முரசொலி தலையங்கம்

“அனிதா உள்ளிட்டோரின் உயிராயுதம் வெல்லும்” : நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டுடன் இணையும் வட மாநிலங்கள்!

‘நீட்’ தேர்வை தமிழ்நாடுதான் எதிர்க்கிறது என்ற பிம்பம் உடைந்து மாநிலங்களும் இணைவதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

“அனிதா உள்ளிட்டோரின் உயிராயுதம் வெல்லும்” : நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டுடன் இணையும் வட மாநிலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (01-10-2021) வருமாறு:

‘நீட்’ தேர்வை தமிழ்நாடுதான் எதிர்க்கிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இதோ வடமாநிலக் காட்சிகள் விரிகின்றன. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகம் போலவே ‘நீட்’ எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றுங்கள் என்று மராட்டிய அரசியல் கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றன. ‘நீட்’ ஒரு மோசடியான தேர்வு என்று வட மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மம்தா சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நாலா பக்கமும் இருந்தும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அடிவிழத் தொடங்கி இருக்கிறது. இவ்வாண்டும் நடந்த ‘நீட்’ தேர்வில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ள தால், அதனை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட பல மோசடிகள் நடந்துள்ளதாகவும், தேர்வு நடைபெற்ற மையங்களின் மேற்பார்வையாளர்கள் உதவியுடன் ஆள்மாறாட்டம் நடத்தி தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் மற்றும் கோச்சிங் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி மோசடிகள் நடத்தப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ பலரைக் கைது செய்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதனால், நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனவும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை விபரங்களை சி.பி.ஐ ஒருவாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரப்போகிறது.

‘நீட்’ தேர்வு முறையையே கிழித்துவிடப்படப்போகிறது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வியாபம் ஊழலைப் போன்று மாறிவிட்டதாக வட மாநில ஊடகங்கள் செய்திகள் போடத் தொடங்கி விட்டன. மத்தியப் பிரதேச அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தும் அமைப்பான வியாபம் நடத்திய 13 தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்வுகள் மாறியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மகாராஷ்டிராவில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா பட்டோலி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதில், மாநிலத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக அளவில் ‘நீட்’ மதிப்பெண்களைப் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசைப் பின்பற்றி, ‘நீட்’ தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில்தான் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அச்சம் தருபவையாக உள்ளன. கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. கேள்வித்தாள் கசிவு நடந்துள்ளது.தேர்வு நடைபெற்ற மையங்களின் மேற்பார்வையாளர்கள் உதவியுடன் ஆள் மாறாட்டம் நடத்தி தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கோச்சிங் நிறுவனங்கள்தான் இதனைச் செய்துள்ளன. 50 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி மோசடிகள் நடந்துள்ளன. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்5-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய் துள்ள சி.பி.ஐ. பலரைக் கைது செய் துள்ளது.

இதனால் நேர்மையாகத் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்புவரிகள் ஆகும். மாணவர்கள் தரப்பில் மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் மம்தா ஷர்மா, ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ராஜஸ்தானில் கேள்வித்தாளை கசிய விட்டு தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் விடை குறியீடுகளை தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்கு விநியோகித்து முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.-யின் முதல் தகவல் அறிக்கையில் ‘நீட்’ 2021 நுழைவுத் தேர்வுத்தாள் கிரிமினல் சதித் திட்டத்தின் கீழ் கசியவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டதையும் இதில் புகழ் பெற்ற ‘நீட்’ பயிற்சி மையங்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையும் வழக்கறிஞர் மம்தா ஷர்மா அடிக்கோடிட்டு இருக்கிறார். சி.பி.ஐ மட்டுமல்லாமல் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மராட்டியம் மாநில காவல்துறைகளில் ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் முறைகேடுகள் அரங்கேறி இருப்பது உறுதியாகி இருப்பதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வின் அடிப்படை நோக்கமே தவறானது என்று தமிழ்நாடு சொல்லிய போது பலரும் நம்பவில்லை. வடமாநிலத்தவர்கூட அமைதியாகத்தான் இருந்தார்கள். இதோ இப்போது ‘நீட்’ தேர்வின் வழிமுறையே தவறானது என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நோக்கமும் வழிமுறையும் தவறான ஒன்று நாட்டில் இருத்தல் தகாது. அதுவும் அரசின் சார்பில் செயல்படுதல் அதனினும் தகாது. உச்சநீதிமன்றம் உரிய தீர்வைத்தரும் என நம்புவோம்! அனிதா உள்ளிட்டோரின் உயிராயுதம் வெல்லும்!

banner

Related Stories

Related Stories