முரசொலி தலையங்கம்

“உத்தரப்பிரதேசம் நல்லாட்சியின் அடையாளம் அல்ல; பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள்” : பாஜக அரசை சாடிய ‘முரசொலி’!

போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலைகள் செய்வதும் எதனுடைய அடையாளம்? நல்லாட்சியின் அடையாளம் அல்ல! பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள் ஆகும்!

“உத்தரப்பிரதேசம் நல்லாட்சியின் அடையாளம் அல்ல; பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள்” : பாஜக அரசை சாடிய ‘முரசொலி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (08-10-2021) வருமாறு:

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் உத்தரப்பிரதேச பா.ஜ.க ஆட்சி ஆகும் என்பதை மனச்சாட்சி உள்ள பா.ஜ.க.வினரே அறிவார்கள்!

எதிராளிக்குத் தர வேண்டிய குறைந்தபட்ச ஜனநாயக உரிமையைத் தராதது மட்டுமல்ல - மக்களை மனிதர்களாகக் கூட மதிக்காத தன்மைக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்!

இந்தக் கொடூரத்தின் உச்சம்தான் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்வதும்! அந்தக் கொலையைக்கூட நியாயப்படுத்துவதும். ஒன்பது உயிர்கள் பலியாகி உள்ளன. அதற்கு ஒட்டு மொத்தமாகப்பொறுப்பேற்க வேண்டியது உத்தரப்பிரதேச முதலமைச்சர் தான். ஆனால் அவருக்கு அது எல்லாம் ஒரு விஷயமாகவே தெரியாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி வாழ்பவர் அவர்.

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோத விடும் வீடியோ இணையதளங்களில் வைர லாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் அனைவரையும் ரத்தம் உறைய வைக்கும் காட்சிகள் அவை. இதனை சமூக வலைத்தளங்களில் ராகுலும், பிரியங்காவும் பகிர்ந்துள்ளார்கள். பா.ஜ.க எம்.பி.யான வருண் காந்தியும் பகிர்ந்துள்ளார். வருண் பகிர்ந்துள்ளதற்கு என்ன சொல்வார்கள்? அவரை பா.ஜ.க.வில் இருந்து நீக்கிவிடுவார்களா? அல்லது இந்திரா குடும்பத்து ரத்தம் வேலை செய்கிறது என்று காரணம் கண்டு பிடிப்பார்களா?

அமைதி வழியில் போராடியவர்கள் மீது வழக்கும், கைது நடவடிக்கையும். ஆனால் காரை ஏற்றிக் கொலை செய்தவர்கள் வெளியில் நடமாடுகிறார்கள். இதுதான் உத்தரப்பிரதேசம்!ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில், விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டம், பன்வீர்பூர் கிராமம்தான் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர். அக்டோபர் 3 ஆம் தேதி அங்கு நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக உ.பி துணை முதல்வர் கேசவ் மௌரியா, ஹெலிகாப்டர் மூலம் வருகை தர இருந்தார். ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் லக்கிம்பூர் விவசாயிகள். இதை அறிந்து, துணை முதல்வரின் பன்வீர்பூர் பயணம் தரை வழியாக மாற்றப்பட்டது. விவசாயிகளும் தங்கள் திட்டத்தை மாற்றினார்கள். கார் வரும் சாலையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அப்போது டிகோனியா கிராமம் அருகே வந்த பா.ஜ.க.வினரின் இரண்டு கார்கள் முன்பாகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள். அப்போது அதில் ஒரு கார், விவசாயிகளை நோக்கிப் பாய்ந்தது. பட்டப்பகலில் நடந்த பச்சைப் படுகொலை அது. இதில் தல்ஜீத் சிங் (35), குர்விந்தர் சிங் (19), லவ்ப்ரீத் சிங் (20), நச்சட்டார் சிங் (60) ஆகிய நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிர்ப்பலி ஆனார்கள்.

அப்போது பலத்த காயமடைந்தார் உள்ளூர் நிருபர் ரத்தன். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி காஷ்யப் மருத்துவமனையில் அக்டோபர் 4-ஆம் தேதியன்று உயிரிழந்தார். இக்கொடூர கார் கொலைவெறித் தாக்கு தலைத்தொடர்ந்து அந்த இடமே கலவர பூமியானது. அதில் நான்கு பேர் பலியானார்கள்.

பாரதிய கிசான் யூனியன் அமைப்பு என்ற விவசாய அமைப்புதான் இதன் உண்மைத் தன்மையை முதலில் சொன்னது. “அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் மீது ஏறிய காரை ஓட்டிவந்தது அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான்” என்று குற்றம் சாட்டியது. கார் எங்களுடையதுதான்; ஓட்டியது என் மகன் அல்ல என்று சொல்லி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா.

“துணை முதல்வரை வரவேற்கச் சென்ற பா.ஜ.க ஆதரவாளர்களின் கார்கள்மீது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்களை வீசியிருக்கின்றனர். அதனால், நிலை தடுமாறிய கார், விவசாயிகள் மீது ஏறியிருக்கிறது. அந்தக்காரை எனது மகன் ஓட்டவில்லை. அங்கு என் மகன் இருந்திருந்தால் போராட்டக்காரர்களின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருப்பார். அவர் என்னோடு நிகழ்ச்சி நடந்த இடத்தில்தான் இருந்தார். அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன” என்றிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த பிறகு உ.பி அரசு நடந்து கொண்ட விதம்தான் அது விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு.

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றிய அரசு கௌரவம் பார்க்காமல் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் இத்தகைய போராட்டம் - இவ்வளவு காலம் நீடித்த போராட்டம் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) வெளியிட்ட அறிக்கையில் கசப்பான பல உண்மைகள் உள்ளன. 2021 ஜனவரி 22க்குப்பின் போராடும் அமைப்புகளுடன் ஒன்றிய அரசாங்கம் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்திட வில்லை என்றும், கடந்த ஓராண்டு காலத்தில் 605 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு பேர் உயிர்த் தியாகம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மரணங்கள் ஏன் பேசப்படுவது இல்லை? விவசாயிகளின் உயிர் மட்டும் இளக்காரமா? அது உயிர் அல்லவா?

“நம்மைப்போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் போராடுபவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப்பேச்சுவார்த்தைதான் ஒரே வழி. அதுவே எப்போதும் எஸ்.கே.எம் கோரிக்கை” என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையே நடத்தாமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பிரதமர் சொல்வதும் - போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலைகள் செய்வதும் எதனுடைய அடையாளம்? நல்லாட்சியின் அடையாளம் அல்ல! பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள் ஆகும்!

banner

Related Stories

Related Stories