முரசொலி தலையங்கம்

”சுற்றுச்சூழலை காக்கும் மஞ்சள் யுத்தத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி தலையங்கம்!

ஒரு கை ஓசை ஆகாது. இரண்டு கரங்களும் இணைய வேண்டிய நேரம் இது என முரசொலி நாளேடு மஞ்சள் யுத்தம் என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

”சுற்றுச்சூழலை காக்கும் மஞ்சள் யுத்தத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மஞ்சள் என்றதும் யாரும் அதனை மகிமையாகப் பார்க்கத் தேவையில்லை. அதிகமான மருத்துவக் குணம் கொண்டதுதான் மஞ்சள். பிளாஸ்டிக்குக்கு எதிரான யுத்தத்தில் மஞ்சள் பையை ஆயுதமாக ஆக்கி இருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம்தான் பிளாஸ்டிக் பைகள். அதற்கு எதிராக, சுற்றுச்சூழல் அடையாளமாக ‘மஞ்சள் பை'யை சுழல விட்டுள்ளார் முதலமைச்சர்.

"மஞ்சள்பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப்பை தான் இந்த மஞ்சள் பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்" - என்ற அவரது குரல், சூழலியல்வாதிகள் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் மஞ்சள் பை' என்னும் மாநில அளவிலான பிரச்சாரம் மூலம் - மரபு சார்ந்த இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை முன் வைத்து, மீண்டும் அடிப்படைகள் வாயிலாக எதிர்காலத்துக்குள் பயணிக்கும் தொடர் பயணத்தை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார் - என்று சூழலியல்வாதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த மேடையில் முதலமைச்சரின் பேச்சு, சூழலியல் வரலாற்றில் மிகமுக்கியமான பேச்சு ஆகும். "ஒரு காலத்தில் மஞ்சள் பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசேசமா?பத்திரிக்கை கொண்டு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்கும் காலம் இருந்தது. அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து, அதுதான் நாகரீகம் - மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற சூழல் உருவானது. அழகான - விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தங்களது போட்டிகளுக்குப் பயன்படுத்துகின்றன. அழகான - நாகரீகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பது.

இன்றைய தினம் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ - அந்தளவுக்கு சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் பாதிப்பு என்பது, மனித குலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்தும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்த விழாவில்பேசும் போது, "சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சினை" என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன். அந்த சுற்றுச் சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பதை தான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமான குறைத்தாக வேண்டும்" என்பது சூழலியல் முதலமைச்சரின் குரலாக - காலம் போற்றும் குரலாக இருக்கிறது.

பிளாஸ்டிக் என்பது மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அவற்றுக்கு படிப்படியாக - ஆனால் முழுமையாக முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி விட்டு போடுபவை அப்படியே மக்காமல் இருக்கிறது. இவை கழிவுநீர் சாக்கடையில் போட்டாலும் அதை அடைத்துக் கொண்டு அப்படியேதான் இருக்கும். இவை குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் போய் விழுந்தால் அந்த நீரின் தன்மையை அது பாதிக்கிறது. நீரை மாசு அடைய வைக்கிறது. கடலில் போய் கலக்கும் பிளாஸ்டிக் மூலமாக கடல் உயிரினங்களே பாதிக்கப்படுகின்றன.

சாலை ஓரமாக தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் மூலமாக சூழல் மாசுஅடைகிறது. அசுத்தத்தை பிளாஸ்டிக்கில் இருந்து அப்புறப்படுத்துவது சிரமம் ஆகும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதற்கு இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் எரிப்பதன் மூலமாக டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இந்தப் புகை நச்சுத்தன்மை கொண்டது, அது புற்று நோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணைப் பாதிக்கிறது. மண் வளத்தைக் கெடுக்கிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதை எல்லாம் மனதில் வைத்துத்தான், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

மருத்துவர்கள் சொல்லும் சில தகவல்கள் இன்னும் அச்சம் ஊட்டுபவையாக உள்ளன. "சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, கிண்ணத்தில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பி.பி.ஏ. (BPA) என்ற ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறு வயதிலேயே பருவம் எய்துதல், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், 92 சதவிகிதத்தினருக்கு அவர்கள் ரத்தத்தில் பி.பி.ஏ.ரசாயனம் இருந்ததாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centrefor disease control and prevention) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல, பச்சிளம் குழந்தைகள்கூட இதனால், பாதிக்கப்படுகின்றனர்'' - என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனவே மாற்றுச் சிந்தனைக்கு அனைவரும் விரைவாக வந்தாக வேண்டும். மாற்றுப் பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன. துணிப்பைகள், சணல் பைகள் வந்துவிட்டன. எடை குறைவான பொருள்களை வாங்கும் போது காகித உறைகளைப் பயன்படுத்தலாம். உணவகம், மளிகைக் கடைகளில்... வாழை இலை, தையல் இலை, பாக்கு மட்டை, சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். அரச இலை, ஆமணக்கு இலை, மந்தாரை இலை (தொன்னை) ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையும் வளர்ந்து வருகிறது. மளிகைக் கடைகள் பேப்பர், அட்டை ஆகியவை மூலம் பொருட்களைக் கட்டித் தரலாம். குப்பைகளைப் பிரித்து வைப்பதை அனைவரும் வழக்கமாகக் கொள்ளவேண்டும்.

இரண்டு குப்பைத் தொட்டிகள் இருக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்துப்போட வேண்டும். வீடுகளிலும் அலுவலகங்களிலும் மற்றும் குப்பைகள் அதிகமாகச் சேகரமாகும் இடங்களிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பது என்பது அரசாங்கத்தின் கையில் மட்டும் இல்லை. மக்களின் கையிலும் இருக்கிறது. ஒரு கை ஓசை ஆகாது. இரண்டு கரங்களும் இணைய வேண்டிய நேரம் இது!

banner

Related Stories

Related Stories