முரசொலி தலையங்கம்

"யாரை காப்பாற்றுவதற்காக பேச்சுரிமை பற்றி அலறுகிறார்கள்": தமிழக பா.ஜ.கவிற்கு முரசொலி கேள்வி!

கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை பற்றி தமிழக பா.ஜ.க.வினர் இப்போது அதிகம் அலறத் தொடங்கி இருக்கிறார்கள்

"யாரை காப்பாற்றுவதற்காக  பேச்சுரிமை பற்றி அலறுகிறார்கள்": தமிழக பா.ஜ.கவிற்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.13, 2021) தலையங்கம் வருமாறு:

கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை பற்றி தமிழக பா.ஜ.க.வினர் இப்போது அதிகம் அலறத் தொடங்கி இருக்கிறார்கள். சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலும், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையில் வன்முறையைத்

தூண்டும் வகையிலும், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் சில பதிவுகளை சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்புவதன் மூலமாக பொது அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சில நாசகார எண்ணம் கொண்டவர்கள் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சக்திகளை வளரவிடுவது என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்தானதாகும்.

இதை உணராத தமிழக பா.ஜ.க. தலைமை யானது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு மீது, அதிலும் குறிப்பாக காவல்துறை மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறது. ஏதோ கருத்துரிமை, பேச்சுரிமையின் காவலர்களைப் போலதன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கிறது தமிழக பா.ஜ.க.

அவர்கள் யாரைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ, அவர்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா? அத்தகைய பதிவுகளை பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான கருத்தாகச் சொல்லத் தயாராக இருக்கிறார்களா?

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் விபத்தில் மரணம் அடைந்த சோக நேரத்தைக்கூட தங்களின் அரசியல் சதி எண்ணத்துக்கு திசை திருப்பச் சிலர் திட்டமிட்டு வதந்தியைச் செய்தியாக மாற்றுகிறார்கள் என்றால் -

விபத்தில் மரணம் அடைந்து கிடந்தவர் கழுத்தில் இருக்கும் சங்கிலியைத்திருடு வதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இத்தகைய நாசகார எண்ணம் கொண்டவர்களின் பதிவுகளை தமிழக பா.ஜ.க. தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் எண்ணெய் ஊற்றுகிறது அக்கட்சியின் தலைமை.

இவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட இந்திய நாட்டின் பிரதமர்நரேந்திர மோடி அவர்களே பதில் சொல்லி இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் எதையும் யாரும் சொல்ல உரிமை இல்லை, அதற்கு சர்வதேச விதிகள் வகுக்க வேண்டும் என்று பிரதமர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், கிரிப்டோகரன்சி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பம் தொடர்பான சர்வதேச விதிகளை வகுக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கிறார் பிரதமர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் ஜனநாயகத்துக்கான மாநாடு காணொலி மூலமாக நடந்தது. அதில் நூற்றுக்கும் அதிகமானநாடுகள் பங்கேற்றன. அதில் ஜனநாயகச் சிந்தனைகள் குறித்து விரிவாக பேசினார் பிரதமர். இந்திய ஜனநாயகத்தின் பெருமையைச் சொல்லும் போது உத்திரமேரூர் கல்வெட்டைத்தான் உதாரணமாக பிரதமர் சொல்லி இருக்கிறார். 10 ஆம் நூற்றாண்டிலேயே ஜனநாயக எண்ணம், இந்தியாவை பண்பட்டதாக மாற்றி வைத்திருந்தது என்று சொல்கிறார் பிரதமர். இந்த மாநாட்டில் தான் சமூக ஊடகங்களின் செயல்பாட்டை பிரதமர் விமர்சித்துள்ளார்.

“பலகட்சிகள் போட்டியிடும் தேர்தல் முறை, சுதந்திரமான நீதித்துறை, கட்டுப்பாடுகள் இல்லாத ஊடகங்கள் ஆகியவை தான் ஜனநாயகத்தின் முக்கியமான ஆயுதங்கள். இருந்தபோதிலும், ஜனநாயகத்தின் அடிப்படை பலம் குடிமக்கள் மற்றும் சமூகத்தின் பண்பாட்டிலும் உறுதிப்பாட்டிலும்தான் உள்ளது.

சமூக ஊடகங்கள், கிரிப்டோகரன்சி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு சர்வதேச அளவிலான நடைமுறைகளை வகுக்க ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க உலகநாடுகள் முன்வர வேண்டும். வளர்ந்து வரும் இதுபோன்ற தொழில் நுட்பங்கள் ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கப் பயன்பட வேண்டுமே தவிர, பலவீனப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது.

ஜனநாயகத்தில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் தொழில் நுட்பத்துக்கு உள்ளது என்ற வகையில் ஜனநாயகத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதில் தொழில் நுட்பநிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார் பிரதமர்.

இவை உலக நாடுகளுக்கு சொல்ல வேண்டிய கருத்து மட்டுமல்ல, தமிழக பா.ஜ.க.வினருக்கு சொல்ல வேண்டிய கருத்தாக அமைந்துள்ளது.

நவம்பர் 26 அன்று அரசமைப்பு தின விழா நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசும் போதும் இதனை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார் பிரதமர். “நம் நாட்டிலும் பேச்சுரிமை என்ற பெயரிலும் சில வேளைகளில் வேறு சிலவற்றின் உதவியுடனும் காலனிய மனோபாவத்துடன் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இடையூறு ஏற்படுத்துவது தவறானது” என்று பேசினார் பிரதமர்.

இத்தகைய காலனிய மனோபாவத்துடன் செயல்படும் தமிழக பா.ஜ.க.வினர், பிரதமர் மோடி அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களை உணர்ந்து நடந்து கொள்ளப் பழக வேண்டும்.

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி மிகச் சாதாரண விபத்தில் மரணம் அடைந்ததும், அது குறித்த பொய்களையும் வதந்திகளையும் இங்குள்ள சிலரே கிளப்பி வருவதும் அவமானகரமானது.உலகில் இந்தியாவின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும்,குலைக்கும் சதிச் செயல்களாகும். அதனை யாரும் அனுமதிக்கக்கூடாது.

banner

Related Stories

Related Stories