முரசொலி தலையங்கம்

மதமும், மதவாதமும்.. ராகுல் சொல்லும் அரசியல் பண்பாட்டு அச்சுறுத்தல்: முரசொலி தலையங்கம்!

ராகுல் சொல்லும் அரசியல் எல்லைகளைத் தாண்டிய பண்பாட்டு அச்சுறுத்தல் இந்த மதவாதத்துக்குள் இருக்கிறது.

மதமும், மதவாதமும்.. ராகுல் சொல்லும் அரசியல் பண்பாட்டு அச்சுறுத்தல்: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.15, 2021) தலையங்கம் வருமாறு:

மதம் - காலம் காலமாக இருக்கிறது. அவரவர் வணங்கும் நம்பிக்கையைப் பொறுத்தது அது!

மதவாதம் - என்பதுதான் இன்றைக்கு சிலரின் அரசியல் லாபங்களுக்காக உருவாக்கப்பட்டதாக உள்ளது!

இதனைத்தான் வெளிப்படையாக காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“இந்துத்துவாவாதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதிகாரத்தைத் தேடிக் கழிக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை, அதற்காக எதையும் செய்யத் துடிக்கிறார்கள். இந்த நாட்டில் இந்துக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இது இந்துத்துவாவாதிகளின் நாடு அல்ல” என்று பேசி இருக்கிறார் ராகுல் காந்தி. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரசு கட்சியின் பேரணியில்தான் இப்படிப் பேசி இருக்கிறார்.

“யார் இந்து? அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் அஞ்சாமல், எல்லா மதத்தையும் மதித்து நடப்பவர்தான் இந்து. இந்துவுக்கும், இந்துத்துவாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்து என்பவர் மற்ற மதங்களை மதிக்கத் தெரிந்தவர். யாரையும் அச்சுறுத்த மாட்டாதவர். எந்த இந்து மதப் புத்தகங்களிலாவது இசுலாமியர்களையும், சீக்கியர்களையும் தாக்குமாறு கூறப்பட்டுள்ளதா? நான் பல இந்து உபநிஷதங்களைப் படித்திருக்கிறேன். அதில் அவ்வாறு கூறப்படவில்லை” என்றும் ராகுல் காந்தி கேட்டு இருக்கிறார். “இன்று இந்திய அரசியலில், ‘இந்து' மற்றும் ‘இந்துத்துவாவாதி' என்ற இரு உலகங்களுக்கு இடையே போட்டிநிலவுகிறது. இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. நான் இந்து. என்னுடன் நிற்கும் பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தான்.ஆனால் இந்துத்துவாவாதி அல்ல... மகாத்மா காந்தி ஒரு இந்து. ஆனால்கோட்சே இந்துத்துவாவாதி” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

“ஒரு இந்துத்துவாவாதி தனது வாழ்நாள் முழுவதையும் அதிகாரத்தைத் தேடுவதில் செலவிடுகிறார். அவருக்கும் உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும், அதற்காக எதையும் செய்வார், எதையும் சொல்வார். இப்போது நாட்டில் நடப்பது இந்து ராஜ்யம் அல்ல, இந்துத்துவாவாதிகளின் ராஜ்யம்” என்று சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இவை அனைத்தும் அரசியல் வார்த்தைகள் மட்டுமல்ல, தத்துவார்த்த வார்த்தைகள் ஆகும்.

ஒரு அரசியல் கட்சியின் மேடையில் சொல்லப்பட்டாலும் இந்த சொற்களில்ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. இந்த சொற்களை அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு புரிந்து கொள்வதில்தான் இந்தியாவின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.

மதம் காலம் காலமாக இருக்கிறது. மத நம்பிக்கைகளும் காலம் காலமாக இருக்கின்றன. ஆனால் மதத்தை மையப்படுத்தி அரசியல் செய்வதும், மாற்று மதத்தினர் மனதைப் புண் படுத்துவதுமான காட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் சிலரால் செய்யப்படுகின்றன. இந்த வேறுபாட்டைத்தான் ராகுல்காந்தி உணர்த்துகிறார்.

