முரசொலி தலையங்கம்

தமிழ்நாட்டுக்கு ’தை’ பிறப்பதற்கு முன்பே வழி பிறந்து விட்டது; இருள் நீங்கிய உதயசூரிய ஆட்சி உதயமாகிவிட்டது!

தமிழர் திருநாளை முன்னிட்டு இன்பம் பொங்குக என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ’தை’ பிறப்பதற்கு முன்பே வழி பிறந்து விட்டது; இருள் நீங்கிய உதயசூரிய ஆட்சி உதயமாகிவிட்டது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு!

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு!"

- என்றார் புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்!

அத்தகைய தைத் திருநாளாம் - பொங்கல் திருநாள் என்பது தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!

தந்தை பெரியார் அவர்களே பொங்கல் திருநாளை மட்டுமே அனைத்துத் தமிழரும் கொண்டாட வேண்டிய நாள் என்று சொன்னார்.

‘இந்த விழாவுக்குத்தான் கற்பனைக் கதை இல்லை' என்று காரணமும் சொன்னார்!

"ஆண்டுதோறும் தைத்திங்கள் தலை நாளன்று பொங்கல் திருநாள் தமிழ்நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. பண்டை காலந்தொட்டுத் தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகை பொங்கல் திருநாள் ஒன்றுதான் என்று கூறலாம். அத்திருநாள் உழைப்பாளிகளுக்கு, சிறப்பாக உழவர்களுக்கு உரியது என்று கூறலாம். அன்றுதான் உழவர்கள் உழைத்ததால் பெற்ற பயனை உற்றார் உறவினருடன் துய்ப்பர். புதிதாக விளைந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்ட பொங்கலை உண்ணும் பொழுது உழவந்தான் காலமெல்லாம் பட்ட அல்லலை மறந்து உவகையடைகிறான்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.’என்பது வள்ளுவரின் அருள்மொழி. இதிலிருந்து பண்டைய தமிழகத்தில் உழவர்கள் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளனர் என்பது புலனாகும். மக்கள் உயிருடன் வாழ்வதற்கு இன்றியமையாத உணவுப் பொருள்களை உழவன் உண்டாக்குகின்ற காரணத்தாலேயே பண்டைக் காலத்தில் அவன்போற்றப்பட்டுள்ளான்" என்று சொல்லி உழவை தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சொன்னார் தந்தை பெரியார்!

இதையே கவிதை நடையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். "....களம் காண்பான் வீரன் என்றால் - நெற்களம் காண்பான் உழவன் மகன்!போர்மீது செல்லுதலே வீரன் வேலை - வைக்கோற்போர்மீது உறங்குதலே உழவன் வேலை - பகைவர்முடிபறித்தல் வீரன் நோக்கம் - நாற்றுமுடிபறித்தல் உழவன் நோக்கம்!உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு;வேற்றுமையோ ஒன்றே ஒன்று -உழவன் வாழ வைப்பான்; வீரன் சாக வைப்பான்’’- என்றார் கலைஞர். அத்தகைய வாழ வைக்கும் உழவர்களுக்காக நடத்தும் விழா தான் பொங்கல் திருநாள். அதுவே உழவர் திருநாள். அத்துடன் உலகத்தார் அனைவருக்கும் வாழ்க்கையின் இலக்குகளைச் சொல்லிச் சென்ற வள்ளுவரின் திருநாள்.

இவை அனைத்தும் சேர்ந்த தமிழர் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். மகிழ்கிறோம். இந்த ஆண்டு கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி உருவாகி இருக்கிறது. அடிமைத்தனமும், வஞ்சகமும், ஊதாரித்தனமும், குறிக்கோள் அற்ற தன்மையும், தன்னகங்காரமும் கொண்ட பத்தாண்டுகால படுகுழிக்காலத்தை தாண்டி - துணிச்சலும், செயல்திட்டமும், கொள்கையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ளது. ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தை பிறப்பதற்கு முன்னால் வழி பிறந்தது.

இந்த தை, அந்த வழியை இன்னும் அகலப்படுத்தப் போகிறது. கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றியும்-கொடுக்காத வாக்குறுதியையும் சேர்த்து நிறைவேற்றியும் வரக்கூடிய அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு செயல்பட்டு வருகிறது. ஒற்றைக் கையெழுத்தில் இலட்சம், கோடி என பொதுமக்கள் நன்மை அடையும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். தமிழுக்கும், தமிழர்க்கும் நன்மை தரும் ஆட்சியாக நடத்தி வருகிறார். இங்குள்ள தமிழர்க்கு மட்டுமல்ல; அயலகத் தமிழர்க்கும் ஏற்றம் தரும் ஆட்சியாக, அவர்களையும் அரவணைக்கும் ஆட்சியாக மலர்ந்துள்ளது.

மாநில அரசு மூலமாக மட்டுமல்ல; ஒன்றிய அரசையும் நமது கொள்கைக்கு கட்டுப்படும் அரசாக மாற்ற பல்வேறு அழுத்தங்களைத் தந்து வருகிறார் முதலமைச்சர். ‘நீட்’ தேர்வை விலக்க வைப்பதற்கான முதலமைச்சரின் படையெடுப்புதொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அவர்களிடம் காணொலிக் காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் நேற்றைய தினம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு என்பதைத்தான் அதிகமாக வலியுறுத்தினார். முதலமைச்சர் வைத்த ஒற்றைக் கோரிக்கையும் அதுவாகத்தான் இருந்தது. செம்மொழித் தமிழாய்வு மையத்துக்கான கட்டடத்தை மோடி அவர்கள் திறந்து வைத்தார்கள். இதனைக் கலைஞர் அவர்கள் இருந்து பார்த்திருந்தால் மகிழ்வார்கள் என்று சொன்னார் முதல்வர்.

இதே பொங்கல் நாளில் தான் - 1999 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர்அவர்கள் ‘திருவள்ளுவர் தின’விழாவில் பேசும் போது, ‘தமிழ் செம்மொழியா இல்லையா? என்ற விவாதம் இனி மேலும் தேவை இல்லை. தமிழ்செம்மொழிதான், நடுவண் அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்’என்று வலியுறுத்தினார். அதன்படி தான் 2004ஆம் ஆண்டு காங்கிரசு அரசு அதனை செயல்படுத்திக் கொடுத்தது. தமிழர்களின் நூற்றாண்டு கனவு இது. 1918 மார்ச் 18 சென்னையில் கூடிய தமிழ்ப்புலவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். மார்ச் 30, 31 அன்று நீதிக்கட்சியானது தனது தஞ்சை, திருச்சி மாநாட்டில் இதனை தீர்மானமாகப் போட்டது. அதைத்தான் கலைஞர் அவர்கள்செயல்பட வைத்தார்கள்.

அந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தவர் கலைஞர். பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் ஒதுக்கியவர் கலைஞர். அங்கு தான் இன்று கட்டடம் எழும்பி உள்ளது. மோடி அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். தமிழுக்கு நாம் செய்வது மட்டுமல்ல; ஒன்றிய அரசையும் செய்ய வைக்கும் காலமாக இக்காலம் உருவாகி இருக்கிறது. இருள் நீங்கிய உதயசூரிய ஆட்சி உதயமாகி இருப்பதால் நாடு முழுவதும் இன்பம் பொங்கி இருக்கிறது. இல்லம் தோறும் இன்பம் பொங்குக!

banner

Related Stories

Related Stories