும் இருக்கிறது.

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு இது. இதனை முன்னிட்டு சில சிறப்புத் திட்டங்களை அவர் காணொலி மூலமாக நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி, இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்க வேண்டியது குறித்து கவலைப்பட்டுள்ளார்.

“இந்தியாவின் பெருமையைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவற்றை வெறும் அரசியல் என்று கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. நாட்டின் பெருமை ஒருபோதும் சிதையக் கூடாது. நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கும் முயற்சிகளைப் பொய்யென நிரூபித்து உண்மையான சூழலைத் தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். பிரம்மகுமாரிகள் உள்ளிட்ட அமைப்புகள் சர்வதேச அளவில் அமைந்துள்ளன. அந்த அமைப்புகள் இந்தியாவின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

நாட்டின் கலாச்சாரம், பெருமை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையும் காக்கப்பட வேண்டும்” என்று பேசி இருக்கிறார் பிரதமர்.

அவரது பேச்சு வழிமொழியத் தக்கதுதான். அத்தகைய பன்முகத்தன்மைக்கு இன்றைய தினத்தில் எதிரிகள் யார் என்பதையும் அவர் வெளிப்படையாகச் சொல்லிக் கண்டித்திருக்க வேண்டும்.

இந்தியா என்பது பல்வேறு மொழியினர், இனத்தவர், மதத்தவர், பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் வாழும் நாடு. இதில் ஒற்றைச் சிந்தனையை உருவாக்க நினைப்பவர்கள் யார்? அதனை வெளிப்படையாகச் சொல்லி பிரதமர் கண்டித்திருக்க வேண்டாமா?

‘ஒரே' என்ற முழக்கத்துக்குப் பின்னால் இந்தியாவின் பன்முகத்தன்மை பலவீனமாக ஆக்கப்படுகிறது என்பதை பிரதமர் இன்னுமா உணரவில்லை?

ஒற்றை மதத்தின் ஆட்சியை உருவாக்குவதற்கு முயலும் சக்திகள் யார் என்பது பிரதமருக்குத் தெரியாதா? அத்தகைய சக்திகள் யாருடைய பின்புலத்தில் இத்தகைய காரியங்களைச் செய்து வருகிறார்கள்? 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய சக்திகள் சமூகத்தில் வெளிப்படையாக தங்களது வெறுப்புப் பேச்சுகளை அதிகமாக விதைத்து வருகிறார்களே - அதற்கு யார் காரணம்? இதனையும் ‘வெறும் அரசியல்' என்று ஒதுக்கிவிட முடியுமா?

ஒரு கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே பேசப்படும் பேச்சுக்களா இவை? அல்ல! ஒரு நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் பேச்சுக்கள் அல்லவா இவை? இந்தப் பேச்சுக்கள் மூலமாக உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் என்ன மாதிரியான செய்தியை அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள்? பன்முகத்தன்மை என்பதெல்லாம் இனி இல்லை, ஒற்றைத் தன்மை கொண்டதுதான் இந்தியா என்பதைத்தானே சொல்ல விரும்புகிறார்கள்?

சமீபத்திய உதாரணம் உத்தரகாண்ட். அந்த மாநிலத்தில் நடந்த மாநாட்டின் உரைகளைப் படித்தால் ரத்தம் உறைந்துவிடும். பிற மதத்தவர்களை அழிப்பதற்காக காவல்துறையும், இராணுவமும் ஒன்றுசேர வேண்டும் என்று அந்த மாநாட்டில் பேசப்பட்டது. ‘ஆயுதங்கள் வெல்லட்டும், நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம், தேவைப்பட்டால் அதற்காக கொலையும் செய்வோம்' என்று இந்த மாநாட்டில் பேசப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் கண்டித்தார்கள். ஆயுதப் படைகளில் முன்னாள் தலைமைத்தளபதிகள் ஐந்து பேரும் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்திய எல்லையின் தற்போதைய நிலைமையைச் சுட்டிக்காட்டி உள்ள இவர்கள், இத்தகைய வன்முறை அழைப்புகள் உள்நாட்டில் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் வெளிப்புறச் சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

இத்தகைய வெறுப்புப் பேச்சுகளைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள், இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். இதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இத்தகைய வன்முறைப் பேச்சுகள் சமூக ஊடகங்களில் பரவியபிறகு, ஒரு வாரம் கழித்துத்தான் அந்த மாநில அரசு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. ஒரே ஒருவர் பெயரை மட்டும் சேர்த்துள்ளது. ஹரித்துவார் மாநாடு வெறுப்புப் பேச்சு தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு இத்தகைய சக்திகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தது? இவர்களது பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் முழுமையாகப் பரவி வருகிறதே? இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு அச்சுறுத்தல் அல்லவா? இதனை இந்தியாவைச் சீர்குலைக்கும் சக்திகள் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா?

இதே கூட்டத்தில் பொதுமக்களின் கடமையைப் பற்றியும் பிரதமர் பேசி இருக்கிறார். “மக்கள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்ய மறுத்து வருவதோடு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மறுக்கின்றனர். மக்களின் உரிமைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிட்ட அளவுக்குச் சரி என்றபோதிலும் கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, நாட்டை வலுவிழக்கச் செய்து வருகிறது” என்று மக்கள் மீது பாய்ந்துள்ளார் பிரதமர்.

மக்கள் எந்த விதமான கடமையில் இருந்து தவறினார்கள் என்பதை பிரதமர் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்குப் பதில் சொல்ல எளிமையாக இருந்திருக்கும். ஆனால், அகில இந்திய அளவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. செய்யத் தவறிய கடமைகளால்தான் இந்திய நாடு இன்று இத்தகைய பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரப் பின்னடைவுகள் ஒன்று போதாதா?

காங்கிரசு ஆட்சிக் காலத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சிலிண்டர் விலையும் இன்றைய நிலையும் எப்படி இருக்கிறது என்ற ஒரே ஒரு ஒப்பீடு போதுமே, இரண்டு ஆட்சிகளின் நிலைமையையும் சொல்வதற்கு! கடமை தவறியவர்கள் யார்? மக்களைக் கண்ணீர் சிந்த வைத்தவர்கள் யார் என்பதைச் சொல்வதற்கு!

இத்தகைய கடமை தவறிய நிலையை மறைப்பதற்காகத்தான் பசப்புப் பேச்சுகளாக பன்முகத் தன்மை குறித்த கவலைப் பேச்சுகள் பேசப்படுகின்றனவா?

banner

Related Stories

Related Stories