இந்துக்கள் அனைவரும் பா.ஜ.க. அல்ல என்பதைப் போலவே, பா.ஜ.க.மட்டுமே இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல. இந்த நுட்பம் உணரப்பட வேண்டும்.

பா.ஜ.க.வின் ஒன்றிய அரசை விமர்சிப்பது என்பது ஒரு அரசியல் நிலைப்பாடே தவிர, நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு ஆகாது. பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்களையே தேச விரோதிகள் என்பதும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதும் அபத்தத்தின் உச்சமே தவிரஜனநாயக அரசியல் நெறிமுறை ஆகாது.

மதவாத நோக்கம் என்பது அரசியல் லாபங்கள், ஆட்சியைப் பிடிப்பது என்பதாக மட்டுமில்லாமல் மிகமிக அதரப் பழமையான நிலப்பிரபுத்துவ மனோபாவங்களை விதைப்பதாக அமைந்திருப்பது நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. வரலாற்றைத் திரிப்பதில் தொடங்கி, கட்டுப்படித் தனமான வலதுசாரித் தத்துவங்களை புதுப்பிப்பதும் மதவாதமாக இருப்பதால்தான் அதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

சமீபத்திய உதாரணம், பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியதுதான் சமூகக்கேடுகளுக்கு காரணம் என்று சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்ற கருத்து ஆகும். மதவாதம் விதைக்கும் பழமைவாதம் என்பது இதுதான்.சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வு நடந்துள்ளது. அதற்கு தயாரிக்கப்பட்ட வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் என்ற பாடம் இருக்கிறது. “மனைவிகள் தன் கணவர்களுக்கு கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதுவே குழந்தைகளும், வேலைக்காரர்களும் ஒழுக்க மில்லாமல் போனதற்கு முக்கியமான காரணம் ஆகும். பெண்கள் சுதந்திரம் பெறுவதுதான் பலவிதமான சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மனைவிக்கு தரப்பட்ட விடுதலையானது, குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்காத பெண், தனது குழந்தைகளுக்கு கீழ் படிதலுக்கான உதாரணமாகக் காட்ட முடியவில்லை. ஒரு மனிதனை அவனது பீடத்திலிருந்து கீழே இறக்கியதன் மூலமாக மனைவியும் தாயும் ஒழுக்கத்தின் வழிமுறைகளை மதிப்பிழக்கச் செய்து விட்டனர்” - என்று அந்த வினாத்தாளில் இருக்கிறது. இந்த எண்ணமானது பழுத்த இந்துப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து ஆகும்.

பெண்ணடிமைத் தனத்தின் உச்சம் இது. இதற்கான வேர் என்பது மனுநூலில் இருக்கிறது. பெண்கள் குறித்த மனுவின் பார்வையை மதப்பற்றுஎன்பதன் பெயரால் புகுத்த முயற்சிக்கிறார்கள். எனவே, ராகுல் சொல்லும் அரசியல் எல்லைகளைத் தாண்டிய பண்பாட்டு அச்சுறுத்தல் இந்த மதவாதத்துக்குள் இருக்கிறது.

இது தமிழர் பண்பாடு மட்டுமல்ல; அனைத்து தேசிய இனங்களின் - மொழிச் சிறுபான்மையினரின் - மதச் சிறுபான்மையினரின் - பட்டியல்மற்றும் பழங்குடியினர் அனைவரது பண்பாட்டையும் சிதைக்கும்பண்பாட்டுப் படையெடுப்பாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. இத்தகையபண்பாட்டு படையெடுப்பு என்பது அரசியல் ரீதியாகவோ, மொழித்திணிப் பாகவோ எதுவாக வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.

banner

Related Stories

Related Stories