முரசொலி தலையங்கம்

“தடுப்பூசியே காப்பரண்.. 100% இலக்கை அடைய முன்னேறும் தமிழகம்” : திமுக அரசுக்கு புகழாரம் சூட்டிய ‘முரசொலி’!

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசியே காப்பரணாக இருக்கிறது. அத்தகைய தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது.

“தடுப்பூசியே காப்பரண்.. 100% இலக்கை அடைய முன்னேறும் தமிழகம்” : திமுக அரசுக்கு புகழாரம் சூட்டிய ‘முரசொலி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசியே காப்பரணாக இருக்கிறது. அத்தகைய தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டு சனவரி 16 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 93 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும், 69.8 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு சனவரி 16 ஆம் தேதியன்று முதன்முதலாக மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மார்ச் 1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோயாளிகளுக்கும் செலுத்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மே 1 முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணிகள் ஆகும்.

இந்த ஆண்டு சனவரி 3 ஆம் தேதி முதல் 15 - 18 வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சனவரி 10 முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியான பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கி இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டியது. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. தடுப்பூசியை அனைவருக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டியது. உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பிய நிலையில்தான் கடந்த ஆண்டு சூன் மாதத்தில் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்தது.

அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கடந்த ஆண்டு சனவரி மாதமே வலியுறுத்தி இருந்தன. ஆனால் ஏப்ரல் மாதம்தான் தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனாலும் போதிய தடுப்பூசி இல்லை.

இந்த நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு:

1. தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு என்ன கொள்கை வகுத்துள்ளது?

2. மத்திய அரசு குறைந்த விலைக்கு தடுப்பூசிகளை வாங்கும் நிலையில், மாநிலங்களுக்கு மட்டும் அதிக விலை நிர்ணயித்திருப்பது ஏன்?

3. மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டுவிடப் போகிறதா?

4. உடனே தடுப்பூசிக் கொள்கை ஒன்றை வகுத்து அதனை மாநிலங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

5. தடுப்பூசிக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யாவிட்டால் தட்டுப்பாடு வரும்போது, ரூ.2,000 வரை கூட வசூலிக்கப்படலாம். ரெம்டெசிவீர் மருந்து பற்றாக்குறை நிலவியபோது அதன் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளது ஏன்?” என்று நீதிபதிகள் கடந்த மே மாதம் இறுதியில் கேள்வி எழுப்பினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இப்படி சரமாரியான பல கேள்விகளை மத்திய அரசின் வழக்குரைஞரை நோக்கிக் கேட்டுள்ளனர்.

அமர்வின் தலைவராக உள்ள ஜஸ்டீஸ் டி.ஒய்.சந்திரசூட், “மத்திய அரசுக்கு உதவத்தான் நாங்கள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறோம்; தவறை ஒப்புக்கொள்வது தான் ஓர் அரசுக்குத் துணிவு, பெருமையும்கூட! தனிப்பட்ட எனது உடல்நலத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்” என்று கூறினார். அதன் பிறகு தான் தடுப்பூசி குறித்த தேவையை ஒன்றிய அரசு உணர்ந்தது.

நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஒன்றிய அரசே இலவசமாக தடுப்பூசியை செலுத்த உள்ளது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே 75 சதவிகிதம் கொள்முதல் செய்கிறது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு இலவசமாக தரும் என்றும் வரும் 21 முதல் தடுப்பூசி தரப்படும் என்றும், மேலும் 3 தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பிரதமர் சொன்னார். இத்தகைய மாற்றம் முதலில் வந்திருந்தால் முன்கூட்டியே - 100 சதவிகிதம் தடுப்பூசியைப் போட்டு முடித்திருக்கலாம்.

தமிழகத்தில் கழக அரசு மலர்ந்ததும் தடுப்பூசி செலுத்துவதை மாபெரும் இயக்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றினார்கள். இதனை தமிழக ஆளுநரே தனது உரையில் தெரிவித்துள்ளார்கள். “கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்து வதற்கான பல சிறப்பு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும், வாரம்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற போது தடுப்பூசிக்குத் தகுதியானவர்களில் 8.09 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவிகித மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என்ற குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டிருந்தது. இந்த அரசின் சீரிய முயற்சிகளால் இந்த நிலை மாறி, ஏழே மாதங்களில் 86.95 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 சதவிகித மக்களுக்கு இரண்டாம் தவணையும் என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று சனவரி 5 ஆம் நாள் சட்டமன்றத்தில் ஆளுநர் அவர்கள் பாராட்டினார்கள்.

நேற்று வரை தமிழகத்தில் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் -87.91 சதவிகிதம் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டவர்கள் - 60.74 சதவிகிதம். மே 7 ஆம் தேதி தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. இந்த ஏழு மாத காலத்தில் எட்டிய சாதனை இது. 100 சதவிகித இலக்கை அடைய முன்னேறிக் கொண்டு இருக்கிறது தமிழகம்.

banner

Related Stories

Related Stories